இந்தியாவில் குறைந்து வரும் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை விகிதம் !
வேலை கிடைக்காததால் வேலை தேடுவதின்மீது நம்பிக்கை இழந்து, வேலை தேடுவதையே நிறுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை இரண்டுமே குறைந்துள்ளது.
2019-க்கு பிறகு வேலையின்மை மிகவும் தீவிரமாகி உள்ளது. வேலையின்மையாலும் கடன் சுமையாலும் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதற்கு இடையில் வெளிவந்த ஆக்ஸ்பார்ம் அறிக்கை இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை பற்றிய தரவை வெளியிட்டது. அதில் வெறும் 10 சதவிதம் பணக்காரர்களிடம் 45 சதவிதம் சொத்துக்களும், 50 சதவிதம் மக்களிடம் வெறும் 6 சதவிதம் சொத்துக்கள் மட்டுமே உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து CMIE (இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்) ஒரு தரவு வெளியிட்டுள்ளது. அதில், கோடிக்கணக்கான மக்கள் வேலைதேடி வெளியேறி கிராமப்புற இந்தியாவில் பரிதாபமாக வாழ்ந்து வருகின்றனர் என்றும், மார்ச் மாதத்தில் தொழில்துறை சார்ந்த வேலைகள் 76 லட்சம், உற்பத்தித் துறையில் 41 லட்சம், கட்டுமானம் 29 லட்சம் மற்றும் சுரங்கத் துறைகளில் 11 லட்சம் வேலைகள் குறைந்துள்ளது என்றும் இந்த தரவில் கூறப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் இருந்து 38 லட்சம் குறைந்து 42.2 கோடியாக உள்ளது என்று இந்த தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் 36.7 சதவிதத்திலிருந்து மார்ச் மாதத்தில் 36.5 சதவிதமாக வேலைவாய்ப்பின் விகிதம் குறைந்துள்ளது. பிப்ரவரியில் 8.1 சதவித்திலிருந்து மார்ச் மாதத்தில் 7.6 சதவிதமாக வேலையின்மை ஆனது குறைந்துள்ளது.
காரணம், வேலை கிடைக்காததால் வேலை தேடுவதின்மீது நம்பிக்கை இழந்து, வேலை தேடுவதையே நிறுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை இரண்டுமே குறைந்துள்ளது.
பிப்ரவரியில் உற்பத்தி 39.9 சதவிதத்திலிருந்த தொழிலாளர்களின் விகிதம் மார்ச் மாதத்தில் 39.5 சதவிதமாக குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் ஏப்ரல் – ஜூன் 2021 கொரோனா இரண்டாவது அலையின்போது பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட குறைவாக உள்ளது. இதுவே வேலைவாய்ப்புகளின் வளர்ச்சியின் போதாமையை பிரதிபலிக்கிறது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இருந்து இந்த தரவானது வெளிவந்துள்ளது.
கார்ப்பரேடின் நலனுக்காக மட்டுமே பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த ஒன்றிய அரசிற்கு, மக்களின்மீது எந்தவித அக்கறையும் கிடையாது என்பதையே இந்த தரவானது புலப்படுத்துகிறது.