வ்வொரு குடியரசு நாளிலும் ஒன்றிய அரசு அலங்கார, ஆடம்பர அணிவகுப்பினை நடத்தும். ஒருபுறம் இராணுவ அணுவகுப்பு, இராணுவ தளவாடங்களுடனும் மறுபுறம் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வண்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் அணிவகுப்பில் பங்கேற்கும். ஒன்றிய அரசாங்கமே மாநிலங்களின் அலங்கார வண்டிகளைத் தெரிவு செய்யும். இந்த 2022-ம் ஆண்டு மேற்குவங்கம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் அலங்கார வண்டிகளை புறக்கணித்து விட்டது. 12 அலங்கார வண்டிகள் மட்டுமே இம்முறை அனுமதிக்கப்பட்டது. கேரள அலங்கார வண்டி வழக்கில், வேறு ஒரு அம்சமும் வெளிப்பட்டது. அலங்கார வண்டிகள் தேர்வுக்குப் பொறுப்பான ஜூரி (பாதுகாப்பு அமைச்சர்) கேரள அரசு நாராயண குரு பற்றிய அலங்கார வண்டிக்குப் பதில் அதே கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கரரைப் பற்றிய அலங்கார வண்டியை தயாரித்துக் கொண்டு வந்தால் அனுமதிக்கிறோம் என ஆலோசனையும் வழங்கினார். ஆதி சங்கரர் இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்பதால் அந்த அலங்கார வண்டியை அணிவகுப்பிற்குக் கொண்டு வாருங்கள் என்று கருத்தும் தெரிவித்தார். 2017லிலிருந்து கேரள அலங்கார வண்டிக்கான அனுமதி மறுப்பு இது மூன்றாவது முறையாகும்.
நாராயண குருவுக்கு பதில் ஆதி சங்கரரைப் பற்றிய அலங்கார வண்டி என்று பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ஆலோசனையின் பின்புலத்தில் மோடி அரசாங்கத்தின் ஆழ்ந்த திட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் குறிப்பாக இந்து ராஷ்ட்ரம் நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த மிக உயர்வான இந்த இருவருமே நேரெதிரான, முரண்பட்ட சமூகக் கருத்துக்களைக் கொண்டவர்கள். நாராயண குரு ‘ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள்’ கொள்கைக்காக நின்றவர். சங்கராச்சாரியோ பிறப்பிலேயே ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட பார்ப்பனிய மேலாதிக்கக் கொள்கைகளைக் கொண்டவர்.
ஆதி சங்கரர் 8-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அக்கால கட்டத்தில் புத்த மதக் கொள்கைகள் சமூகத்தில் மேலோங்கியிருந்தன. சாதி சமத்துவக் கொள்கையையும், ‘இந்த உலகம் உண்மையானது’ எனவும் போதித்து, மக்களின் துயர் துடைக்கப் போராடியது. ஆதி சங்கரரோ இதற்கு நேரெதிராக ‘உலகே மாயம்’ எனவும் பிரம்மம் மட்டுமே உண்மை எனவும் வாதிட்டார். புத்த மதக் கொள்கைகளை கடுமையாக மறுத்து சவால் விட்டதோடு, அதை இழிவு படுத்தினார். புத்த மதத்தை, புத்த தத்துவங்களை இந்தியாவிலிருந்தே துடைத்தழித்ததில் இவரது கருத்துக்களுக்கும், இதை ஆதரித்தவர்களுக்கும் முக்கிய பங்குண்டு.
படிக்க :
♦ குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
♦ ‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!
இவர் துவாரகா, பத்ரிநாத், ஜகன்னாத பூரி மற்றும் சிரிங்கேரி என இந்தியாவின் நான்கு திசைகளிலும் திக்குக்கு ஒன்று என நான்கு மடங்களை நிறுவினார். (இதிலே காஞ்சி சங்கர மடம் இல்லையே என்பவர்களுக்கு! மற்ற நான்கு மடாதிபதிகளும் காஞ்சி மடத்தை சங்கரர் நிறுவவில்லை எனவும், அது திருட்டு மடம் எனவும் சொல்கிறார்கள்! சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த காஞ்சி மடத்துக்கு கும்பகோண மடம் எனத் திருநாமம்! இந்த மடங்கள் பற்றியே தனியே எழுத வேண்டும்!. புத்த மடாலயங்களைப் பின்பற்றி அதன் வடிவில் நிறுவப்பட்டவை. ஆனால் தத்துவ ரீதியாக நேரெதிரான கொள்கை கொண்டது. புத்த தத்துவம் பொருள் முதல்வாத அடிப்படையிலானது. ஆதி சங்கரரின் தத்துவமோ கருத்து முதல்வாத அடிப்படையிலானது. புத்த தத்துவம் சமத்துவத்திற்கானது. ஆதி சங்கரரின் தத்துவமோ பிறப்பிலேயே உயர்வு தாழ்வையும், சாதி அடுக்கையும் ஆணாதிக்கத்தையும் கொண்ட பார்ப்பன கொடுங்கோண்மையைக் கொண்டது.
நாராயண குரு ஆழ்ந்த மனிதாபிமானம் மிக்கவர். அவரது வளர்ச்சிப் போக்கில் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். யோகாவைக் கடைப்பிடித்தார். 1888-ல் தத்துவத்தைத் தேடிய பயணத்தில், அருவிப்புரம் வந்து, அங்கு தியானத்தில் ஆழ்ந்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில், ஆற்றிலிருந்து ஒரு பாறையை எடுத்து, அதை புனிதப்படுத்தி, அதை சிவனது சிலை என்றார். இந்த நடவடிக்கை பிற்பாடு அருவிப்புரம் பிரதிஷ்டை என அறியப்படுகிறது. அக்கால கட்டத்தில் இது மிகப்பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக ‘உயர்’ சாதி பார்ப்பனர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது.
பர்ப்பனர்கள் நாராயண குருவுக்கு சிலையை புனிதப்படுத்தும் தகுதியோ, உரிமையோ இல்லை எனக் கூறி ஏற்க மறுத்தனர். இதற்கு பதிலடியாக “இது பார்ப்பன சிவா இல்லை, ஈழவ சிவா” எனக் கூறினார் குரு. இந்த மேற்கோள் பிற்பாடு மிக பிரபலமானது. சாதியை எதிர்ப்பதற்குப் பயன்பட்டது. நாராயண குரு சாதிய அமைப்பை ஒழிக்க தனது வாழ்வை அர்ப்பணித்தார். இவரது நடவடிக்கைகள் ஆழப் பதிந்து போன சாதீய அமைப்பை ஒழிப்பதற்கான நடைமுறைக்கானதாகும்.
1904-ம் ஆண்டில் வர்காலா அருகில் உள்ள சிவகிரி என்ற இடத்திற்கு தனது இருப்பிடத்தை நாராயண குரு மாற்றிக் கொண்டார். இந்த இடத்தில் சமுதாயத்தில் ஆகக் கடைக்கோடி மட்டத்தில் வசிப்போரின் குழந்தைகள் இலவசமாகப் பயில பள்ளி ஒன்றை நிறுவினார். இது சாதிய ஒடுக்குமுறை நிலவும் பின்புலத்தில் ஒரு புரட்சிகர நடவடிக்கையாகும். மகாராட்டிரத்தில் தலித் குழந்தைகள் பயில பள்ளிகளைத் தொடங்கிய ஜோதிராவ் பூலேயின் நடவடிக்கைகளுக்கு இணையானது. சாதிய முறைக்கு எதிரான போராட்டத்தில் நவீன கல்வியானது மிகப்பெரும் விடுதலைக்கான சக்தியாகும். அன்றைக்கு ஆதிக்க சாதியினர் மட்டுமே கல்வி கற்கும் சிறப்புரிமை பெற்றிருந்த நிலைமையில், இதற்கு நேரெதிராக எல்லா சாதியினரும் இவரது பள்ளியில் படிக்க வரவேற்கப்பட்டனர். 7 ஆண்டுகள் கடந்து 1911-ல் நாராயண குரு அங்கு ஒரு கோயில் கட்டினார். பின் 1912-ல் மடம் ஒன்றை கட்டினார். இவை அனைத்து  சாதியினருக்கும் திறந்து விடப்பட்டது. பிறகு திரிச்சூர், கன்னூர், அன்சுதெங்கு, தலசேரி, கோழிக்கோடு மற்றும் மங்களூரு போன்ற இடங்களிலும் கோயில்கள் கட்டினார். இது அம்பேத்கார் பிந்தைய காலத்தில் முன்னெடுத்த கலாரம் கோயில் நுழைவுப் போராட்டத்தை நினைவு படுத்துகிறது. ஆதிக்க சாதியினர் இக்கோயில் நுழைவுப் போராட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
நாராயண குருவின் நடவடிக்கைகள் பார்ப்பனியக் கொடுங்கோண்மைக்கு சவாலாக இருந்தது. அவர் சாதியத் தடைகளை உடைத்தெறிய முயன்றார். இவை நிலவும் சாதிய முறைகளுக்கு எதிரான முக்கிய இயக்கங்கள் ஆகும். தற்போது அதிகாரத்தில் உள்ள ஒன்றிய அரசாங்கமானது கடந்த காலத்தை, அப்போது நிலவிய சாதீய படிநிலையை, பார்ப்பனிய கொடுங்கோண்மையை புகழ்ந்து விதந்தோதுகிறது. பார்ப்பன மதத்தை இந்து மதம் என உயர்த்திப் பிடிக்கிறது. இதை வேத மதம் அல்லது சனாதன (எல்லா காலத்திற்குமானது, காலம் அறிய முடியாதது) தர்மம் எனப் புகழ்கிறது. ஆதி சங்கரர் இந்த உயர்ந்த ஆன்மீக பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற, மிகப் பெரும் ஆன்மீகப் பெரியவர் என புகழ்கிறது.
இந்திய வரலாறு என்பது புத்தர் முன்வைத்த சமத்துவத்துக்கும், வேத பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடித்த சாதீய அடுக்கு முறைக்கும் அல்லது அவர்கள் கூறும் சனாதன தர்மம் என்பதற்கும் இடையிலான இடைவிடாத பகைமையும் போராட்டமுமே என அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். தற்போது வலதுசாரிகள் ஆட்சியில் இருப்பதால் ஆதி சங்கரரை உயர்த்திப் பிடிப்பதும், அதே சமயம் பொருள்முதல்வாத பாரம்பரியத்தைக் கொண்ட புத்தா, சார்வாகா போன்றவர்களைப் புறக்கணிப்பதும் எனச் செய்கின்றனர். இதில் சுவாரசியமானது என்னவென்றால் அரசியல் தளத்தில் நாராயண குருவை பாஜக அங்கீகரிக்கிறது. ஆனால் இது முற்றிலும் ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டும்தான், ஒரு அடையாளத்துக்கு மட்டும்தான். ஆனால், உண்மையான அங்கீகாரம் என வரும்போது நாராயண குருவை முற்றாகப் புறக்கணிக்கின்றனர். தற்போதைய நாராயண குருவைக் கொண்ட கேரள அலங்கார வண்டியைப் புறக்கணித்தது, இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஃப்ராண்டியர் வார இதழில் வந்த கட்டுரை  

தமிழாக்கம் : நாகராசு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க