வாரணாசி : அதிகரித்து வரும் காற்றுமாசு – மோடியின் தூய்மை இந்தியா !
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, அதிக காற்று மாசுபாட்டின் முக்கிய நகரங்கள் பட்டியலில் கடந்த மூன்று வருடங்களாக முன்னிலை வகிக்கிறது என்பது மொத்த இந்திய நிலைமையை பிரதிபலிக்கிறது
வாரணாசியில் PM 2.5 (நுண்ணிய துகள்கள்) மற்றும் NO2 (நைட்ரஜன் டை ஆக்சைடு) அளவுகள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) பாதுகாப்பு வரம்பை விட கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகமாகவே உள்ளது.
2021-ம் ஆண்டு வரை கடந்த மூன்று ஆண்டுகளாக நகரில் PM2.5 அளவு முறையே 96, 67 மற்றும் 61 ug/m3 ஆகிய அளவுகளாக இருந்தது. 2020-ம் ஆண்டு ஊரடங்கின் காரணமாக காற்று மாசுபாட்டின் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்துள்ளது.
காற்று மாசுபாடு மற்றும் கொள்கையை கண்காணிக்கும் தளமான NCAP–ன் பகுப்பாய்வில் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் கூறப்படுகின்றன. NCAP என்பது 2019 ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடங்கிய ‘தேசிய தூய்மையான காற்றுத் திட்டம்’ ஆகும். இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ள 122 நகரங்களில் மோடியின் தொகுதியான வாரணாசியும் ஒன்று. NCAP மூலம், 2024-க்குள் காற்றில் நுண்துகள்களின் செறிவை 20 சதவிதமாகக் குறைக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது.
புதைபடிவ எரிபொருள்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள், எரியூட்டும் ஆலைகள், கழுவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கண்ணாடி மற்றும் சிமெண்ட் உற்பத்தி நிலையங்கள், வாகன புகை உமிழ்வுகள் போன்றவற்றால் வெளியிடப்படும் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) காற்று மாசுபாட்டிற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.
NO2-க்கான WHO (உலக சுகாதார நிறுவனம்) பரிந்துரைத்த பாதுகாப்பு வரம்புகள் அதிகபட்ச தினசரி சராசரிக்கு 25 ug/m3 மற்றும் வருட சராசரிக்கு 10 ug/m3 ஆகும். நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) மற்றும் சல்பர் டை ஆக்சைடு (SO2) போன்ற முக்கிய வாயுக்கள் இரண்டாம் நிலை PM2.5-ஆக விரைவாக மாறுவதற்கு ஏற்றார்போல் இந்தியாவின் வானிலை உள்ளது. எனவே, PM2.5-ஐக் கட்டுப்படுத்த முக்கிய வாயுக்களின் உமிழ்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம். குறிப்பாக நைட்ரஜன் டை ஆக்சைடு உமிழப்படுவது பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
அதிக நெரிசல் நிறைந்த பகுதியான ஆர்டலி பஜார் வருடாந்தர NO2 சராசரி CPCB வரம்பைவிட 1.5 மடங்கு அதிகரித்துள்ளது. “ஆண்டு முழுவதும் சராசரிக்கும் அதிகமான நைட்ரஜன் டை ஆக்சைடு செறிவுகளைக் கொண்டிருப்பதற்கு அடர்த்தி கொண்ட தொழில்துறை பகுதிகள்தான் காரணம்” என்று “கார்பன் காப்பி” எனும் செய்தித் தள வெளியீட்டாளர் ஆர்த்தி கோஸ்வா கூறினார்.
கடந்த 2017-ம் ஆண்டில் BHU மற்றும் IIT டெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி வாரணாசியில் PM2.5 அளவுகள் 2001 முதல் 2015 வரை ஒவ்வொரு ஆண்டும் 1.5%-லிருந்து – 3%-வரை அதிகரித்துள்ளதைக் கண்டறிந்தனர். 2018-ல், BHU-ன் ஆய்வாளர்கள் அரிதீப் முகர்ஜி மற்றும் மதூலிக்கா அகர்வால், 2014 மற்றும் 2017-க்கு இடையில் சராசரி PM10 செறிவு சுமார் 244 μg/m3 என்ற அளவிற்கு – CPCB-ன் வரம்பைவிட நான்கு மடங்கு அளவிற்கு – அதிகமாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.
நகரத்தில் காற்றில் இந்த துகள்களின் அளவு அனுமதிக்கப்பட்ட காற்றின் தரக் கட்டுப்பாட்டு அளவை விட அதிகமான அளவில் ஒரு ஆண்டிற்கு சுமார் 87% நாட்களுக்கு இருக்கின்றன. இது ஆண்டுதோறும் 5700 அகால மரணங்களை (மக்கள் தொகையில் 0.16%) ஏற்படுத்தியுள்ளது. இதில் பக்கவாதம் 29%மும், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் 18%மும், கடுமையான கீழ் சுவாசத் தொற்று நோய் 33%மும், நுரையீரல் புற்றுநோய் 19%மும் மற்றும் மீதமுள்ள 1% இதய நோய் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, அதிக காற்று மாசுபாட்டின் முக்கிய நகரம் என்ற பட்டியலில் கடந்த மூன்று வருடங்களாக முன்னிலை. தூய்மை இந்தியா எப்படி இருக்கும் என்பதற்கு வாரணாசியே ஓர் சான்று.
பாசிச மோடி அரசின் சேவை என்பது, கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையை உறுதிப்படுத்தவே அன்றி, இந்திய மக்களின் சுகாதார நலனை மையப்படுத்தியது அல்ல என்பதற்கு வாரணாசியின் காற்று மாசுபாடே சான்று.