மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் : நன்றி மறந்த திமுக அரசு | மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு அரசு, நீக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் அனைவரையும் உடனே பணியில் சேர்ப்பதுடன் அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
கோவிட் காலகட்டத்தில் மருத்துவ பணிக்காக பணியமர்த்தப்பட்ட
1,800 செவிலியர்கள மற்றும் ஆய்வக நுட்புநர்கள், மருத்துவ பணியாளர்கள் திடீரென பணிநீக்கம்!
சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அவர்களை தொடர்ந்து பணியில் அமர்த்து!
பத்திரிகை செய்தி
கோவிட் காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கோவிட் 19 சுகாதார நல்வாழ்வு சங்கம் மூலம் எம்.ஆர்.பி. தேர்வு நடத்தி நூற்றுக்கணக்கானோரை தமிழக அரசு மூன்று மாத காலத்திற்கு மட்டும் தற்காலிகப் பணி என்ற அடிப்படையில் செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு எடுத்து அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.14,000 கொடுத்து வந்தது.
தற்போது மூன்று மாதம் நிறைவு அடைந்த நிலையில் பணி நிறுத்தம் செய்து ஆணை வழங்கப்பட்டது. எனினும் செவிலியர்கள் மற்றும் ஆய்வக நுட்புநர்கள் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டு மீண்டும் பணியாற்றி வந்தனர்.
தமிழக முதல்வர் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு சுகாதார கட்டமைப்பை பலப்படுத்தும் முகமாக முக்கியத்துவம் கொடுத்து படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவது குறித்து வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால், நேற்று மதியம் பணிக்கு சென்ற அந்த பணியாளர்களிடம் நீங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டீர்கள் என்று திடீரென மருத்துவ அலுவலர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான தற்காலிக மருத்துவப் பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இவர்களில் பல செவிலியர்கள் நான்கு மாத கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு கொடும் தொற்றுக் காலத்தில் பணியாற்றியவர்கள். இவர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களை காத்து அவர்களுக்கு தமிழ்நாடு அரசு செலுத்தும் நன்றிக் கடன் இதுதானா?
கொரோனா போன்ற புதிய கொடிய நோய்கள் அலைஅலையாகவும் புதிய பரிணாமம் எடுத்து இருக்கும் இந்தக் காலகட்டத்தில் மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை வேலையை விட்டு தூக்கியெறிவது என்பது மக்களுக்கான மருத்துவத்தை புறக்கணிப்பதுடன் மக்களை தனியார் மருத்துவக் கொள்ளைக்கு தள்ளிவிடுவதாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு, நீக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் அனைவரையும் உடனே பணியில் சேர்ப்பதுடன் அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
பணியிலிருந்து நீக்கப்பட்ட செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை உடனே மீண்டும் பணியில் அமர்த்து!
தற்காலிக மருத்துவ பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட படி ரூ.20,000 உடனடியாக ஊக்கத்தொகை வழங்கு!
தோழமையுடன்,
தோழர் சி. வெற்றிவேல்செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை 9962366321.