ந்த நாட்டின் நீதிபதிகளை என் வழக்கறிஞர்களாக மாற்றிவிட்டேன்” ஹிட்லர் இப்படி சொன்னதாக ஒருசெய்தி இணையத்தில் உலா வருகின்றது. ஹிட்லர் அப்படி சொன்னானா இல்லையா என்பதல்ல விசயம். மோடியும் ஆர்.எஸ்.எஸ்-ம் அவ்வாறே செய்துவிட்டார்கள் என்பதைத்தான் ஹிஜாப் தீர்ப்பு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநிலம், உடுப்பி பி.யூ.கல்லூரியில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய கல்வி நிறுவனத்தால் தடை விதிக்கப்பட்டதால், ஆறு முஸ்லீம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். இதைத்தொடர்ந்து மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவித் துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர்.
ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லான் என்ற மாணவியை கெரோ செய்த ஏபிவிபி மாணவர்களுக்கு எதிராக அவர் கூறிய அல்லாஹூ அக்பர் என்ற முழக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அப்போதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் பின்வாங்கவில்லை.
படிக்க :
ஹிஜாப் தீர்ப்பு : பின்னணி என்ன? | தோழர் சுரேசு சக்தி முருகன்
ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!
கர்நாடகாவின் கடற்புறங்களில் தொடங்கிய ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் பாகல்கோட்டை, ஹாசன், மண்டியா, கோலார் ஆகிய மாவட்டங்களிலும் பரவியது. ஏபிவிபி மாணவ அமைப்பினர் முஸ்லீம் மாணவிகளை சூற்றிவளைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். ஹிஜாப் அணிந்த இருந்த மாணவிகளின் அறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு காவி மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். மேலும், தேசிய கொடி கட்டும் கம்பத்தில் ஏறி, காவிக் கொடியையும் கட்டினர். அம்மாநில அமைச்சர் ஒருவர் காவிக்கொடியை தேசியக்கொடிக்கம் பத்தில் ஏற்றியது தவறில்லை என்றார்.
மேலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளின் முகவரிகளை வெளியிடுவோம் என்றும் அவர்களை எல்லாம் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றார். எல்லாப் பிரச்சினைக்கும் காரணமான கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார். ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி முஸ்லீம் மாணவிகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
ஹிஜாப் தடைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாதென்றும் ஹிஜாப் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதா என்று ஆராய உள்ளதாக அறிவித்தது கர்நாடக உயர்நீதிமன்றம். வழக்கு விசாரணைகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாதென்று கூறி மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அறிவித்தது. மார்ச் 15-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்த்தபடியே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
தீர்ப்பு வருவதற்கு முந்தைய நாள் மாநில அரசு கர்நாடகாவில் கொண்டாங்களுக்கு தடைவிதித்தது. போலீசைப் பாதுகாப்பு என்ற பெயரில் குவித்தது. பாபர் மசூதி தீர்ப்புக்கு முன்னர் என்ன நடைபெற்றதோ அதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கும்போதே அது முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருக்கும் என்றே பலராலும் யூகிக்க முடிந்தது.
ஆனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பினை வாசிக்கும்போது எப்படி இந்துராட்டிரம் படிப்படியாக, சட்டப்பூர்வமாக அமைக்கப்படும் என்ற மனக்காட்சியை காட்டிவிட்டது. ஹிஜாப் அணிவது தனிமனித சுதந்திரத்துக்கு உட்பட்டது அதில் அரசு தலையிட முடியாது என்பதே மாணவிகளில் மையமான வாதம்.
அதற்கு நீதிமன்றம் அளித்த பதிலோ, “ஹிஜாப் அணிவது இசுலாம் மதத்தில் அத்தியாவசியமான பழக்கம் அல்ல”. அன்றைய தினம், “சீக்கியர்கள் விமான பயணத்தின்போது சிறிய அளவிலான கத்தியை கொண்டு செல்லலாம்” என்ற அறிவிப்பு ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டதை பார்க்கும்போது திட்டமிட்ட முசுலீம்களுக்கு எதிரான நடவடிக்கை என்பதை உணரமுடியும்.
***
பாசிஸ்டுகளின் தீர்ப்பு
1. ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. மேலும், இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின்கீழ் வரவில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும். மனுதாரர்களான இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் தங்கள் மத உரிமை என்றும் அதில் கல்லூரி நிர்வாகம் தலையிட முடியாது என்றும் கூறியிருந்தனர். இத்தீர்ப்பின்படி, இசுலாமியர்கள் ஹிஜாப் அணிவது தடைவிதிக்கப்படுமே தவிர சீக்கியர்கள் அணியும் டர்பன் உள்ளிட்ட இதரவைகளுக்கு தடைவிதிக்கப்படாது. எது அத்தியாவசியம்? எது அத்தியாவசியம் இல்லை என்பது சம்பந்தப்பட்ட மதம் முடிவு செய்ய முடியாது. பெரும்பான்மை மதவாதமே அதை முடிவு செய்யும் என்பதைத்தான் இத்தீர்ப்பு கூறுகிறது. ஆனால் தில்லைக்கோயிலின் தீட்சிதப் பார்ப்பனர்கள் தங்களை இப்பிரிவின்கீழ்தான் தற்காத்துக் கொண்டு கோயிலை தனதாக்கிக் கொண்டனர்.
2. பள்ளிகள் கல்வி கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட தகுதிவாய்ந்த பொதுஇடங்கள். அத்தகைய பொது இடத்தில் தனிநபர் உரிமையை செயல்படுத்தும் முயற்சிகள் செல்லுபடியாகாது. பள்ளிகள் போன்ற பொது இடங்களில் தனிநபர் உரிமை என்பது கூட கல்வி நிலையம், மாணவர்கள் என இருதரப்புக்கும் ஏற்புடைய உரிமையாக உருமாறிவிடுகிறது. தேசியகீத வழக்கு என்றழைக்கப்படும் புகழ்பெற்ற வழக்குத் தீர்ப்பானது, தேசியகீதத்தின்போது அமைதியாக எழுந்து நிற்கும் உரிமையும் தனிநபர் உரிமைதான் என்று கூறியது. இனி அந்தத் தீர்ப்பும் மாற்றப்படலாம். பள்ளிகள் பொது இடங்கள் அங்கே மதவெறியை வளர்க்கும் ஷாகாக்கள் நடத்தப்படலாம்; ஆனால் ஹிஜாப் போடக்கூடாது.
3. பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடை வழங்குவது அரசியல் சாசன சட்டப்பிரிவு சட்டப்பிரிவு 19(1) (a) வழங்கும் பேச்சுரிமையோ அல்லது சட்டப்பிரிவு 21 வழங்கும் தனிநபர் உரிமையையோ பறிப்பது ஆகாது. மேலும், கல்வி நிலையங்கள் ஹிஜாப் அணியத் தடை விதிப்பது என்பது அரசியல் சாசனப்படி அனுமதிக்கத்தக்க தடையே. இதை மாணவர்களால் எதிர்க்க முடியாது. ஆகையால், ஹிஜாபுடன் ஒரு சீருடை, ஹிஜாப் இல்லாத சீருடை என்றெல்லாம் வகைப்படுத்த முடியாது. சீருடை ஒன்றுதான், ஒரேமாதிரியானதுதான். ஆனால் இதை சபரிமலைக்கு மாலை போட்டுபவர்களுக்கு ஒருபோதும் நீட்டிக்க மாட்டார்கள். ஏனெனில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியப் பழக்கம் அல்ல என்பதே தீர்ப்பின் சாரம்சம்.
4. இந்த வழக்கை மொத்தம் 11 நாட்கள் நீதிமன்றம் விசாரித்துள்ளது. 23 மணி நேரம் விசாரணை நடைபெற்றிருக்கிறது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பு வழங்கப் படுகிறது. கர்நாடக அரசு, கல்வி நிலையங்களுக்கு மாணவ, மாணவியர் ஹிஜாப், புர்கா, பர்தா, காவித் துண்டு போன்ற மத அடையாளங்களுடன் வரக் கூடாது என்று விதித்த உத்தரவு செல்லுபடியாகும். இதில் ஹிஜாப் தவிர மற்ற மத அடையாளங்கள் அத்தியாவசியமானவையா என்பது கூறப்படவில்லை. பாபர் மசூதி ராமனுக்கு சொந்தம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பானது எவ்வித ஆதாரங்களுமின்றி நம்பிக்கையின் பாற் வழங்கப்பட்டது. அந்த நம்பிக்கைபாற் தீர்ப்பை முஸ்லீம்களுக்கு இந்த நாடு ஒருபோதும் வழங்காது.
5. ஹிஜாப் விவகாரம் திடீரென பூதாகரமாக வெடித்ததைப் பார்க்கும்போது அதில் கண்ணுக்குத் தெரியாத சில கரங்களின் வேலை இருக்கிறது என்பது புரிகிறது. சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் சூழலில் செயல்பட்டுள்ளனர். கல்வி ஆண்டின் நடுவில் உருவான இந்த சர்ச்சை சில சக்திகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டிருக்கிறது என்றும் இது தொடர்பாக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது. ஹிஜாப் அணிந்த மாணவிகளை கெரோ செய்தும் அச்சுறுத்தியும் வந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மணவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறாத நீதிமன்றம் போராடிய மாணவிகளை விசாரணை செய்ய வேண்டும் என்றுகூறி இருப்பது என்பது திட்டமிட்ட இசுலாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை.
6. இந்த வழக்கில் விவாதத்திற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. ஹிஜாப், பர்தா போன்ற உடைகள் பெண் விடுதலைக்கு குறிப்பாக முஸ்லீம் பெண்களின் விடுதலைக்கு எதிரானதாக இருக்கிறது என்றும் வாதிடலாம். பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் அல்ல. மேலும், கல்வி நிலையம் தாண்டி பெண்கள் எந்த மாதிரியான உடையையும் அணியலாம் என்று அத்தீர்ப்பு கூறுகிறது. கர்நாடக பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த தடை படிப்படியாக அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். ஏனெனில் பள்ளி பொது இடம் என்றால், சாலை, மருத்துவமனை, காய்கறி – மளிகைக் கடைகள், பேருந்துகள் – புகைவண்டிகள் எனை அனைத்தும் பொது இடங்கள்தான். பால்யவிவாகம் என்ற பெயரில் சிறுவதில் குழந்தைகளுக்கு திருமனம் செய்வது, உடன்கட்டை ஏறுவது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற இழிவான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் பார்ப்பன சனாதனத்தின் நோக்கம் பெண் விடுதலையா என்ன?
7. இளமைப் பருவம் என்பது எளிதில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய பருவம். இந்தப் பருவத்தில் மாணவர்களின் அடையாளமும், சிந்தனையும் மாறக்கூடியது. இளம் மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறதோ அதன்பால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் இனம், மதம், மொழி, சாதி, இடம் சார்ந்த தங்கள் சுற்றுப்புறக் கருத்துக்களால் ஈர்க்கப்படலாம். அதனால், இத்தகைய தடை உத்தரவு என்பது பிரிவினையைத் தூண்டும் நிலவரங்களில் இருந்து பாதுகாப்பான சூழலை உருவாக்கித்தர அவசியமாகிறது. இந்தச் சூழலில் மாணவர்களுக்கு சீருடை என்பது கட்டாயமாகிறது என்கிறது இத்தீர்ப்பு.
இந்நாட்டில் பல்வேறு மதங்கள், இனங்கள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் இருக்கின்றன. அனைத்து சிறுபான்மை மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதுதான் அரசியலமைப்பு கொடுக்கும் உரிமை. அந்த உரிமையை பறித்து பார்ப்பன சனாதன இந்து மதத்துக்கு உட்பட்டே அனைவரும் வாழ வேண்டும் என்பதைத்தான் இத்தீர்ப்பு அறிவிக்கிறது. பார்ப்பனர்கள் வேட்டிக்கட்டிக்கொண்டு வருவதும், பூணூல் அணிவதும் சட்டை இல்லாமல் அரை அம்மணமாக தெருக்களில் திரிவது எல்லாம் அவர்களுக்கு அத்தியாவசியம். இத்தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் இசுலாமிய ஆண்கள் தலையில் குல்லா அணிவதையும் அடுத்து தடுப்பதற்கான அடுத்த வாய்ப்புக்கள் உள்ளன.
***
தீர்ப்பை வரவேற்றுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, “மாணவர்களுக்கு எல்லாவற்றையும்விட கல்வியே முக்கியம். ஆகையால் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டுகிறேன். ஆயத்தத் தேர்வுக்கு முன்னதாக செய்ததுபோல் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்” என்று மாணவர்களுக்கும்  பெற்றோர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தை மூன்று துண்டாக்கினார்கள், பாபர் மசூதியை இசுலாமியர்களிடமிருந்து பறித்தார்கள், சிஏஏ சட்டத்திருத்தம் கொண்டுவந்து இசுலாமியர்கள் அகதிகளாக்க முடிவெடுத்தனர், இதுபோன்று பல எண்ணிலடங்கா துரோகங்களையும்  அக்கிரமங்களையும் செய்துவிட்டு  அமைதிகாக்கவும் அரசுக்கு ஒத்துழைக்கவும் உத்தரவிடுகின்றனர் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிசக் கும்பல். இதைமீறிப் போராடினால் என்ன நடக்கும்? சிஏஏ எதிப்புப் போராட்டங்களை சீர்குலைக்க நடத்தப்பட்ட கலவரங்கள் மீண்டும் நடைபெறும் என்பதை முஸ்லீம்களும் சிறுபான்மை மக்களும் நன்கு அறிவர்.
படிக்க :
ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !
பெரும்பான்மை வாதத்துக்கு கட்டுப்பட்டே சிறுபான்மை மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் இத்தீர்ப்பு உட்பட சிறுபான்மை மக்களுக்கு எதிராக வந்திருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மையமான நோக்கம். இப்படிப்பட்ட சட்டங்கள், தீர்ப்புகள் மூலம் இசுலாமிய மற்றும் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கி தனிமைப்படுத்தி ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் இந்துராட்டிரம் அமைக்கப்படும்.
இப்படி நீதிமன்றம், தேர்தல் ஆணையம் – நிர்வாகத்துறை என  அரசின் அனைத்துத் துறைகளையும் காவி பாசிஸ்டுகள் தங்களுடையதாக மாற்றிவிட்டனர். உ.பி.யில் சரியான கூட்டணி  இருந்திருந்தால் பாஜக தோற்றிருக்கும் என்று அப்பாவித்தனமாக நம்புவதுடன் நம்மையும் நம்பச் சொல்கிறார்கள் சிலர். அதனால்தான் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கு பிரஷாந்த் கிஷோர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துராட்டிரம் நம் கதவை ஏற்கனவே தட்டத் தொடங்கிவிட்டது. நாம் திறக்காவிட்டாலும் கதைவை உடைத்துக் கொண்டு வருவது திண்ணம். எதிர்த்து நிற்பதா? சரணடைவதா? முடிவு நம்முடைய கையில்தான் இருக்கிறது.
மருது
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க