கர்நாடக கல்வித் துறையால் திருத்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான கன்னட பாடப் புத்தகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரின் உரை சேர்க்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உள்ள பேச்சு “நிஜவதா ஆதர்ஷ புருஷா யாராகபேகு?” (ஒரு சிறந்த முன்மாதிரி யார்?) என்ற பாடத்தின்கீழ் வருகிறது.
ஹெட்கேவார் உரை பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் குறித்த பகுதி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி இலக்கியவாதிகளான ஏ.என்.மூர்த்தி ராவின் ‘வியாக்ரகீதே’, பி.லங்கேஷின் ‘முருக மாட்டு சுந்தரி’, சாரா அபூபக்கரின் ‘யுத்த’ போன்ற நூல்களும் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற பாடப் புத்தகங்களில் வேத அறிஞரான மறைந்த பன்னஞ்சே கோவிந்தாச்சார்யா மற்றும் ஷதாவதானி ஆர்.கணேஷின் “சிரேஷ்ட பாரதிய சிந்தனைகள்” ஆகிய நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஹெட்கேவாரின் உரையைச் சேர்ப்பது அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு (AIDSO) மற்றும் அகில இந்திய சேமிப்புக் கல்விக் குழு (AISEC) போன்ற அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தத்தை பாடப் புத்தகங்களில் திணிக்க மாநில பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது AIDSO.
படிக்க :
உத்தரகாண்ட் : பள்ளி பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பகவத் கீதை !
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸின் கவிதை நீக்கம் !
கர்நாடக மாநிலத்தின் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், இந்தப் பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவார் பற்றி எதுவும் இல்லை என்றும், மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவரது பேச்சு மட்டுமே இடம் பெற்றுள்ளது என்று கூறினார்.
“சிலர் எல்லாவற்றையும் எதிர்க்க விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டுமே உண்மை என்று உணர்கிறார்கள். அவர்களின் சிந்தனையை மட்டுமே சமூகத்திற்குச் சொல்ல வேண்டும். அந்த உரையில், ஹெட்கேவார் சித்தாந்தம், மதிப்புகள் மற்றும் கொள்கைகளை ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். சமூகம் மற்றும் தேசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் பேசியுள்ளார். அதில் என்ன தவறு?” என்று அமைச்சர் கூறினார்.
கர்நாடகத்தில் ஹிஜாப் தடை, லவ் ஜிகாத், மசூதிகள் – தேவாலையங்கள் மீதான காவிக் குண்டர்களின் தாக்குதல், முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காவிக்குண்டர்களின் இந்துமதவெறி திட்டத்திற்கு மாணவர்கள் – இளைஞர்களை ‘உத்வேகப்படுத்தவே’ ஹெட்கேவார் போன்ற ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியர்களின் உரை சேர்க்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங்
வெள்ளைக்காரனிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து தப்பியோடிய சங்கி கூட்டத்தின் தலைவர்களை நல்லவர்கள் போல் சித்தரிக்க தொடர்ந்து முயற்சிக்கிறது பாஜக கட்சியும் மோடி அரசும். தான் ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளி பாடத் திட்டத்திலும், மத்திய பல்கலைக் கழகங்களிலும் ஆர்.எஸ்.எஸ்-ன் சாதிவெறி கொண்ட, மதவெறி கொண்ட, பெண்ணடிமைத்தனம் நிறைந்த புராண குப்பைகளை பாடத்திட்டங்களாக திணித்து வருகிறது. அறிவியல் பூர்வமான பாடப்பகுதிகளையும், முற்போக்காளர்கள் – பகத்சிங் போன்ற புரட்சியாளர்களையும் காவி திரையிட்டு மறைத்து வருகிறது.
கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை திணிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். பிஞ்சுகளின் மனதில் மதவெறி – சாதிவெறியை புகுத்தும் பார்ப்பன பாசிஸ்டுகளை முறியடிக்க, மாணவர்களின் கண்களை (மூளையை) மங்கச் செய்யும் காவிப் புழுதியை தகர்க்க, கல்வி நிறுவனங்களை, காவி பயங்கரவாதிகளை உருவாக்கும் இடமாக மாற்ற நிலைக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச பாஜக அரசை வீழ்த்துவதே நம் உடனடி பணி.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க