கொரோனா தொற்று : பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலேயே கொல்லாதே!
85 வயதான ஸ்டேன் சாமியை சிறையில் அடைத்து கொன்றதுபோல 90% உடல் ஊனமுற்ற, இதயநோயால் பாதிக்கப்பட்ட சாய்பாபாவை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருக்கிறது மோடி அரசு.
கொரோனா நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளான பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலேயே கொல்லாதே ! விடுதலை செய் !
பத்திரிகை செய்தி
2017-ம் ஆண்டு, மாவோயிஸ்டுகளோடு தொடர்பில் இருந்தார் என்ற பொய்வழக்கில் ஊபா வழக்கில் கைது செய்யப்பட்டு நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் டெல்லி பல்கலை கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபா கொரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்.
90% உடல் ஊனமுற்ற சாய்பாபா ஏற்கனவே ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமாகாத நிலையில் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிறை நிர்வாகம் இப்போதுவரை அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கவில்லை. மேலும், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்திற்கும் முறையாக சிறை நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை.
ஜனவரி 10-ம் தேதியன்று பேராசிரியர் சாய்பாபாபாவின் மனைவி வசந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், சாய்பாபாவை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு உடனே கொண்டு சேர்க்குமாறு தெரிவித்துள்ளார். ஏற்கனவே தொடர்ச்சியான முதுகுவலி, இடுப்புவலி காரணமாக இரவு நேரங்களில் தூங்க முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் சாய்பாபா, கொரோனாவில் இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
மென்மேலும் அவரது உடல்நிலை மோசமாகி வரும் நிலையில் இதயநோய் உள்ள சாய்பாபா, கொரோனா தொற்றும் சேர்ந்துள்ள நிலையை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று சாய்பாபாவின் மனைவி வசந்தா அச்சம் தெரிவித்துள்ளார். அவரை உடனடியாக சிறையிலிருந்து மருத்துவனையில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஏற்கனவே தனக்கு மருந்து மாத்திரைகள், படிக்க புத்தகங்கள் கொடுக்கப்படாததை கண்டித்து சிறையில் உண்ணாவிரதம் இருந்தார் பேராசிரியர் சாய்பாபா. 85 வயதான ஸ்டேன் சாமியை மோடி அரசு சிறையில் அடைத்து கொன்றதுபோல 90% உடல் ஊனமுற்ற, இதயநோயால் பாதிக்கப்பட்ட முதியவரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருக்கிறது மோடி அரசு.
மோடி அரசின் பாசிசத் திட்டங்களை எதிர்த்து எழுதியும் போராடியும் வந்தவர்களை ஈவிரக்கமற்ற முறையில் பழிவாங்கும் வெறியோடு செயல்பட்டு வருகிறது.
பஞ்சாபிற்கு சென்றபோது தனது பயணம் விவசாயிகள் போராட்டத்தால் தடைபட்டது குறித்து நாட்டுக்கே பேராபத்து வந்ததுபோல் கூச்சல்போடும் அரசு எந்திரம், சிறையில் அடைக்கப்பட்ட போராளிகளின் மனித உரிமை மீறலுக்கு உள்ளாவது குறித்து இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டு சமூக அநீதிகளுக்கு எதிராக போராடியவர்களை சிறையில் தள்ளியது மட்டுமின்றி இரக்கமற்ற முறையில் தனது பாசிச நடவடிக்கையை அமல்படுத்தி வருகிறது.
இதற்கெதிராக ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகளின் தொடர் போராட்டம் நடத்துவதன் மூலமே பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட சமூக சிந்தனையாளர்கள், போராளிகளின் மனித உரிமைகளையும் அவர்களின் உயிர்களையும் காப்பாற்ற முடியும்.
தோழமையுடன், தோழர் முத்துக்குமார்,
தலைமைகுழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை. 99623 66321.