பள்ளி மேலாண்மை குழு : திராவிட மாடல் போர்வையில் கார்ப்பரேட் மாடல் !

கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வெட்டி சுருக்கிவிட்டு, சமூகத்தின் பொறுப்பு அதிலும் குறிப்பாக பெற்றோர்களின் தலையில் சுமத்திவிட்டு அரசு, கல்வியில் இருந்து விலக வேண்டும் என்பதே தனியார்மய கல்விக் கொள்கையின் நோக்கம்.

மிழகத்தில் பள்ளி கல்வியில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டுவருவதற்கு தமிழக அரசு பள்ளி மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது என கூறி மார்ச் 9 அன்று ஒரு அறிவிப்பை அறிவித்து நம் பள்ளி, நம்பெருமை என்ற புதிய செயலியை தொடங்கி செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் “அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மை குழு குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும் பேசி இதில் அரசியல் தலையீடு இருக்காது, அவ்வாறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக பள்ளி மேலாண்மை குழு குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வி துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டதே  பள்ளி மேலாண்மைக் குழு எனவும், அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் மேலாண்மைக் குழு முக்கிய பங்காற்றுகிறது எனவே அதனை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளார்.
படிக்க :
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
இதன் தொடர்ச்சியாக மார்ச் 20 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அனைத்து பெற்றோர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி – அதில் பெற்றோர்களின் பங்களிப்பை வலியுறுத்தி பேசப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளிகளின் மேம்பாடு குறித்தும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாராமரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறி குறிப்பாக பெண்கள் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் எனவும், சமூக பங்களிப்புடன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஏனெனில் அரசு பள்ளி நமது பள்ளி , நமது பெருமை, நமது குழந்தைகள் என பெற்றவர்களை பொறுப்பாக்கும் வேலையை அரசு தொடங்கியுள்ளது.
சமூக பங்களிப்புடன் பள்ளியை மேம்படுத்தப்போவதாக கூறும் அரசு அதற்கான எந்த வரையறையும் சொல்லாமல் இருப்பது உள்ளூர் அளவில் செல்வாக்குள்ள நபர்கள் மற்றும் பணம் படைத்தவர்களின்  கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும் என்பதே உண்மை. இதற்கு சான்று ஏற்கனவே செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை பார்த்தாலே போதும். பல இடங்களில் ஓட்டு கட்சி பிரமுகர்கள் செல்வாக்கில் இருந்து கொண்டு மாணவர்கள் – பெற்றோர்களிடம் கட்டண கொள்ளை அடித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளின் மேன்மையை சமூகத்திற்கு உணர்த்தும் வேலையை இந்து நாளிதழ் ’நம் கல்வி, நம் உரிமை’ என்பதை செய்து அரசுப் பள்ளியை பராமரிக்கும் பொறுப்பை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் சதித் திட்டத்தை ஆரவாரமாக வரவேற்று வருகிறது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளையும் பெற்றோர்களின் பங்களிப்புடனும், சமூக பங்களிப்புடனும் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், நூலக வசதிகள், கழிவறை வசதிகள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது போன்ற பொறுப்புகளை தட்டிகழிக்கும் வேலை செய்து வருகிறது. இப்போது பள்ளி மேலாண்மை குழுவை பொறுப்பாக்கி அதன் தொடர்ச்சியாக மொத்த சுமையையும் பெற்றோர்கள் தலையில் சுமத்திவிட்டு படிப்படியாக அரசு, தன் பொறுப்பை கைக்கழுவி விடும் வேலை அரங்கேறும். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குமேல், பள்ளி மேலாண்மை குழுவால் பராமரிக்க முடியாத சூழலில் இயல்பாகவே தனியார் பங்களிப்புடன், நடத்த வாய்ப்பு ஏற்படுத்தி அதன் பிறகு கார்ப்பரேட்டுகளிடமே ஒப்படைப்பதற்கான நிலைமை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு கல்வி கொடுப்பதில் இருந்து படிப்படியாக வெளியேறும் அபாயம் உள்ளது.
பள்ளி மேலாண்மை குழுவானது கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஏற்படுத்தப்பட்டதாகும். 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கல்வி வழங்குவதில் இந்த பள்ளி மேலாண்மை குழு என்பது ஒரு மைல் கல் என பேசப்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் – 2009-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி – ஏப்ரல் 1, 2010-ல் நடைமுறைக்கு வந்தது. கடந்த 12 ஆண்டுகளில் பள்ளி கட்டமைப்பு மாறியுள்ளதா, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வி கிடைத்ததா? பள்ளிகளில் மகிழ்ச்சியான கற்றல் சூழல், அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் இடைவெளி குறைந்ததா? இல்லை கல்வியில் தனியார் பள்ளிகளின் கொள்ளை தடுக்கப்பட்டதா? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தரமான, சமமான கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
இப்படிபட்ட சூழலில்தான் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க கூடிய பொறுப்பை பெரும்பான்மையாக பெற்றோர்கள் 15 பேர் (அதாவது 4-ல் 3 பங்கு) ஆசிரியர் 2 பேர் (தலைமை ஆசிரியர் – ஆசிரியர்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர் 2 பேர், கல்வியாளர் ஒருவர் என்ற அடிப்படையில் மொத்தம் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவிடம் (அதாவது  பள்ளியை அந்த ஊரே பராமரிப்பது) பள்ளியை ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு.
இதற்கு இவர்கள் கூறும் காரணம் “பள்ளியை நிர்வகிப்பது தலைமை ஆசிரியர் மட்டுமே என்ற பிம்பம் களையப்பட்டு, ஒரு ஊரில் உள்ள பள்ளிக்கு, அந்த ஊரையே பொறுப்பாக்குவது. குறிப்பாக, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை முதன்மை அலகாக கொண்டு மாற்றியமைக்கப்படுகிறது. இதில் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் வழிகாட்டும் அங்கத்தினர் மட்டுமே என்பதை சமூகத்திற்கு உணர்த்த வேண்டும் என்று கூறுவதன்மூலம் அரசு, கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து தன்னை விலகுவதற்கான வழியே ஏற்படும்.
பள்ளியின் அனைத்து தேவைகளையும் அறிந்து கூட்டாகவும், சமுதாய பங்களிப்போடும் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிப்பதை உறுதி செய்வது மூலம் பள்ளி சேர்க்கை அதிகரித்தல், இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு மீண்டும் வர வைப்பது. அடிப்படை கட்டமைப்பை உறுதிப்படுத்துவது, குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படச் செய்வது ஆகியவற்றை பள்ளி மேலாண்மை குழுவின் கடமையாக சொல்லப்படுகிறது. இது நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கு ஏற்ற வகையில் நிலமைகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இந்த குழு சுயமாக இயங்கும், அரசியல் தலையீடு இருக்காது. அவ்வாறு தலையீடு இருந்தால் – உடனடியாக நடவடிக்கை பாயும் என கூறுவது வெறும் வாய்ச்சவடால் மட்டுமே!
ஏற்கனவே பெற்றோர் – ஆசிரியர் கழகம் எவ்வாறு செயல்படுகிறது? உள்ளூர் ரவுடிகளும், ஓட்டு கட்சி பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையடிக்கவே செய்கிறது. இதனை எதிர்த்து பல பள்ளிகளில் மாணவர்கள் போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் – தலைமை ஆசிரியர் இணைந்து பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த அரும்பாடுப்பட்டு அரசு பள்ளியை தக்கவைத்து வருகின்றனர்.
இந்த லட்சணத்தில், ஒட்டுமொத்தமாக கல்வி சுமையையும் பெற்றோர்கள் மீது சுமத்திவிட்டு அதிலிருந்து வெளியேறவே இது வழிவகுக்கும். இதற்கு “நம் பள்ளி நம் உரிமை, நம் பெருமை என்ற கவர்ச்சி முழக்கத்தை வைத்து பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுவிடம் ஒப்படைத்துவிட்டு அரசு வெளியேறும் நிலை ஏற்படும். முதலில் சமுதாய பங்களிப்புடன் செயல்பட தொடங்கினாலும், அதை தொடர்ச்சியாக செய்ய வாய்ப்பு இல்லாமல்போகும்.  குறிப்பாக, அரசின் நிதி ஒதுக்கீடு முற்றிலும் வெட்டப்படும். இதனை பயன்படுத்தி கொண்டு  தனியார் கல்விக் கொள்ளையர்கள் கல்லா கட்டுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அரசுதான் கல்வியை சேவையாகவும், அனைவருக்கும் இலவசமாகவும் வழங்க வேண்டும். இதற்கான நிதியை அரசுதான் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருமானம் இல்லை என்பதால் கல்வியை தனியார்மயமாக்கும் அதேவேளையில் குடியை கெடுக்கும் “டாஸ்மாகை’’ அரசே எடுத்து நடத்தி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வேலையை மட்டும் அரசே செய்யுமாம். இதைவிட கேடுகெட்ட அயோக்கிய தனம் எதாவது இருக்க முடியுமா?
பள்ளி மேலாண்மை குழுவானது 2009 அனைவருக்கும் இலவசக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவந்தபோதே ஏற்படுத்தப்பட்டதுதான். பள்ளியை பெற்றோர்கள்தான் மேலாண்மை செய்ய வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த பள்ளி மேலாண்மை குழு. இதற்கான அரசாணை  2011, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தது. இது அமலுக்கு வந்த பிறகு இழுத்து மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் ஏராளம். அரசுப் பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலியான மாணவர்கள் பலர். அதன் பிறகு அது என்னவானது என்பது யாருக்கும் தெரியாது. சட்டப் போராட்டம் என்பது எல்லாம் வெறும் கழிப்பறை காகிதம் மட்டுமே.
படிக்க :
பட்ஜெட் : பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் புதியக் கல்விக்கொள்கை !
கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயமில்லை
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த அரசின் முன்னெடுப்பை புரிந்து கொள்ள ஒரு உதாரணம், சமீபத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறை கட்டிடங்களுக்கு ரூ.7500 கோடி (28,000 வகுப்பறைகள்) ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 37,391 அரசுப் பள்ளிகளுக்கு பிரித்து கொடுத்து கட்டமைப்பை மேம்படுத்த முடியுமா? ஒரு பள்ளிக்கு ஒரு கோடி என்றாலும் ரூ. 37,391 கோடி தேவைப்படும் அல்லவா?
ஒருபக்கம் கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வெட்டி சுருக்கிவிட்டு, சமூகத்தின் பொறுப்பு அதிலும் குறிப்பாக பெற்றோர்களின் தலையில் சுமத்திவிட்டு அரசு, கல்வியில் இருந்து விலக வேண்டும் என்பதே தனியார்மய கல்விக் கொள்கையின் நோக்கம். இந்த கொள்கையை முறியடிப்பதன் மூலமே அனைவருக்கும் இலவச – தரமான – கட்டாய  கல்வி உரிமையை நிலைநாட்ட முடியும்.
இனியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க