தில்லையில் தொடரும் தீட்சிதர் ஆதிக்கம் : தன்மானத் தமிழன் இனியும் சகிக்க மாட்டான் !
சிவனை நம்பிச் சென்ற நந்தனாரும் வள்ளலாரும் பார்ப்பன கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டனர் என்பதுதான் வரலாறு. அவர்களிடமிருந்து தப்பித்த ஒரே நபர் சிவனடியார் ஆறுமுகசாமி மட்டும்தான். ஏனெனில், சிவனடியாரை சிவன் காப்பாற்றவில்லை, சிகப்புதான் காப்பாற்றியது.
“சிறீரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ?” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தமிழனையும் தமிழையும் தீண்டாமை எனும் இழிவை சுமக்க வைக்கும் பார்ப்பனிய – சனாதனம் உச்சிமீது வைத்து பாதுகாக்கப்படுவது இந்த இரண்டு கோயில்களில்தான் என்ற ஆத்திரத்தின் – சுயமரியாதை உணர்ச்சியின் வெளிப்பாடு அது.
சென்ற மாதம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜெயசீலா என்ற சிவபக்தர் சிற்றம்பலத்தில் ஏறி நடராஜரை வழிபட முயன்றபோது, அங்கிருந்த தீட்சித பார்ப்பனர்கள் கும்பலாகச் சூழந்து கொண்டு அவரை அடிக்க முயன்றதோடு, “பறைச்சி” என்று சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தியும் உள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து புரட்சிகர அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் தீட்சிதர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். தி.மு.க. அரசு சாதி சொல்லி திட்டியதற்காக தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து தனது கடமையை முடித்துக் கொண்டது. ஆனால், தில்லை சிற்றம்பல மேடை ஏறி வழிபடுவதற்கும் அங்கு தமிழ் பாடுவதற்கும் போராடுகின்ற ஜனநாயக சக்திகளைத் தடுப்பது மட்டுமின்றி, கைது செய்தும் வருகிறது.
அரியலூர் மாணவி லாவண்யா விசயத்தில், பொய்யாக செய்தியைப் பரப்பி இந்துமதவெறியூட்ட போராடிய பா.ஜ.க. உள்ளிட்ட சங்கப் பரிவார கும்பல்கள், தில்லையில் தமிழில்பாடச் சென்ற சிவபக்தருக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அவர்களின் உயிர்நாடியே தமிழ் விரோத, பார்ப்பன சாதி மேலாதிக்க மனோபவம்தான் என்பதை இச்சம்பவமும் அம்பலப்படுத்தியுள்ளது.
புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் நிலைநாட்டப்பட்ட, சிற்றம்பல மேடையிலேறி தமிழில் பாடும் உரிமையை தடுப்பதற்காக தீட்சிதர்கள் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில், கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி பக்தர்கள் சிற்றம்பல மேடை ஏறுவதற்கு தடைவிதித்தது தீட்சிதர் கும்பல். இதையே சாக்காக வைத்து, தனது பார்ப்பன மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில், தீட்சிதர்களைத் தவிர வேறு யாரும் சிற்றம்பல மேடை ஏறி வழிபடக்கூடாது என ஒரு விதியை வகுத்து தொடர்ந்து செயல்படுத்தியுள்ளனர்.
தற்போது ஜெயசீலாவின் போராட்டம் காரணமாக அனைத்து சாதியினரையும் திருச்சிற்றம்பல மேடை ஏற அனுமதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தீட்சிதப் பார்ப்பனர்கள், இது ‘அரசியல்வாதிகளின் சதி’ என்று மறைமுகமாக புரட்சிகர அமைப்புகள்மீது பழி சுமத்துகின்றனர்.
பாபர் மசூதி ராமனுக்கு சொந்தமாம், தில்லைக் கோயில் தீட்சிதர்க்கு சொந்தமாம்!
40 ஏக்கர் பரப்பளவில் திசைக்கு ஒருகோபுரமாக நான்கு கோபுரங்களும் ஐந்து சபைகளையும்கொண்டது சிதம்பரம் நடராஜர் கோயில். இக்கோயில், சுமார் 2,700 ஏக்கர் நிலம்; பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் என பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டதாகும். அனைத்தையும் மொத்தமாக திருடி வைத்துள்ளது இந்த தீட்சிதப் பார்ப்பன கும்பல்.
கி.பி. பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயில் தமிழர் – திராவிடக் கட்டிடக் கலையிலானது. சோழர், பல்லவர், விஜயநகரப் பேரரசுகளால் புனரமைக்கப்பட்டு வந்ததையும் மன்னர்களின் மானியங்களை பெற்றதையும் இக்கோயில் வரலாற்றில் அறியமுடியும். இவ்வாறு மன்னர்களால் தமிழ் மக்களிடம் இருந்து கட்டாயமாக வரிவசூல் செய்யப்பட்ட பணத்தை வைத்துக் கட்டப்பட்ட, புனரமைக்கப்பட்ட இந்த தில்லைக்கோயில் தீட்சிதப் பார்ப்பனர்களின் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு புரட்சிகர அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்ட தில்லைக் கோயில் மீட்பு பொதுக்கூட்டம்.
தில்லையில் தமிழ் பாடும் உரிமைக்காக புரட்சிகர அமைப்புகள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் பல போராட்டங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, தில்லை நடராசர் கோயிலை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்த அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதாரம் தீட்சிதர்கள் சொல்லிய கதை.
முன்னொரு காலத்தில், கைலாயத்திலிருந்து 3,000 தீட்சிதர்கள் சிதம்பரத்திற்கு வந்ததார்களாம். வந்து எண்ணிப்பார்க்கும்போது, எண்ணிக்கையில் ஒருவர் மட்டும் காணோமாம். தீட்சிதர்கள் எல்லோரும் குழம்பி நிற்கையில், அந்த சிவபெருமானே “மீதம் உள்ள ஒருவர் நான்தான்” என்று கூறினாராம் – இந்த புருடா கதையை ஏற்று நடராஜர் கோயில் தீட்சிதர்களின் சொத்துதான் என அங்கீகரித்ததுள்ளது உச்சநீதிமன்றம்.
தேவாரம், திருவாசகம் போன்ற புகழ் பெற்ற சைவ இலக்கியங்களில் “தீட்சிதர்” என்ற ஒரு சொல்கூட இல்லை; இக்கோயிலை தீட்சிதர்களோ அவரது வாரிசுகளோ கோயிலை கட்டியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனினும், தீட்சிதர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தமிழரின் சொத்தான தில்லைகோயிலை தீட்சிதர்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்துள்ளது உச்சிக்குடுமி மன்றம். பாபர் மசூதியை ராமனுக்கு தாரை வார்த்தது போல.
திருட்டு தீட்சிதன் புகழ் போற்றி போற்றி !
“நானும் தீட்சிதன்” என்று சிவன் கூறியதிலிருந்து, பட்டாச்சார்யர்களுக்கும் சிவாச்சார்யர்களுக்கும் இல்லாத பெருமை தங்களுக்கு உண்டு என்று தில்லை தீட்சிதர்கள் கூறிக்கொள்கின்றனர். அதனாலேயே, எல்லாவித அக்கிரமங்களையும் பகிரங்கமாகவும் துணிச்சலாகவும் செய்துவருகிறார்கள் தீட்சிதர்கள்.
கடந்த ஆண்டு கோயில் தரிசனத்துக்கு வந்த ஒரு வன்னியர் சாதியைச் சேர்ந்த பெண்ணை அடித்தான் ஒரு தீட்சிதன். கடந்த மாதம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஜெயசீலாவையும் அடிக்க முனைந்துள்ளது தீட்சிதர் கும்பல். அவர்களைப் பொருத்தவரை சூத்திர, பஞ்சமர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும், உரிமை என்று கேட்டால் அடிதான் விழும்.
கோயிலினுள்ளே கறி தின்னுவது, பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, பக்தர்களை தாக்குவது போன்ற செயல்கள் எல்லாம் தில்லை கோயில் தீட்சிதர்களுக்கு சர்வ சாதாரணம். சைக்கிள் திருடி போலிசிடம் பிடிபட்ட தீட்சிதர்; தட்சணையை பிரிப்பதில் கொல்லப்பட்ட தீட்சிதர்; கே.ஆடூர் செல்வராஜை கொன்ற தீட்சிதர்கள், நிலத்தரகர் ராயரை கொன்ற தீட்சிதர்கள் என இருக்கும் 400 பேரும் கிரிமினல்கள்தான். அதனால்தான் 2000-ஆம் ஆண்டில் சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கிய தீட்சிதர்கள்மீது வழக்கு பதிவு செய்யவே 55 நாட்கள் ஆனது. அவ்வழக்கில் அத்தனை தீட்சிதர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். ஜெயசீலா வழக்கிலும் இந்த தீட்சிதப் பார்ப்பனர்கள் நிச்சயம் விடுதலை ஆவார்கள்.
சிவனடியாரை காப்பாற்றிய சிவப்பு
தில்லையில் தமிழ்பாடும் உரிமை என்பது சாதாரணமாக வந்துவிடவில்லை. ஆறுமுகசாமி என்ற சிவனடியார் முதன்முதலில் சிற்றம்பலத்தில் தமிழ்பாட முயற்சிக்கிறார். அவர் சிற்றம்பல மேடை ஏறக்கூடாது என்றும் அவர் கோயிலுக்குள் வந்தால் கோயில் நகைகள் திருடு போக வாய்ப்புள்ளது என்றும் தீட்சிதர்கள் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கிட்டார்கள். தீட்சிதர்களின் வாதத்தை ஏற்று அவ்வாறே ஆறுமுகசாமி கோயிலில் நுழைய தடை விதித்தார் நீதிமன்ற நடுவர். இதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் புரட்சிகர அமைப்புகள் மற்றும் அரசின் சார்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 2008-ஆம் ஆண்டு சிற்றம்பலத்தில் தமிழ்பாடும் உரிமையை சென்னை உயர்நீதிமன்றம் மூலம் பெற்றோம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் சிவனடியார் ஆறுமுகசாமிக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் தில்லை சிற்றம்பலத்தில் தமிழ் பாடும் உரிமையை பெற்றுத்தந்தது.
தீர்ப்புக்கு பின்னர் மார்ச் 2, 2008-ஆம் ஆண்டு, சிவனடியார் ஆறுமுக சாமியை யானை மீதேற்றி கோயிலுக்கு அழைந்து வந்தனர் புரட்சிகர, முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். திருச்சிற்றம்பல மேடையில் ஆறுமுகசாமியை ஏறவிடாமல் தடுப்பதற்காக அம்பலத்து மேடையில் எண்ணெய் ஊற்றியதோடு, தங்கள் உடலிலும் எண்ணை தடவிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தவர்களின் மீது பாயக் காத்திருந்தார்கள் தீட்சிதர்கள்.
கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான தோழர்கள், போலீசு படை. எதற்கும் அசராமல் தீட்சிதப் பார்ப்பனர்கள் திருச்சிற்றம்பலத்தில் ஏறிய சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கினர்; உடன் வந்த போலீசு உயரதிகாரிகளையும் தாக்கினர்.
ம.க.இ.க. தோழர்கள் பலரும் தாக்கப்பட்டனர். சமீபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த சீர்காழி தோழர் அம்பிகாபதியின் மண்டை உடைந்து சிற்றம்பலத்தில் ரத்தம் தெரித்தது. அந்த ரத்தச்சிவப்பே தமிழை பாட வைத்தது.
ஆறுமுகசாமியை சிற்றம்பலத்தில் ஏற்றாமல் கோயிலைவிட்டு நகரமாட்டோம் என்று உறுதியாக தோழர்களும் மக்களும் அறிவிக்க, வேறுவழியின்றி தீட்சித குடுமிகளை உதைத்து, வெளியே இழுத்துப்போட்டு ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையில் தமிழ் பாட வைத்தது போலீசு. “தில்லைவாழ் அந்தணர்க்கு அடியார்க்கு அடியேன்” என்ற தமிழ்ப்பாடலைப் பாடினார் சிவனடியார் ஆறுமுகசாமி. அப்போது “நீசபாஷை”யான தமிழ், சிவபெருமானின் காதுகளில் கேட்காமல் இருக்க ஊளையிட்டனர் தீட்சிதர்கள்.
இதே சிவனடியார் ஆறுமுகசாமி 2000-ஆம் ஆண்டு சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடச்சென்றபோது ரவுடி தீட்சிதப் பார்ப்பனர்களால் கை கால்கள் உடைக்கப்பட்டு கோயில் வாசலில் வீசியெறியப்பட்டார். அப்போது தில்லை சிற்றம்பல மேடையில் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்ட போராட்ட களம் புகுந்தது நக்சல்பாரி கம்யூனிஸ்டு அமைப்புதான்.
லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள், வெளியீடுகள் மூலம் இப்பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் மூலம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டியது புரட்சிகர அமைப்புகள்தான். திராவிடர் கழகம், தி.மு.க, வி.சி.க, பா.ம.க. உள்ளிட்ட பல கட்சிகள்/அமைப்புகள் அதற்கு துணையாக நின்றன.
சிவனை நம்பிச்சென்ற நந்தனாரும் வள்ளலாரும் பார்ப்பன கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டனர் என்பதுதான் வரலாறு. அவர்களிடமிருந்து தப்பித்த ஒரே நபர் ஆறுமுகசாமி மட்டும்தான். ஏனெனில், சிவனடியாரை சிவன் காப்பாற்றவில்லை, சிவப்புதான் காப்பாற்றியது.
இவ்வாறு போராடிப்பெற்ற தமிழ்பாடும் உரிமையை நிலைநாட்ட தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் மடங்களும், சிவனடியார்களும் அன்று வரவில்லை. வேறு வழியின்றி நாத்திகர்களாகிய கம்யூனிஸ்டுகளே திருச்சிற்றம்பலத்தில் தமிழ்பாடும் உரிமையை நிலை நாட்டுவதற்காக திருவாசகம் பாட வேண்டியதாக இருந்தது.
தில்லைக் கோயிலை திருமண மண்டம் போல வாடகைக்கு விட்டு தீட்சிதர்கள் அட்டூழியம்.
போராடிப் பெற்ற உரிமையை நிலைநாட்டிக் காப்பாற்றிக் கொள்ளும் சுயமரியாதை உணர்ச்சி ஆத்திகர்களிடமே அற்றுபோன ஒரே காரணத்தால்தான் இன்றுவரை தில்லையில் கொட்டமடிக்கிறது பார்ப்பன ஆதிக்கம்.
அரசாணையும் உச்சி குடுமி மன்றமும்
தில்லைக் கோயிலை தீட்சித கும்பலிடமிருந்து மீட்டு இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்று புரட்சிகர அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டம் நடத்தினார்கள். விளைவாக 2009-ஆம் ஆண்டு, பிப்ரவரி 2-ஆம் தேதி கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, அரசாணை வாயிலாக இந்து அறநிலையத்துறையின் கீழ் தில்லை சிதம்பரம் நடராஜன் கோயிலைக் கொண்டுவந்தது.
இதற்கு முன்னர், தில்லைக்கோயிலில் இரு தீட்சிதர்கள், சக தீட்சிதர்கள் மீது கோயில் நகைக்களவு உள்ளிட்ட புகார்கள் தெரிவித்ததை அடுத்து, 1982-ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பது என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தில்லைக் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பின்னர், கோயில் குளம் தூர்வாரப்பட்டது. கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டன. அப்போது அந்தக் கழிவுகளில் பிராந்தி, பீர் பாட்டில்கள், ஆணுறைகள்தான் மிகுந்திருந்தன. இவை தில்லை தீட்சிதர்கள் ஆகம விதிகளை சீந்தும் யோக்கியதையை உலகுக்கே உணர்த்தின.
பக்தர்களின் காணிக்கையை தீட்சிதர்கள் கொள்ளையடிக்கும் நிலைமை மாற்றப்பட்டு கோயிலில் உண்டியல்கள் வைக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் உண்டியல் வருமானம் மட்டுமே ஒன்றரை கோடி ரூபாயைத்தாண்டியது. இது தவிர தங்கம், வெள்ளி, வைர நகைகளும் குவிந்தன. அரசின் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்னர் உண்டியல் ஆண்டு வருமானம் முப்பதாயிரம் ரூபாய் என்றும் கையிருப்பு ரூ.199.00 என்று கணக்கு காட்டினார்கள் தீட்சிதர்கள். எனில், இத்தனை ஆண்டுகளில் இந்த திருட்டு தீட்சிதர்கள் அடித்த கொள்ளை எத்தனை நூறு கோடியை தாண்டுமோ?
இந்து அறநிலையத்துறையின் கீழ் தில்லை சிதம்பரம் நடராஜன் கோயில் கொண்டு வரப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதர்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், 2009 பிப்ரவரி 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி தீர்ப்பு வழங்கினார்.
“நீதிமன்றத்தின் கடந்தகால பல உத்தரவுகள் தில்லை நடராஜர் கோயில் ‘பொது’ சொத்து (Public Temple) என்றுதான் வந்திருக்கின்றதே தவிர, கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானது என எங்கும் சொல்லவில்லை. 1885-லேயே நீதியரசர்கள் முத்துசாமி ஐயர், ஷேப்பர்ட் அடங்கிய அமர்வு “சிதம்பரம் கோயில் தீட்சதர்களின் சொத்தல்ல” என தீர்ப்பு கொடுத்திருப்பதை சுட்டிக்காட்டி, “சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவு சரிதான்” என்று கூறி, தீட்சதர்களின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், அப்போது தீட்சிதன் ஒருவன் கோயில் சொத்தை முறைகேடாக விற்றதும் விசாரணையில் வெளிவந்தது.
சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பார்ப்பன சகுனி சுப்பிரமணிய சுவாமியும் தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீடு செய்தனர். இரு நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் அந்த அமர்வும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அளித்தது.
அந்த தீர்ப்பு, “தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோயிலை கட்டவில்லை. அதனால், கோயிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரம் இல்லை” எனக் கூறி, “கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லும்” என்றது.
இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தீட்சதர்களும், சுப்பிரமணியன் சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த சமயம் தமிழ்நாட்டிலும் தி.மு.க. ஆட்சி மாறி, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றிருந்தது.
ஜெயலலிதாவை சந்தித்த தீட்சிதர்கள் தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்கள் கோரியபடியே, அவ்வழக்கில் தமிழ்நாட்டு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்களைக்கூட நியமிக்கவில்லை. அதற்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக அமைப்புக்கள் போராட்டம் நடத்தின.
29.11.2014-ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில், “உச்சநீதிமன்றம் சென்றுள்ள தீட்சிதர்களுக்கு எதிராக, மூத்த வழக்கறிஞரை நியமித்து கோயில் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும்” என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையே அன்றைய சூழலை விளக்கப் போதுமானது.
சிற்றம்பல மேடையேறி வழிபாடு செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண்மணியை தாக்குவதற்கு பாயும் தீட்சிதர்கள்.
பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே அடங்கிய உச்சநிதிமன்ற அமர்வு, “தில்லை கோயிலை தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்தது சரி அல்ல” என்று கூறி தீட்சிதர்களிடமே கோயிலை ஒப்படைத்தது. “தில்லைக்கோயில் பொதுச் சொத்துதான் என்றும் தீட்சிதர்க்கு சொந்தமல்ல” என்ற சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு அடிப்படையான ஆதாரங்கள், 1885 தீர்ப்புக்கான ஆதாரங்கள் என எதையுமே தமிழக அரசின் வழக்குரைஞர்கள் அப்போது சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரமணியசாமி, அதிகார வர்க்கம், தீட்சிதர்கள், நீதித்துறை என பார்ப்பன அதிகார பீடம் மொத்தமும் சேர்ந்து சதித்தனம் புரிந்தனர். ஆகையால், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் மீண்டும் தீட்சித கிரிமினல்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பீனல் கோடு பூணுல் கோடை கட்டுப்படுத்தாது!
தீட்சிதப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் கோயில் வந்த பின்னர், கடந்த 11-9-2018 அன்று நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிலதிபர் குடும்பத்தின் ஆடம்பர திருமணத்திற்காக கையூட்டாக பல கோடி பெற்று கோயிலை திருமண மண்டபமாக மாற்றினார்கள் தீட்சிதர்கள். பொற்கூரைமீது ஏறி கோவிலில் திருட்டுத்தனமாக வெளியூர் ஆட்களை தங்கவைத்து ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஐந்து நட்சத்திர விடுதி போல ஆடம்பர ஏற்பாடு செய்தனர். திருமண வீட்டார் தந்த பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வந்த பிற பக்தர்கள் தடுக்கப்பட்டனர்.
இப்பிரச்சினை வெளியே வந்த உடன் பட்டு தீட்சிதன் என்பவனை மட்டும் சஸ்பெண்ட் செய்து 1001 ரூபாய் அபராதம் விதித்தனர். இது ஒரு தண்டனையா, எந்த சட்டப் புத்தகத்தில் இது இருக்கின்றது எனக் கேள்வி எழலாம். குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் பீனல் கோடு, பூணுல் கோடை கட்டுப்படுத்தாது என்பதே அதன் பொருள். அதனால்தான் இன்று ஜெயசீலா போன்ற பக்தர்களைத் தாக்க தீட்சிதர்களுக்கு துணிச்சல் வருகிறது.
இத்தகைய பூணுல் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்துதான் இன்று வழிபாட்டு உரிமைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்பாடும் உரிமைக்கான போராட்டமும் அக்கோயிலை அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவேண்டும் என்ற போராட்டமும் வேறு வேறல்ல.
விலகிச்செல்ல நமக்கு உரிமை ஏதும் இல்லை !
தீட்சிதர் ஆதிக்கத்தில் இருந்து தில்லையை மீட்க, தமிழ்பாடும் உரிமையை மீட்டெடுக்க, தில்லை சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வருவதுதான் ஒரே வழி. இதற்கு தமிழ்நாடு அரசு சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும். அன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த நந்தன் நுழைந்தான் என்பதற்காக ‘தீட்டு’ என்று கூறி அடைக்கப்பட்ட தெற்கு வாயில் இப்போதே சல்லி சல்லியாக நம்மால் நொறுக்கப்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி பாசிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். நாட்டில் மீண்டும் நவீன வடிவ பார்ப்பன கொடுங்கோன்மையை – இந்துராஷ்டிரத்தை – அதிகாரப்பூர்வமாக நிறுவும் திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தில்லையில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை தகர்ப்பது எளிதானதல்ல.
1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது “இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின்னால் செல்லாதே” என்று திருச்சி சிறீரங்கநாதனின் கோயில் கருவறையில் பெரியார் அம்பேத்கரின் படங்களோடு நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த இரங்க நாதனை துயிலெழுப்பிய மரபுக்கு சொந்தக்காரர்கள் நாம்.
இன்று, இந்தியாவின் பிற மாநிலங்களில் ஹிஜாபுக்கு தடை, பாங்கு ஓதுவதற்கு தடை என்று காவி பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான விசயமாகவும் தில்லை தீட்சிதர் ஆதிக்கத்தை முறியடிப்பதைப் பார்க்க வேண்டும். தில்லைக்கோயிலை தமிழனுக்கு சொந்தமாக்குவது என்பது சனாதன – பார்ப்பனிய எதிர்ப்புப் போர்க்களத்தின் ஒரு படி.
தமிழ்நாட்டுக் களத்தில் நின்று நாம் அடிக்கும் அடி பார்ப்பனியத்தின் உயிர்நாடியில் விழவேண்டும். பார்ப்பன – சனாதக்கூட்டமா, தமிழனா? என்று ஒரு கை பார்க்க வேண்டும்! தன்மான உணர்ச்சி மிக்க ஒவ்வொரு தமிழனும் களம் காண வேண்டும். இதற்காக மக்களைத் தட்டி எழுப்புகிற மாபெரும் பணியை புரட்சிகர-ஜனநாய சக்திகளாகிய கம்யூனிச, திராவிட, தமிழ்த்தேசிய அமைப்புகளிடம் வரலாறு ஒப்படைத்துள்ளது.