குழந்தைத் திருமண தடுப்பு மசோதா : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின்னுள்ள நோக்கம்!
ஜெயா ஜெட்லி குழு ஆய்வுசெய்து அளித்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் இரகசியமாக அமுக்கிய மோடி அரசு, எந்தவிதமான அறிவியல்பூர்வமான வாதமும் இல்லாமல் இம்மசோதாவைக் கொண்டுவந்துள்ளது
குழந்தைத் திருமண தடுப்பு (திருத்த) மசோதா 2021 : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின் ஒளிந்திருக்கும் பாசிச நோக்கம் !
பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 வயதாக அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதாவை நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
“ஜனநாயக நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவதில் 75 ஆண்டுகள் தாமதித்துவிட்டோம். இந்த சட்டத்திருத்ததின் மூலம் சமத்துவ உரிமையை மனதில் கொண்டு ஆண்களும் பெண்களும் 21 வயதில் திருமணம் குறித்து முடிவெடுக்க முடியும். பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதால் அவர்களது பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும். அது குடும்பம், சமூகம், குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று இம்மசோதாவை அறிமுகப்படுத்தி பேசினார் அமைச்சர் ஸ்மிருதி இராணி.
பெண்களின் கல்வி, பொருளாதார நலன் ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு பாஜகவை ஆதரிக்காத சில பிரிவினரே இந்தச் சட்டத்தினை ஆதரித்துப் பேசிவருகின்றனர். வெறுமனே கல்வி பொருளாதாரம் என்று மட்டும் சுருக்கிப் பார்க்காமல் இங்கு நிலவும் சமூகப் பொருளாதார நிலைமைகள் மற்றும் பாசிஸ்ட்டுகளின் நீண்டகால நோக்கம் ஆகியவற்றையும் உள்ளடக்கியே இந்தச் சட்டத்தை பார்க்க முடியும். இந்தியப் பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆரோக்கியம், பெண்ணுரிமை-சமத்துவம் பற்றியெல்லாம் தேனொழுகப் பேசும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் யோக்கியதை என்னவென்பதை அவர்களின் ஆட்சியில் பெண்களுக்காக மேற்கொண்ட திட்டங்களை ஆராய்ந்தால் விளங்கும்.
000
இந்திய ஒன்றிய அரசின் 2021-22-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு கடந்த ஆண்டை விட 18.6 சதவீதம் குறைவாகத்தான் இந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு ஒதுக்கிய ரூ.30,007.1 கோடியிலிருந்து குறைத்து ரூ24,435 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரது ஊட்டத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்காக அங்கன்வாடிகள் மூலம் செயல்படுத்தப்படும் ‘போஷான் 2.0’ என்ற திட்டத்தை கடந்த 2021-22 ஆண்டு பட்ஜெட்டின் போது படாடோபமாக அறிவித்தார் நிர்மலா சீதாராமன். ஆனால், கடந்த ஆண்டு ஒதுக்கிய 3,700 கோடியைவிட 27% குறைவாகத்தான் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
2015-ல் பெண் குழந்தைகளின் கல்விக்காக மோடியால் கவர்ச்சிகரமாக அறிவிக்கப்பட்டது “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” எனும் திட்டம். 2016-19 ஆகிய மூன்றாண்டுகளில் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 80 சதவிகிதம் இத்திட்டம் பற்றிய ஊடக விளம்பரத்திற்கு மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.
இம்மசோதாவைக் கொண்டுவரும் முன்பே, 2020 ஜூன் மாதத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவதைக் குறித்து ஆராய்வதற்காக சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது பா.ஜ.க. அரசு. அக்குழுவிடம் 96 சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த கூட்டமைப்பினர் பதினைந்து மாநிலங்களைச் சேர்ந்த 2,500 இளைஞர்களிடம் கருத்து கேட்டு அக்குழுவிடம் மனுவாக சமர்ப்பித்தது.
அதில், “திருமண வயதை உயர்த்துவது பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை ஒருபோதும் மேம்படுத்தாது. எங்கள் குடியிருப்புக்கு அருகில் பாதுகாப்பான, தரமான இலவசக் கல்வி கிடைப்பதை அது உறுதிசெய்யாது. இது இளையோரின் மீது அழுத்தத்தையும் வன்முறையையும் அவர்களைக் குற்றவாளியாக்கும் போக்கையும் அதிகரிக்கச் செய்யும். பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை, அவர்கள் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகளை அது வழங்கப்போவதில்லை. இப்படி திருமண வயதை உயர்த்துவதைக் காட்டிலும் தரமான, சமமான, இலவசக் கல்வியை வழங்க வேண்டும். போதிய வருமானம் ஈட்டக் கூடிய பாதுகாப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இம்மனு உட்பட அக்குழு சேகரித்த, ஆய்வுசெய்த எந்த அறிக்கையும் பொதுவெளியில் வெளியிடாமல் இரகசியமாக அமுக்கிய மோடி அரசு, எந்தவிதமான அறிவியல்பூர்வமான வாதமும் இல்லாமல் இச்சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. எனவே, இந்தியப் பெண்களின் மீது மோடி அரசிற்கு திடீரென்று பொங்கி வழியும் இந்த அக்கறையின் பின்னே பாசிச பா.ஜ.க.விற்கு வேறு நோக்கம் இருக்கிறது.
000
இச்சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, “இந்த சட்டம் மதசார்பற்றது. இந்து திருமணச் சட்டம் அல்லது முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்கீழ் வருகிற அனைத்து மதங்களைச் சேர்ந்த பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் சம உரிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது” என்று பேசிய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தன்னுடைய வாதத்திலேயே இச்சட்டத்தின் உண்மை நோக்கத்தை தெரிவித்திருக்கிறார்.
நாட்டிலுள்ள அனைத்து மதத்தவருக்கும் வேறுபட்ட தனிநபர் சட்டங்கள் இருக்கக் கூடாது. ஒரே பொது சிவில் சட்டமாகக் கொண்டுவரவேண்டும் என்பது பா.ஜ.க. அரசின் நீண்ட நாளைய பிரச்சாரம். சிறுபான்மை மக்களின் மதரீதியான தனியுரிமையை ஒடுக்கவும் ‘ஒரே நாடு, ஒரே பண்பாடு’ என்ற தனது இந்துராஷ்டிர வரையறையை சட்டப் பூர்வமாக்கும் வழிமுறையாகவுமே இப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விட்டது பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பல். பொது சிவில் சட்டம், புரட்சிகர – ஜனநாயக சக்திகளால் மிகக் கடுமையாக எதிர்க்கப்பட்டது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்” என்று தனது 2019 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் பா.ஜ.க. கூறியிருந்தது. தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைக்குழுவுக்கு அனுப்பட்டுள்ள ‘குழந்தை திருமணத் தடுப்பு (திருத்த) மசோதா 2021’ பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக பா.ஜ.க. எடுத்துவைத்துள்ள முதல் அடி தான். குறிப்பாக, முசுலீம் மக்களுக்கு எதிரான நோக்கத்துடனேயே இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு மதப் பிரிவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மத ஒழுக்கத்தை கடைபிடிப்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. அவர்களுக்கென தனிநபர் சட்டங்கள் உள்ளன. சான்றாக, முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை ஒரு பெண் பூப்பெய்தும் வயதுதான் அவளது திருமண வயது. பொதுவாக பெண்ணின் வயது 18 என்ற விதி அவர்களை கட்டுப்படுத்தாது. தற்போது ஸ்மிருதி இராணி சொல்வது போல, அனைத்து மதப் பெண்களுக்குமாக கொண்டுவரப்பட்டுள்ள இம்மசோதாவின் படி, 21 வயதிற்கு கீழேயுள்ள ஒரு இசுலாமியப் பெண்ணை திருமணம் முடித்துக் கொடுத்தால் அது தண்டனைக்குரிய குற்றம்.
“ஒரு முசுலீம் நான்கு மனைவியை வைத்துக் கொள்கிறான். நினைத்த நேரத்தில் ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்கிறான். வதவதவென பிள்ளைக்களை பெற்றெடுத்து தங்கள் மதத்தவரின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்கிறான். இந்துக்கள் சிறுபான்மையாகிறார்கள். இந்துப் பெண்களை ஏமாற்றி லவ் ஜிகாத்தில் ஈடுபடுகிறார்கள். முசுலீம்கள் தேசத்திற்கு எதிரானவர்கள், தீவிரவாதிகள்” – என பெரும்பான்மை மக்களிடம் வெறுப்புணர்வை ஊட்டி முசுலீம்களுக்கு எதிரானதொரு ‘இந்து ஒற்றுமையை’ உருவாக்குவதன் மூலம் தங்கள் பாசிச ஆட்சிக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். இதைப் போன்ற பிரச்சாரங்களை முன்வைத்துதான் நாடு முழுக்க முசுலீம்களுக்கு எதிராக பல்வேறு மதக் கலவரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முத்தலாக் தடைச் சட்டம், சி.ஏ.ஏ – என்.ஆர்.சி, ஆகியவற்றின் வரிசையில் முசுலீம்களை குறிவைத்து ஒடுக்குவதற்காகவும் ‘ஒரே நாடு, ஒரே பண்பாடு’ என்ற அடிப்படையில் ஒரு பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்குமான முயற்சியே பாசிச பா.ஜ.க.வின் இச்சட்டத் திருத்த மசோதா என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களின் திட்டத்திற்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒருசேர எதிர்த்து நிற்க வேண்டும்.