ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவதற்குத் தடையில்லை : இலண்டன் நீதிமன்றம் தீர்ப்பு
உலக மகா கிரிமினல் கும்பலான அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் கொலைகளையும், சதிகளையுயும், போர்க் குற்றங்களையும் இன்ன பிற தகிடுதத்தங்களையும் பொதுவெளியில் போட்டுடைத்தவர் ஜூலியன் அசாஞ்சே. கடந்த 2010-ம் ஆண்டு அசாஞ்சே அமெரிக்க இராணுவ, தூதரங்களின் ‘இரக்சிய’ ஆவணங்களை கைப்பற்றி பொதுவெளியில் அமெரிக்காவின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்றும், பலரது வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறார் என்றும் அவர் மீது குற்றம்சாட்டியது அமெரிக்க அரசு. அவர் மீது இரண்டு பெண்களை பாலியல் புகார் அளிக்கச் செய்து பிரிட்டனில் அவரைக் கைது செய்ய முயற்சித்தது.
அசாஞ்சேவால் வெளியான அமெரிக்க தூதரக, இராணுவ ஆவணங்களில் பல நாட்டு தலைவர்களையும் தூதரக அதிகாரிகளையும் மரியாதைக் குறைவாக பேசியதும், பல நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பின்னிய சதி வலைகளும் அம்பலமாகியது.
இந்நிலையில் ஈகுவேடார் நாட்டு அரசு, அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்தது. அன்றிலிருந்து 2019-ம் ஆண்டு ஈக்குவேடார் நாட்டு அரசு அந்நாட்டு மக்களுக்கு எதிராக செய்து வரும் நடவடிக்கைகளை பற்றி அசாஞ்சே அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து அவருக்கு அளித்து வந்த அடைக்கலத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது ஈகுவேடார்
இலண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டு தூதரகத்திற்குள் புகுந்து அசாஞ்சேவை கைது செய்து சிறையில் அடைத்தது இலண்டன் போலீசு. இந்நிலையில் அமெரிக்கா அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை இந்த ஆண்டின் துவக்கத்தில் விசாரித்த மாவட்ட நீதிமன்றம், “அமெரிக்காவுக்கு தாம் நாடு கடத்தப்பட்டால், அங்கு தாம் தற்கொலை செய்துகொள்ள நேரிடும்” என அசாஞ்சே கூறியதை கணக்கில் எடுத்துக் கொண்டு நாடுகடத்தலுக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டது.
அமெரிக்க அரசு இலண்டன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஜூலியன் அசாஞ்சேவை முறையான பாதுகாப்பின் கீழ்தான் தாம் விசாரணை செய்வோம் என்றும், அவரது தண்டனைக் காலத்தை அவர் ஆஸ்திரேலியாவில் அனுபவிக்குமாறு ஏற்பாடு செய்வோம் என்றும் அமெரிக்கா கொடுத்த வாக்குறுதியை ‘நம்பி’ நாடுகடத்த கீழமை நீதிமன்றம் விதித்த தடையை இரத்து செய்திருக்கிறது, உச்சநீதிமன்றம்.
இங்கிலாந்தின் உள்துறை செயலர் அவரை நாடு கடத்த அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்வார் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்து வரும் இங்கிலாந்து அரசு கண்டிப்பாக அசாஞ்சேவை நாடு கடத்தும் என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒன்று.
உலகின் பெரியண்ணனாக வலம் வந்த அமெரிக்காவின் அடிமடியிலேயே கைவைத்து அதன் போர்க் குற்றங்களை துணிவுடன் அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்தாதே, விடுதலை செய் எனும் முழக்கத்தை ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டும்.