பள்ளி தலைமை ஆசிரியர் மதிய உணவிற்காக சமைத்த மாட்டிறைச்சியை பள்ளிக்கு கொண்டு வந்த ‘மாபெரும் குற்றத்திற்காக’ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலம், கோல்பூர் மாவட்டம் லக்கிபூர் பகுதியில் உள்ள ஹுர்காசுங்கி நடுநிலை ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் தலிமா நெஸ்ஸா. மாநிலத்தில் உள்ள பள்ளிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான பயிற்சிகள் மே 11 முதல் மே 14 வரை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மே 14 அன்று பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களின் மதிய உணவிற்காக மாட்டிறைச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் தலிமா கொண்டு வந்திருந்தார்.
இந்த மாட்டிறைச்சி உணவிற்கு எதிராக பள்ளி நிர்வாகக்குழு போலீசின் புகார் அளித்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் 56 வயதுடைய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் மதிய உணவாக மாட்டிறைச்சியை பரிமாறியபோது ஊழியர்கள் “மன உலைச்சலுக்கு” ஆட்பட்டதாகவும், “இரு மத சமூகத்தினரும்” இதனால் வருத்தமடைந்ததாகவும் பள்ளி நிர்வாகக் குழுவின் புகாரில் கூறப்பட்டுள்ளது என்று போலீசு கூறியது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 295(A) (எந்த வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் அவர்களின் மத உணர்வுகளை தூண்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 153(A) (மதம், இனம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) (பிறப்பு, வசிப்பிடம், மொழி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) ஆகியவற்றின் கீழ் பள்ளி தலைமை ஆசிரியர் தலிமா நெஸ்ஸா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது அசாம் போலீசுத்துறை. தலைமை ஆசிரியை தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
படிக்க :
♦ இந்து பண்டிகையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்கள் : பாசிசத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் | வீடியோ
♦ கர்நாடகா : 10-ம் வகுப்பு பாடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரை புகுத்தும் காவிகள் !
“மே 16 அன்று நாங்கள் அவரை போலீசு நிலையத்திற்கு அழைத்து வந்தோம். விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அடுத்த நாள் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியது” என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மிருணாள் தேகா கூறினார்.
அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம், 2021-ன் திருத்தம், கால்நடை விற்பனை மற்றும் இறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கால்நடை இறக்குமதி – ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்து, கடந்த ஆறு ஆண்டுகளில் “சட்டவிரோத மாடு வணிகத்தில்” சம்பாதித்த சொத்துக்களை ஆய்வு செய்யவும், சோதனை செய்யவும், பறிமுதல் செய்யவும் போலீசுத்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்துக்கள், ஜெயின்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலத்தின் சில பகுதிகளிலும், கோவில் மற்றும் வைணவ மடங்களுக்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள்ளும் மாடு வெட்டுவதையும், மாட்டிறைச்சி விற்பனையையும் தடை செய்கிறது. மாட்டிறைச்சி தடை மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை.
பள்ளி தலைமை ஆசிரியர் மதிய உணவிற்காக மாட்டிறைச்சி கொண்டுவந்து உண்பதில் என்ன தவறு இருக்கிறது. அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? பள்ளிக்கூடங்கள் காவிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்பதைத்தான் இந்த கைது நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.
மாட்டிறைச்சி உணவு கொண்டுவந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கே கைது – சிறை என்பதுதான் நிலைமை என்றால், பள்ளியில் பயிலும் மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை காட்சிப்படுத்தி பார்க்க முடியும். ஆகவே, அசாமின் 31 சதவீதம் மக்களின் உணவாக இருக்கும் மாட்டுக்கறி மீதான காவிக் கும்பலின் தாக்குதலை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியது அவசியம்.

காளி