த்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள மன்வார் தாலுக்காவில் ‘சௌர்ய யாத்திரை’யின் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் இந்துத்துவ குண்டர்கள் நுழைய முயன்றபோது இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் புகார் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் முஸ்லீம்களை மட்டுமே போலீசு கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு முஸ்லீம் நபரின் வீட்டை, கட்டிட அனுமதி இல்லாததைக் காரணம் காட்டி இடித்து தள்ளியுள்ளது போலீசு.
கடந்த டிசம்பர் 23,2021 அன்று இந்துத்துவா குண்டர்கள் ‘சௌர்ய யாத்ரா’ (துணிச்சல் பேரணி) நடத்தினார்கள். முஸ்லீம் மக்கள் வாழும் காந்தி நகர் பகுதிக்குள் நுழைய முயற்சித்தனர். அவர்களை போலீசு தடுத்து நிறுத்தியபோது இந்துகளுக்கும் முஸ்லீம்களுக்கு இடையே வன்முறை நடப்பதுபோல் வதந்திகள் பரவியது.
படிக்க :
அடுத்த ஜிகாத் : முசுலீம் தெரு வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் || அலிசன் ஜாஃப்ரி
தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !
அதனைத் தொடர்ந்து காந்தி நகர் பகுதியில் இந்துத்துவ குண்டர்கள் பேரணி சென்ற சில நிமிடங்களுக்குப் பிறகு அந்நகரின் சிந்தனா சாலை மற்றும் நாலா பிரங்கன் ஆகிய இடங்களில் இந்துத்துவ குண்டர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் துவங்கியது.
இதேபோன்ற மோதல் சம்பவம், ஏற்கெனவே 2016-ம் ஆண்டும் இந்த பகுதியில் நடந்துள்ளது. ஜனவரி 12, 2016 அன்று மனவார் நகரில் விஸ்வ இந்து பரிஷத்தின் ‘சௌர்ய யாத்திரை’யின்போது வகுப்புவாத வன்முறை வெடித்தது. நிலைமையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போட்டது. அப்போது முஸ்லீம் சிறுபான்மை சமூகத்தினருக்கு சொந்தமான பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கடைகள் விஎச்பி குண்டர்களால் எரிக்கப்பட்டன.
தற்போது, டிசம்பர் 23 அன்று நடைபெற்ற காந்திநகர் வன்முறையில், “பேரணியில் செல்லும்போது இந்துத்துவ குண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட உட்கட்சி சண்டை மற்றும் பேரணிக்கு செல்ல சொன்ன வழியை திசைத்திரும்பும் இந்துத்துவ குண்டர்களை போலீசு தடுத்து நிறுத்தியதால் வன்முறை என்ற வதந்தி பரவியது போன்றவை இருத்தரப்பினரிடையே வன்முறையும் குழப்பமும் உருவாக காரணங்களாக அமைந்தன. சிந்தனா சாலை மற்றும் நாலா பிரங்கள் ஆகிய இடங்களில் கல் வீச்சு சம்பவம் பதிவாகியுள்ளது” என்று தார் போலீசு கண்காணிப்பாளர் ஆதித்ய பிரதாப் சிங் கூறினார்.
பஜ்ரங்தள் உறுப்பினர் பங்கஜ் குஷ்வஹா (36) என்பவரின் புகாரின் பேரில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 1984 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 30 பேர் மற்றும் பெயரிடப்பட்டத 22 பேர் மீது தார் போலீசு மூன்று எஃப.ஐ.ஆர்களைப் பதிவு செய்துள்ளது. வழக்கு பதிவுசெய்யப்பட்டதில் அதிகமானவர்கள் முஸ்லீம் மக்கள்.

சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, 55 வயதான கலீல் காத்ரியின் 45 இலட்சத்திற்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட மூன்று மாடி கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் தரைமட்டமாக்கியது. இதற்கு காரணங்களாக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேரை காத்ரி வீட்டில் தங்க வைத்திருந்ததாகவும், நோட்டீஸ் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் கட்டிட அனுமதியை வழங்க உரிமையாளர் தவறிவிட்டதாகவும் போலீசார் கூறிள்ளனர்.
“வன்முறையில் ஈடுபட்ட மூன்று பேர் என் வீட்டில் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டிதான் என் வீட்டை இடித்தார்கள். ஆனால் இந்த வன்முறைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் வீட்டிற்கான அனுமதி சான்று காட்டவில்லை என்று கூறி என் வீட்டை இடித்துவிட்டார்கள். ஆனால் என் வீட்டிற்கு அருகில் உள்ள எந்த வீடுகளுக்கு அனுமதி சான்று கிடையாது.” என்றார் காத்ரி. மேலும் “கூடுதல் எஸ்பி மற்றும் சப்-டிவிஷன்ல் மஜிஸ்திரேட் முன்பு நான் கெஞ்சினேன். விட்டை இடிப்பதை நிறுத்துமாறு கேட்டேன், தேவையான அனுமதி சான்றை எடுப்பதாக உறுதியளித்தேன். ஆனல், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தததாக என் மீது குற்றம் சாட்டினார்கள்” என்று கூறினார்.
வீட்டை இடித்த ஒரு நாளுக்கு பிறகு வாடகைக்கு இருந்தவர்களின் விவரங்களைக் கேட்டு, காத்ரி மற்றும் அவரது 30 வயது மகன் காலித்தை போலீசு நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். “அவர்கள் என்னை நள்ளிரவு 12:30 மணியளவில் விடுவித்தனர். ஆனால் என் மகன் இன்னும் காவலில் இருக்கிறான்” என்று காத்ரி கூறினார். நான் ஒரு முஸ்லீம் என்பதால் தான் எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது என்று வேதனையுடன் கூறினார்.
கட்டிடத்தை இடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷிவாங்கி ஜோஷி “அமைதியை சீர்குலைக்க முயன்ற சமூக விரோதிகளுக்கு இந்த கட்டிடம் இடிப்பு ஒரு எச்சரிக்கை. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொண்ட பிறகு இதே நடைமுறையைத் தொடருவோம்” என்றார். இது அப்பட்டமான பாசிச மிரட்டல்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 24 அன்று ம.பி சேதம் மீட்பு மசோதா 2021-ஐ நிறைவேற்றியுள்ளது, பாசிச பாஜக அரசு. சட்டசபை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா “நான் முன்பே கூறியது போல், தங்கள் வீடுகளில் இருந்து கற்களை வீசி எறிந்து பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள் வருவார்கள். அவர்கள் யாரும் விடுபட மாட்டார்கள். சமூக விரோதிகள் மற்றும் கலவரம் செய்பவர்கள் சட்டத்தை கண்டு அஞ்ச வேண்டும் என்பதற்காகவும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.” என்றார்.
பேரணி, யாத்திரை என்ற பெயரில் முஸ்லீம் சிறுபாமையினர் வாழும் பகுதிகளில் கலவரம் செய்யும் நோக்குடன் செயல்படும் இந்துத்துவ காவி குண்டர்கள், தற்போது தார் மாவட்டத்தின் காந்தி நகர் பகுதியில் இது போன்ற கலவரத்தை தூண்ட முற்பட்டுள்ளனர். வன்முறை சம்பவத்தில் முஸ்லீம்களை மட்டும் குறிவைத்து வழக்கு போட்டுள்ள காவி போலீசு படை ஒரு முஸ்லீம் வீட்டையே காவி குண்டர்களை போல் ஆனால் சட்டப்பூர்வமாக இடித்து தரை மட்டமாக்கியுள்ளது.
புதிய மசோதாவும், போலீசின் இந்த வீட்டை இடிக்கும் நடவடிக்கையும் மத்திய பிரதேச அரசு கட்டமைப்பே பாசிச கும்பலாக மாறி வருகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க