துநாள் வரை, ‘இந்தியக் குடியரசில்’ இருப்பதாக காட்டிக்கொண்ட பெயரளவிலான மதச் சார்பின்மை, மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை போன்ற கோட்பாடுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டுவிட்டது.
இனிமேல் இந்த அரசை ‘இந்தியக் குடியரசு’ என்று அழைக்கத் தேவையில்லை, இந்து ராஷ்டிரக் குடியரசு என்றே அழைக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு மொத்த அரசுக் கட்டமைப்பையும் காவிமயமாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இதற்கு தற்போது நடைபெற்று முடிந்துள்ள ‘குடியரசு’ தின நிகழ்ச்சிகளே சாட்சியம்!
வழக்கமாக டெல்லியில் நடைபெறும் ‘குடியரசு’ தின அணிவகுப்பில், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார வாகனங்களும் பங்குபெறும். நாட்டின் பன்முக கலாச்சாரம், வரலாற்றை பிரதிபளிக்கச் செய்வதே இதன் நோக்கம்.
படிக்க :
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2022 || அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் வெளியீடுகள் : கொரோனா || காவி கார்ப்பரேட் பாசிசம்
மோடி ஆட்சியின் கீழ், இந்த ஆண்டு நடைபெற்ற 73-வது குடியரசு தின அணிவகுப்பிலோ மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெறும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார வாகனங்களே அனுமதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் பெரும்பாலனவை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களுடையது.
தென்னிந்தியாவில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் நுழைவாயிலாக உள்ள கர்நாடகத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்த்தியை, மத்திய அரசின் தேர்வர் குழு கீழ்த்தரமான பல காரணங்களைச் சொல்லி புறக்கணித்தது.
முதன்மையாக, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யை ஊர்தியின் முகப்பிலே வைத்த காரணத்தால்தான் நிராகரிக்கப்பட்டுள்ளது. “வ.உ.சி. ஒரு வணிகர்தானே. அவரை எப்படி விடுதலைப் போராளியாக கருதுவது?” என்று தேர்வர் குழு கருத்து தெரிவித்ததாம். ஆனால் பாரதி சிலையை ஏற்றுக் கொண்டார்களாம். பாரதி வெள்ளையனை எதிர்த்து ஆயுதமேந்திய கதை நமக்குத்தான் தெரியவில்லை.
மற்றபடி, “சுதேசியமே, சுயராஜ்ஜியத்தின் பாதை” என்று போராடிய வ.உ.சி.யை, நாட்டை அந்நியனுக்கு கூட்டிக் கொடுக்கும் மறுகாலனியாக்க எட்டப்பர்கள் வெறுப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.
இதே போல கேரளாவில், பார்ப்பன மதத்தை நிறுவனமயப்படுத்திய ஆதி சங்கரனை சேர்க்காததால், சாதி எதிர்ப்பு சீர்த்திருத்தவாதி நாராயண குரு இடம்பெற்ற ஊர்த்தியை தேர்வர் குழு ஏற்கவில்லை.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதால் மட்டுல்ல. தங்களது காவி-கார்ப்பரேட் சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள காரணத்தால்தான் இவை முதன்மையாக நிராகரிக்கப்பட்டன. காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலமாக இருந்தாலும் “கோதான் நியாய் யோஜனா” என்ற பெயரில் கோமாதாவின் (பசு) பயன்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட சதீஷ்கர் ஊர்திக்கு அனுமதியளிக்கப்பட்டது, அதற்குச் சான்று.
உத்தரப் பிரதேச அரசின் ஊர்தியில் காசி விசுவநாதர் கோயிலும் கர்நாடக அரசின் ஊர்தியில் அனுமனும் இடம்பெற்றிருந்தது, ‘குடியரசு’ தின அணிவகுப்பை கோயில் திருவிழாவைப் போல காட்சிப்படுத்தியது. தங்களது சித்தாந்தத்திற்கு உகந்தவைகளை காட்சிப்படுத்தியதும் தொந்தரவானதை நிராகரித்ததும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் அராஜகச் செயல் என்று சுருக்கிப் பார்க்க முடியாது.
இது பல்தேசிய இனங்களின் தனித்த பண்பாடு, வரலாற்று அடையாளங்களை துடைத்தொழித்து இந்தியாவை “ஒரே நாடு, ஒரே பண்பாடு” என்ற அடிப்படையில், இந்து ராஷ்டிரமாக கட்டியமைக்க முயலுவதன் வெளிப்பாடு. தேசிய இனங்களுக்கு செலுத்தபட்ட அவமரியாதை!
புதிய ஜனநாயகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க