விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகிய இரண்டு இந்துமதவெறி அமைப்புகளை சேர்ந்தவர்கள் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியின் கங்கை நதி படித்துறைகளைச் சுற்றி சுவரொட்டிகளை ஒட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். சுவரொட்டிகளில் ‘இது ஒரு எச்சரிக்கை ; கோரிக்கை அல்ல’ என்று எழுதப்பட்டிருந்தது.
பஞ்ச் காங்கா காட், ராம் காட், தஷாஷ்வாமேத் காட், ஆசி காட், மணிகர்னிகா காட் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கங்கை ஆற்றின் படித்துறைகளின் ஒட்டப்பட்ட இச்சுவரொட்டிகள் சமீபத்தில் மோடி திறந்து வைத்த காசி விஸ்வநாத் கோவில் நடைபாதையில் ஒட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதேபோன்று நகரின் பல்வேறு இந்து கோயில்களைச் சுற்றியும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வாரணாசியின் விஷ்வ இந்து பரிஷத் செயலாளர் ராஜன் குப்தா, “இந்த சுவரொட்டிகள் ஒரு கோரிக்கை அல்ல, மாறாக சனாதன தர்மத்தை பின்பற்றாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. கங்கை நதியின் படித்துறைகளும் காசியை சுற்றியுள்ள கோயில்களும் இந்து மதம் மற்றும் இந்து கலாச்சாரத்தின் சின்னங்கள். இங்கு இந்துமதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மட்டுமே வரவேற்கப்படுவார்கள்; நம்பிக்கை இல்லாதவர்களை எங்கள் புனித இடத்திலிருந்து வெளியேற்றுவோம்” என்று வீடியோவில் கூறினார்.
வாரணாசியின் பஜ்ரங் தள் ஒருங்கிணைப்பாளர் நிகில் திரிபாதி, “கங்கை நதி எங்கள் தாய்; இது சுற்றுலா தலம் அல்ல. கங்கையை சுற்றுலா தலமாக கருதுபவர்கள் இங்கு வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று வீடியோவில் கூறினார்.
கடந்த ஜனவரி 9-ம் தேதியன்று மதவெறி சுவரொட்டிகளை ஒட்டியதாக ஐந்து பேர் மீது வாரணாசி போலீசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. வீடியோவில் இந்துமதவெறியுடன் பேசும் ராஜன் குப்தா மற்றும் நிகில் திரிபாதி ஆகிய இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது பேலுபூர் போலீசு. ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யாமல் இந்துமதவெறியர்கள் மீதான தங்களின் விசுவாசத்தை காட்டி வருகிறது உ.பி-யின் காவி போலீசுத்துறை. இதற்கிடையில் இருவரையும் தங்கள் அமைப்பிலிருந்து நீக்கிவிட்டதாக விஷ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கையே இச்செயல்கள் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. உள்ளூர் காங்கிரஸ் தலைவரான ரக்வேந்திர சௌபே “இந்துத்துவ சக்திகளின் இந்த விஷமத்தனமான செயல்கள் குறித்து எனது கட்சி போலீசில் புகார் அளித்துள்ளது” என்றார்.
மூத்த பத்திரிகையாளர் விஜய் வினீத் “அரசியல் ஆதாயத்திற்காக மதத்தின் பெயரால் வாரணாசியை எவ்வாறு பிளவுபடுத்த முடியும்? கங்கை நதியும், அதன் படித்துறைகளும் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஒருபோதும் சொந்தமானவை அல்ல. இந்த தேர்தலில் உ.பி.யின் கிழக்கு பகுதியில் பாஜக-விற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரங்கள் மூலம் அங்குள்ள மக்களை பிளவுப்படுத்த முயற்சிக்கிறது” என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்து மதவெறியர்கள் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களைப் பிளவுபடுத்த முயன்று வருகின்றனர். மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பாஜக கட்சியின் தலைவர்கள் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை ஆதரிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மீண்டும் ஓர் முசாபர் நகர் கலவரத்தை உருவாக்கி உத்தரப் பிரதேசத்தில் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது, பாசிச பாஜக என்பதற்கு கங்கை நதியின் படித்துறைகளில் இந்துமதவெறியார்களால் ஒட்டப்பட்டிருக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான இந்த வெறுப்பு பிரச்சார சுவரொட்டிகள் ஓர் துலக்கமான சான்று.