குறிஞ்சாங்குளம் படுகொலை :
சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு!
சாதிவெறியை இனப் பகையாக சித்தரிக்கும் தமிழ்த்தேசிய துரோகிகள்!

முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. தங்கள் வழிபாட்டு உரிமைக்காகப் போராடி ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குறிஞ்சாங்குளம் தியாகிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. “சமூகநீதி படைத்த தமிழ்நாடு” என்று பெருமை பொங்கும் நமது எருமைத்தோல்களை நெருப்பாய் சுடுகிறது இவ்வுண்மை.

கொலைகாரர்கள் ‘நீதி’மன்றத்தால் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கிறார்கள். கோயிலினுள் வைக்கப்படுவதற்காக தாழ்த்தப்பட்ட மக்களால் கொண்டுவரப்பட்ட காந்தாரி அம்மன் சிலை, முப்பதாண்டுகளாக அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் காணும்போது போலீசு, நீதித்துறை என மொத்த அரசுக்கட்டமைப்பே எப்படி ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதாரத்தூணாக இருக்கிறது என்பது அம்பலப்படுகிறது. மேலும் சூத்திர சாதிவெறியை பாதுகாப்பதுதான் இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளின் சமூகநீதியா என்ற கேள்வியையும் நம்முன் எழுப்புகிறது.

குறிஞ்சாங்குளம் படுகொலையின் முப்பதாம் ஆண்டினை ஒட்டி, பல அமைப்புகள் கோயிலில் காந்தாரி அம்மனுக்கும் கோயிலுக்கு வெளியில் தியாகிகளுக்கும் சிலை வைக்கப்போவதாக அறிவித்தன. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டியும் வருகிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள்.

படிக்க :

இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !

சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !

இன்னொரு முனையில், குறிஞ்சாங்குளம் படுகொலைகளை தற்போது கையில் எடுத்து போராடுவதாகக் கூறிவரும் சிலநபர்களோ கொஞ்சம் ‘விசித்திரமானவர்கள்’. தமிழ்த்தேசியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள், குறிஞ்சாங்குளம் படுகொலை என்பது ஆதித்தமிழர்களுக்கும் வந்தேறி வடுகர்களும் இடையிலான மோதல் என்று சித்தரிக்கின்றனர்.

குறிஞ்சாங்குளம் படுகொலையின் சுருக்கமான வரலாறு!

அன்றைய நெல்லை மாவட்டத்தின் கோவில்பட்டி, சங்கரன் கோயில் ஆகிய இரு ஊர்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்துதான் குறிஞ்சாங்குளம். வழக்கமாக ஆதிக்க சாதியினர் ஊருக்குள்ளும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்கு வெளியேயும் வாழும் வகையில்தான் கிராமங்கள் அமைந்திருக்கும்.

அதற்கு மாறாக, குறிஞ்சாங்குளத்திலோ ஊர் சாலையின் மேற்கு திசையில் நாயுடு ஆதிக்க சாதி மக்களும் மறுபுறமான கிழக்கு திசையில் பறையர், சக்கிலியர், பள்ளர் ஆகிய தாழ்த்தப்பட்ட சாதி மக்களும் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு சாதி ஆதிக்க இலக்கணங்களுக்கு ஒவ்வாத நில அமைப்பே – தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் கண் முன்பு வாழ்வதே – நாயுடு சாதிவெறியர்களின் கண்களுக்கு உறுத்தல்.

தாழ்த்தப்பட்ட மக்களின் பயன்பாட்டில் இருந்த பெரும்பான்மையான புறம்போக்கு நிலங்களை நாயுடு சாதியினர் படிப்படியாக அபகரித்துக்கொள்கின்றனர். குறிப்பாக பறையர் சாதி மக்களின் காளி மற்றும் அய்யனார் கோயில்களை நாயுடு சாதியினர் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கென சொந்தமாக இருந்தது காந்தாரி அம்மன் கோயில் நிலம்தான்.

நத்தம் புறம்போக்கில் உள்ள 8 சென்ட்டுக்கும் குறைவாக உள்ள இடத்திலேயே தங்கள் குலதெய்வமான காந்தாரி அம்மனுக்கு ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்ச்சி நடத்திவந்தனர் பறையர் சாதி மக்கள். ஒவ்வொரு முறையும் அந்த நிலத்தில் உள்ள மண்ணை எடுத்து அதிலே சிலைசெய்து 4 நாட்கள் நிகழ்ச்சி நடத்திவிட்டு சென்றுவிடுவார்கள். மீண்டும் அடுத்த ஆண்டுதான் வருவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அக்கோயிலுக்கு முதல் மரியாதை நாயுடு சாதியை சேர்ந்த ஊர்த் தலைவருக்கே கொடுக்கப்படும். ஊர்த் தலைவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று, அவர் “சாமி கும்புடுங்கடா” என்று உத்தரவு அளித்தப் பின்னர்தான், பறையர் பூசாரிக்கு அருள் வரும். இதுதான் அப்போது இருந்த நிலைமை.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் கட்ட வேண்டும் என்று சொன்ன போது, அவ்வூரைச்சேர்ந்த நாயுடு சாதி நபர் ஒருவரே கல்தூணையும் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். மேலும் சிலை செய்யவும் உதவி இருக்கின்றார். எனினும் நாயுடு சாதியினர் அந்த இடத்தை அபகரிக்க தொடர்ச்சியாக முயற்சித்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வந்தபோது காந்தாரி அம்மன் கோயில் நிலத்தையே நாயுடுகள் காட்டியுள்ளனர். தலித்துகளோ தாங்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தை அளித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் தண்ணீர் தொட்டிக்கும் பறையர்களின் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் இனியும் பறையர்களை விட்டுவைக்கக்கூடாது என்ற முடிவுக்கு நாயுடு சாதிவெறியர்கள் வந்தனர்.

000

90களின் தொடக்கத்தில், தங்கள்மீதான சாதிக்கொடுமைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், இனி ஆதிக்க சாதியினருக்கு முதல் மரியாதை இல்லை; பூசாரி அவர்களின் காலில் விழக்கூடாது; தனியாக கோயில் கட்ட வேண்டும் என்ற முடிவுகளை எடுத்து தலித் மக்களை திரட்டுகிறார்கள். அதன்படி 08.08.1990 அன்று காந்தாரி அம்மன் சிலையை எடுத்துக்கொண்டு சென்றனர்.

நாயுடு ஆதிக்க சாதிவெறியர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யபட்ட குறிஞ்சாங்குளம் தியாகிகள்.

காந்தாரி அம்மன் சிலையை ஊரில் வைக்கக்கூடாது என்று தகராறு செய்தனர் ஆதிக்க சாதிவெறியர்கள். “காந்தாரி அம்மன் ‘துஷ்ட தெய்வம்’; அதை ஊரில் வைத்தால் நமது ஊருக்கு தீங்கு நேரும்” என்று தங்கள் சாதி மக்களை அணிதிரட்டினர். இக்காரணத்தால் “துப்பாக்கிச்சூடு நடத்துவோம்” என்று மிரட்டி தாழ்த்தப்பட்ட மக்களை சிலை வைத்து வழிபடவிடாமல் திருப்பி அனுப்பியது போலீசுப் படை.

தங்கள் சாதி ஆதிக்கத்தையே கேள்வி கேட்கத் துணிந்துவிட்டபடியால், தாழ்த்தப்பட்ட மக்களை தண்டிப்பதற்காக அவர்களுக்கு தங்கள் நிலங்களில் வேலை கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் போட்டனர் நாயுடு சாதிவெறியர்கள். நிலம் வைத்துள்ள ஒருசில தாழ்த்தப்பட்ட மக்களை, தங்கள் நிலங்களுக்குப் போகவிடாமல் பாதையை மறித்தனர்.

குறிஞ்சாங்குளம் நாயுடுகள் பக்கத்து ஊர்களிலுள்ள நாயுடு சாதியினரிடமும் இவ்வூர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டதால், அம்மக்கள் வேலையில்லாமல் பட்டினியால் துயரப்பட்டனர். வெகுதூரம் சென்று விவசாய மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை வேலைகளுக்கு சென்றனர்.

காந்தாரி அம்மன் கோயில் நிலத்தை குப்பைக் கொட்டுவதற்கும் மலம் கழிக்கவும் பயன்படுத்தத் தொடங்கினர் நாயுடுகள். இதற்கெதிராக அளித்த புகார்களால் பயனேதும் இல்லை. நடவடிக்கை எடுக்க முயன்ற ஒரு இன்ஸ்பெக்டரும் அடுத்த நாளே இடமாற்றம் செய்யப்பட்டார் என்றால், சாதிவெறியர்களின் செல்வாக்கை உணரமுடியும்.

அமைதிப்பேச்சு வார்த்தைகள் பல முறை நடத்தியும் நாயுடு சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் உரிமைக்கு அனுமதி கொடுக்கவே இல்லை. கடைசியில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தலைவர் வை.பாலசுந்தரம், 11.01.1991க்குள் சிலையை வைக்காவிடில் தானே முன் நின்று காந்தாரி அம்மன் சிலையை வைக்கப்போவதாக அறிவித்து பிரச்சாரம் செய்தார்.

இச்சூழலை தடுப்பதற்காகவே அமைதிப்பேச்சுவார்த்தை குழு உருவாக்கப்பட்டு, 05.01.1991 அன்று கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு வை.பாலசுந்தரம் வரவேண்டாம் என்று தாழ்த்தப்பட்ட மக்களை வற்புறுத்தி தந்தி அடிக்க வைத்தனர் அதிகாரிகள்.

அக்கூட்டத்தில் நாயுடுகளின் சார்பாக, அன்று தி.மு.க. தலைவர்களில் ஒருவராக இருந்த வை.கோபால்சாமியின் தம்பி வை.ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பில் கலந்து கொண்ட வழக்குரைஞர் ராமராஜ் (முன்னாள் நீதிபதி), ரவிச்சந்திரனின் ஆட்சேபனையால் வெளியேற்றபட்டார். அக்கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான, அந்த இடத்தில் பாதியை நாயுடு சாதியினருக்குக் கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் உட்பட அனைவரும் கட்டப்பஞ்சாயத்து செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்கு உடன்படவில்லை.

இதற்குப் பழிவாங்கும் விதமாக, வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிய தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வெடிகுண்டுகளை வீசினர் நாயுடு சாதிவெறியர்கள். அம்மக்களின் வீடுகளை சூறையாடி ஊரைவிட்டே துரத்தினர். போலீசோ இரு தரப்பின் மீதும் பெயருக்கு வழக்கு பதிவுசெய்துவிட்டு அமைதியாக இருந்தது. நாயுடு சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொல்வதற்காக தங்கள் சாதியினரிடம் பணவசூல் செய்தது போலீசுக்கு தெரிந்தபோதும் அமைதியாகவே இருந்தது.

14.03.1992 அன்று  தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலரையும் கொல்வதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு அவர்களை பின்தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதில் சுப்பையா, சக்கரைப்பாண்டி, அன்பு, அம்பிகாபதி ஆகியோர் மட்டும் தப்பிக்க முடியவில்லை. அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கழுத்தறுத்து கொல்லப்பட்டார்கள்.

சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலை வலுக்கட்டாயமாக வீடுகளில் கொண்டு வந்து ஒப்படைத்த போலீசு, தனித்தனியாகக்கூட புதைக்கவிடவில்லை. இரண்டு, இரண்டு உடல்களாகப் புதைத்தனர். பல்வேறு கட்சிகளின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு நாயுடு சாதியைச் சேர்ந்த கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டபோதும் 2001-ம் ஆண்டு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.

இச்சம்பவங்களின்போது, நாயுடு சாதி வெறியர்களுக்கு ஆதரவாக வை.இரவிச்சந்திரனும் தற்போது தி.மு.க.வில் உள்ள கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் செயல்பட்டனர் என்று வழக்குரைஞர் இராமராஜ் தனது பேட்டிகளில் தெரிவிக்கிறார்.

இச்சம்பவத்தில், குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்று உள்ளது. காந்தாரி அம்மன் கோயில் சிலைநிறுவ முயன்றதற்காக ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே இந்து. மற்ற மூவரும் கிறித்துவர்கள். ‘இந்து’ கோயில் உரிமைக்காக கிறித்தவர்கள் பலியானர்கள்.

ஆனால் அப்போதும் சரி, இப்போதும் சரி பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் யாரும் ‘இந்துக்களுக்காக’ வரவில்லை. மாறாக, இதே காலகட்டத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி, “ஹரியின் புதல்வர்களே அயோத்திக்கு வாருங்கள், இராமனுக்கு கோயில் கட்டலாம்!” என்று அறைகூவினர்.

‘தமிழ்த்தேசியத்திற்குள்’ ஒளிந்திருக்கும் ஆதிக்க சாதிவெறி!

முதுகுளத்தூர், விழுப்புரம், உஞ்சனை, புளியங்குடி, கொடியன்குளம், பரமக்குடி போன்ற ஊர்களில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட மக்கள்மீதான தாக்குதல்கள் போல ஒன்றுதான் குறிஞ்சாங்குளம் படுகொலையும்.

தமிழ் மிண்ட் யூடியூப் சேனலில், தன்னுடைய சுயசாதி வெறியை வெளிக்காட்டிக் கொண்ட ‘தமிழ்த்தேசியவாதி’ வ.கவுதமன்.

இதைத் தற்போது வந்தேறிகளுக்கும் ஆதித்தமிழருக்குமான போராட்டமாக சித்தரிக்கின்றனர் செந்தில் மள்ளர், களஞ்சியம், வ.கவுதமன், சீமான் போன்ற ‘தமிழ்த்தேசியவாதிகள்’. இதன்மூலம் வரலாற்று அறிவும் நடைமுறை அனுபவமும் இல்லாத இணையவாசிகளிடம் தங்களை தமிழ்த்தேசிய தளபதிகளாக வெளிச்சம் போட்டுக் கொள்கிறார்கள்.

தெலுங்கையும் கன்னடத்தையும் தாய்மொழியாகக்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதே மொழிபேசும் ஆதிக்க சாதியினராலேயே ஒடுக்குப்படுகின்றனர். சாதிவெறிக்கு இனப் பற்றெல்லாம் கிடையாது.

இளவரசன் – திவ்யா ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறியர்களுக்கு இளவரசனும் தன் சகத் தமிழனம் என்ற இன உணர்வா இருந்தது. சமீபத்தில், வீரளூரில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அருந்ததியர் மக்களின் வீடுகளை, தமிழை தாய்மொழியாகக் கொண்ட வன்னியன் ‘இன உரிமை’ காரணமாகவா சூறையாடினான்!

ஒவ்வொரு இடங்களிலும் ஆதிக்க சாதிவெறியர்களைக் காப்பாற்றுவதற்குதான் இப்படிப்பட்ட ‘தமிழ்த்தேசியவாதிகள்’ புற்றீசலாக கிளம்பி இருக்கின்றனர். சாதியத்தை தமிழ்த்தேசியத்தோடு பிரிக்க முடியாதபடி பூணூலால் கட்டி வைத்திருக்கிறார்கள்.

குறிஞ்சாங்குளம் சம்பவத்தை ஒட்டி வ.கவுதமனிடம் தமிழ் மிண்ட் என்ற யூடியூப் சானல் சார்பாக, ஒரு நேர்காணல் நடைபெற்றது. அதில் நெறியாளரான கரிகாலன், “நீங்கள் ஏன் தமிழ்பேசும் மக்களிடம் உள்ள ஆதிக்க சாதிவெறியை கண்டிப்பதில்லை?” “தமிழர்கள் ஒன்றுபடத் தடையாக இருப்பது எது?” போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்.

இவைகளுக்கு நேர்மையாக பதில் சொல்லமுடியாமல் அம்பலப்பட்டுப்போன வ.கவுதமன், “நான் படையாச்சி சமூகத்தைச் சார்ந்தவன்” என்று வெளிப்படையாக தன் சாதிப் பெருமையை அடையாளப்படுத்திக் கொண்டதோடு, நெறியாளரான கரிகாலனைப் பார்த்து “நீ பறையர் குடியைச் சேர்ந்தவன்; அதனால்தான் இப்படி உள்நோக்கத்தோடு கொடூரமான கேள்விகளை கேட்கிறாய்” என்று இழிவாக பேசியிருக்கிறார்.

இவர்கள் சாதி ஒழிப்பில் தமிழ்த்தேசியத்தை காண்பவர்கள் அல்ல. சாதி ஆதிக்கத்தை எதிர்க்காமல் “வடுகன்”, “மலையாளி” என்று பிற தேசிய இன மக்களை பகைவர்களாக காட்டி இனவெறி தூபம் போடும் நச்சுகள். தாங்கள் சொல்லிக் கொள்ளும் தமிழ்த்தேசியத்திற்கே துரோகிகள் இவர்கள்.

சூத்திர சாதிவெறியைப் பாதுகாப்பதுதான் சமூகநீதியா?

“தலித்துகள் குறிஞ்சாங்குளத்தில் காந்தாரி அம்மன் கோயில் கட்டக்கூடாது; அதற்கு அனுமதிக்கமாட்டோம்” என சாதிவெறியன் காமாட்சி நாயுடு வெளிப்படையாக சமூக ஊடகங்களில் கொக்கரிக்கிறான். நான்கு பேரைக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றபின்னரும் அடங்காத சாதிவெறியுடன் சவால் விட்டுக்கொண்டிருக்கின்றனர் நாயுடு சாதிவெறியர்கள். அவர்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

குறிஞ்சாங்குளத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாக தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்துவதற்குக்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசு அனுமதி அளிக்கவில்லை. இதுதான் இந்த அரசின் யோக்கியதை.

“இந்த அரசின் யோக்கியதை” என்று சொல்லும்போது தற்போதைய மு.க.ஸ்டாலின் அரசை மட்டுமல்ல. இந்த முப்பதாண்டு காலமாக “சமூகநீதி ஆட்சி” என்ற பதாகையின் கீழ் தமிழகத்தை ஆண்ட தி.மு.க, அ.தி.மு.க. அரசாங்கங்களையும் அதிகார வர்க்கத்தையும் சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது.

மிகப்பெரிய அளவு மக்கள் போராடியதால் கைது செய்யப்பட்ட கொலைக் குற்றவாளிகளை நீதிமன்றம் சுலபமாக விடுதலை செய்திருக்கிறது. இனியும் நீதிமன்றங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? சாதிவெறியன் யுவராஜ் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்படமாட்டான் என்று நம்பாமல்தான் இருக்கமுடியுமா?

ஆதிக்க சாதிவெறிக்கு ஆப்பு அறைவது வர்க்கப் போராட்டமே!

இத்தனை ஆண்டுகளில், தலித் மக்கள்மீதான தாக்குதல்கள், ஆணவப்படுகொலைகள், தீண்டாமைக் குற்றங்கள் எதுவும் குறையவில்லை எல்லாம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. குறிஞ்சாங்குளம், வீரளூர் மட்டுமல்ல நாடு முழுமையும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை இதுதான்.

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் நீதி வழங்கியதாக வரலாறு இல்லை. இடஒதுக்கீடு உள்ளிட்ட சீர்திருத்தங்களின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அதிகாரம் பெறவுமில்லை. அதில் பலன்பெற்ற ஒரு சிலரும் தம் மக்களின் கோரிக்கைகளுக்காக நேர்மையாக நிற்பது கிடையாது.

ஆதிக்க சாதிவெறிக்கு ஒட்டுமொத்த இந்த அரசமைப்பே தூணாக இருந்து செயல்படும்போது இதற்குள் நின்று மட்டுமே தீர்வைத் தேடுவதும் போராடுவதும் மடமையல்லவா?

படிக்க :

வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி !

தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் : என்ன செய்யப் போகிறது அரசு ?

“ஆதிக்க சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்.” “வன்கொடுமை செயல்களில் ஈடுபட்ட சாதிவெறியர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட வேண்டும்.” இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பிடம் மண்டியிட்டு இதுபோன்றதொரு ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது. இந்த கட்டமைப்புக்கு வெளியே, ஒரு புதிய ஜனநாயகத்திற்கான வர்க்கப் போராட்டத்தை நடத்தும் போதுதான் இவை சாத்தியம்.

தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் இதே அரசமைப்புதான் பார்ப்பன மேலாதிக்கமாக பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையும் பறிக்கிறது. எட்டுவழிச்சாலையாக, சிப்காட்டாக ஆதிக்க சாதி விவசாயிகளின் நிலத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் போடுகிறது. மீத்தேன் வாயுவாக எரிக்கிறது. காசு உள்ளவனுக்குத்தான் கல்வி என்று நீட்-புதிய கல்விக் கொள்கையாக திணிக்கப்படுகிறது. பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை உயர்வாக நம் தலையில் இறங்குகிறது.

ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கையில், ஒட்டுண்ணியாய் அதில் பங்குபெறுபவர்கள்தான் சாதிவெறியர்கள். நம்மையும் சேர்த்து ஒருவன் உறிஞ்சிக் கொண்டிருக்கையில், அடுத்தவனை ஒடுக்க பீற்றுப் பெருமை தேடுகிறது ஆதிக்க சாதிவெறி. இதை ஆதிக்க சாதி உழைக்கும் மக்கள் உணர வேண்டும்.

சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதும் வேறுவேறல்ல. சாதி ஆதிக்கத்திற்கு ஆப்பு அறையாமல் வர்க்க ஒற்றுமை சாத்தியப்பட்டதில்லை. வர்க்க ஒற்றுமை சாத்தியமான இடத்தில் சாதிவெறி கொட்டமடிப்பதில்லை. இதற்கு மாறாக, வர்க்கப் பார்வையற்ற ‘சாதி ஒழிப்பு’, அடையாள அரசியலாக சென்று சாதியை மேலும் இறுக்கப்படுத்தியதுதான் வரலாறு.

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்தபோதும் பின்பு அது கைவிடபட்டபோதும் காணப்படும் தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களே இரண்டுக்கும் சாட்சி!


மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க