தீபாவளி, பொங்கல் பல்வேறு பண்டிகை நாட்களின்போது, செய்தித்தாளில் இரண்டு விஷயங்களை தவறாமல் காண முடியும். ஒன்று விடுமுறையின் முந்தைய நாள் கோடிக்கணக்கில் டாஸ்மாக் விற்பனை சாதனைகள். இரண்டாவது, போதையில் கணவன் மனைவியை கொன்றது, நண்பரையே வெட்டிக் கொன்றது போன்ற செய்திகள். இச்செய்தியைப் படித்துவிட்டு தனிநபர்களின் பிரச்சினை என்று நாம் கடந்து செல்வதும் உண்டு.
ஆனால், டாஸ்மாக்கினால் பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதும், பல தாய்மார்கள் தமது கணவரையும் பிள்ளைகளையும் இழந்து நிர்கதியாய் நிற்பதும், தனிநபர் பிரச்சினை அல்ல; இந்த சமூகத்தை பாதிக்கின்ற பிரச்சினை; இந்த அரசு மக்களை திட்டமிட்டே சீரழிக்கும் பிரச்சினை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
தமிழகம் முழுவதும் 5,380 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் தினந்தோறும் சுமார் 90 முதல் 100 கோடி வரை வருமானம் வருகிறது. பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் அதிக அளவில் மது விற்பனை நடப்பது வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 1, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.52.2 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடி வசூல் அடைந்துள்ளது. இதில் கள்ளத்தனமாக விற்பதற்கு பெட்டி பெட்டியாகவும், கோணிப் பைகளிலும் வாங்கி சென்று, போலீசுக்கு மாமுல் கொடுத்துவிட்டு அதிக விலைக்கு விற்போர் பட்டியல் தனிக்கதை.
படிக்க :
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
மூடு டாஸ்மாக்கை ! வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்
டாஸ்மாக் வசூலைப் பற்றி பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். அந்த டாஸ்மாக்கினால் குடித்து சீரழிந்து தமது வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கடந்த மே 2-ம் தேதி பத்திரிகையில் வந்த செய்திகளை சற்று கவனிப்போம்.
சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் என்கிற பாபு, அருண், அதே பகுதியை சேர்ந்த தினேஷ், குமார், கார்த்தி, லோகேஷ், பாபு ஆகியோர் நண்பர்கள். இவர்கள் தினமும் திருவான்மியூர் கடற்கரையில் குடிப்பது வழக்கம். அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்துக் கொண்டிருந்தபோது போதை தலைக்கு ஏறியதும் தினேஷ் மற்றும் அருணுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது சண்டையில் போய் முடிந்திருக்கிறது.
அதே கும்பல் மீண்டும் மே 1 அன்று குடித்துவிட்டு அவர்களுடைய செட்டில் உள்ள குமார் என்பவரது தாயாரின் 16-ம் நாள் காரிய நிகழ்விற்கு சென்றபோது குடிபோதையில் அருண் என்ற இளைஞன் தனது செருப்பை தூக்கி வீசியுள்ளார். அது தினேஷ்-ன் சாப்பாட்டு இலையில் வந்து விழுந்துள்ளது. இதில் இருவரும் போதையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது அருணுக்கு ஆதரவாக சதீஷ் குமார் என்ற இளைஞர் வந்து தினேஷை தாக்கியுள்ளான். இதனால் வேகவேகமாக வீட்டிற்கு சென்ற தினேஷ் தமக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிதீர்க்கும் விதமாக தமது சொந்த நண்பர்களையே கொல்வதற்காக தேடிச் சென்றுள்ளான்.
சதீஷ்குமார், அருணும் அவரது கண்ணில் பட்டனர். இதில் தினேஷ் கையில் கத்தியை பார்த்தவுடன் அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளனர். அவர்களை விரட்டி மடக்கி பிடித்த தினேஷ் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.  அதில் இருவரும் இறந்துவிட்டனர்.
இதேபோல், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த முகிலன் என்ற இளைஞருக்கும் பிரதாப் என்ற இளைஞருக்கும் ஒரு ஆண்டிற்கு முன்பாகவே ஒரு நிகழ்சியில் சண்டை ஏற்பட்டுள்ளது.
தற்போது டி.எம்.எல் காலனியில் உள்ள ஒரு பெட்டிக் கடைக்கு போதையில் போன முகிலன், பிரதாப்புடன் சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரதாப்பும் அவரது உறவினரும் முகிலனை வெட்டியுள்ளனர். இவர்களிடமிருந்து முகிலன் தப்பித்து சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்  மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தபோது, பிரதாப்பின் அண்ணனும், அவரது உறவினர்களும் முகிலனை தேடிவந்து, சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகிலன் உயிரிழந்தார்.
இதேபோல் சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த தியாகராஜன் ஆட்டோ டிரைவர். இவர் ஒழுங்காக வேலைக்கு போகாமல் தினந்தோறும் குடித்துவிட்டு வந்ததால் இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டையில், அவரது மனைவியை சமையல் செய்ய பயன்படுத்தும் கத்தியால் குத்திக் கொண்டுள்ளார்.
இவ்வாறு நாள்தோறும் டாஸ்மாக் போதையினால், கனவன் – மனைவி, நண்பர்களுக்கு இடையே நடக்கும் படுகொலைகளும், சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. பெருவாரியான மக்களின் வாழ்வை சீரழிக்கும் இந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த கட்சிகளோ, இந்த டாஸ்மாக் வசூல் மூலம் கல்லாக் கட்டுகின்றன.
சில தினங்களுக்கு முன்பு நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வு துறை குறித்து பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில், டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுவோம் என்று வாக்குறுதி கொடுக்கவில்லை என்று திமிர்த்தனமாக பேசினார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட பெருவாரியான கட்சிகள் பூரண மதுவிலக்கு என்று முன்வைத்தனர். ‘மூடு டாஸ்மார்க்கை’ என்ற இயக்கம் சூராவளியாய் சுழன்றடித்த காலம் அது.
படிக்க :
டாஸ்மாக்கை மூடிடு !! || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ
ஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு ! || கருத்துப்படம்
மது ஒழிப்புப் போராளி, ஐயா சசிபெருமாள் மரணத்தை ஒட்டி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போர்க்குணமான போராட்டத்தை ஒடுக்கியது, மாணவ, மாணவிகளை கடுமையாக தாக்கியது போலீஸ். மாணவர் போராட்டங்களும், மக்கள் அதிகாரம் அமைப்பின் போராட்டங்களும் பெருவாரியான மக்களிடத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கருத்தை விதைத்தது.
மக்களிடம் ஓட்டு வாங்க இந்த கோரிக்கையை வைத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்துதான் பாசிஸ்ட் ஜெயலலிதா கூட படிப்படியாக நாங்கள் மதுக்கடைகளை மூடுவோம் என்று பேச வைத்தது மக்கள் போராட்டங்கள்.
அன்று அதிமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று பேசிய திமுக, இன்று நாங்கள் டாஸ்மாக்கை மூடுகிறோம் என சொல்லவில்லை என்று திமிராக பேசுகிறது. இனியும் அரசை நம்பி பயனில்லை, உழைக்கும் மக்களை அணிதிரட்டி போராடுவதன் மூலமே டாஸ்மாக் கடைகளுக்கு முடிவுகட்ட முடியும்.
இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புமாஇமு, தமிழ்நாடு.
9444836642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க