மதுரா : ஷாஹி ஈத்கா மசூதியை கரசேவை செய்ய எத்தனிக்கும் காவிகள் !
கிருஷ்ணன் இங்குதான் பிறந்தார் என்றும் இது கிருஷ்ண ஜென்ம பூமி என்றும் மதுரா மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை இடித்து கரசேவகம் செய்ய வழக்கு தொடுத்துள்ளது காவிக்கும்பல்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி. கடந்த மே 19 அன்று இந்துக் கடவுளான கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படும் கேசவ் தேவ் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டது என்ற புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளது காவிக் கும்பல். இப்பிரச்சினையை மையமாக வைத்து மசூதியை அகற்றுவதற்காக சமர்பிக்கப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதியளித்துள்ளது மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம்.
மதுராவில் உள்ள கேசவ் தேவ் கோயிலுக்கு அருகில்தான் ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது. இம்மசூதியை பிரச்சினையை போன்றே மொத்தம் ஒன்பது மனுக்கள் மதுரா நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தன.
கடந்த மே 12 அன்று, இந்த கிருஷ்ணா ஜென்மபூமி – ஷாஹி ஈத்கா மசூதி பிரச்சினை தொடர்பான அனைத்து வழக்குகளையும் நான்கு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று மதுரா நீதிமன்றத்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
அவ்வொன்பது வழக்குகளில் ஒன்றான, கத்ரா கேசவ் தேவ் கோயிலின் “குழந்தை பகவான் கிருஷ்ணரின் அடுத்த நண்பர்” என்று மனு தாக்கல் செய்துள்ளார் லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி.
1669 – 1670 ஆகிய ஆண்டுகளில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கிருஷ்ணரின் பிறந்த இடத்தில் ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டது. தற்போது, கிருஷ்ணா ஜென்மபூமி வளாகம், 13.37 ஏக்கர் பரப்பளவில், ஷாஹி ஈத்கா மசூதிக்கு அருகில் உள்ளது என்று மனுவில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ண பகவானை வழிபடுபவர்கள் என்ற முறையில், அவருடைய சொத்தை மீட்டெடுக்கக் கோரி வழக்குத் தொடர எங்களுக்கு உரிமை உள்ளது. கிருஷ்ண ஜென்மபூமியில் மசூதி தவறுதலாக கட்டப்பட்டுள்ளது. சொத்துப் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு சமரசம் ஏற்பட்டது. அதாவது, 1968-ம் ஆண்டில், கோயில் நிர்வாக ஆணையம் மற்றும் அறக்கட்டளை மஸ்ஜித் இத்கா ஆகியவற்றுக்கு இடையே ஒரு “சமரச ஒப்பந்தம்” கையெழுத்தானது. ஆனால், அந்த சமரசம் சட்டவிரோதமானது என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோபால் கண்டேல்வால் கூறினார்.
இப்பிரச்சினையில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும், 1991-ம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதாகக் கூறி, பல்வேறு நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பாபர் மாசூதி இடிப்பு வழக்கு மட்டும் விதிவிலக்காக இருந்தது.
2019 நவம்பரில் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் நீண்ட கால விசாரணையை உச்ச நீதிமன்றம் “இடித்தவனுக்கே நிலம் சொந்தம்” என்று தீர்ப்பளித்து முடித்து வைத்தது. இந்த அநீதியான தீர்ப்பை தொடர்ந்து மதுரா மற்றும் காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாபர் மசூதி இடிப்பில் நடத்திக் காட்டிய செயல்பாடுகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளன காவிக் கும்பல்.
அதேபோல் தற்போது கியான்வாபி மசூதிக்குள் உள்ள ஓர் இடங்களில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று காவி பாசிஸ்டுகள் வழக்குகளை தொடுத்துள்ளனர். அவ்வழக்குகள் வாரணாசி நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படுகின்றன.
ராமர் இங்குதான் பிறந்தார் என்றும் இது ராம ஜென்ம பூமி என்றும் உத்தப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் இருந்த பாபர் மசூதியை இடித்த கரசேவக சங்கிக் கூட்டம்; அந்த கரசேவையை நியாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, தற்போது இராமர் கோயில் கட்டப்பட்ட அனுமதிவாங்கி கட்டத்துவங்கி விட்டார்கள் காவிகள்.
அதேபானியில் தற்போது கிருஷ்ணன் இங்குதான் பிறந்தார் என்றும் இது கிருஷ்ண ஜென்ம பூமி என்றும் மதுரா மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை இடித்து கரசேவகம் செய்ய வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கை நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இப்படி காவி பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட இலக்காக மதுராவின் ஷாஹி ஈத்கா மாசூதியை, கரசேவை செய்து இடிக்க களமிறங்கி விட்டது காவிக் கும்பல்.
முஸ்லீம் மக்களின் வழிபாட்டு தலங்களை இடிக்க மீண்டும் ஆயத்தமாகும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க உள்ளிட்ட காவி பாசிஸ்டுகளை பெரும்பான்மை இந்துக்கள் முன்வரிசையில் அணித்திரட்டி முறியடிக்க வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம்.