நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. சட்ட விதிகளை மீறி இரவு பகலாக இந்த கல்குவாரி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 14-05-22 அன்று இரவில் பெரும் ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதில் விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன், நாட்டார் குளத்தை சேர்ந்த விஜய் ஆகிய இரு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளையார்குளத்தை சேர்ந்த செல்வத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
ஆயர்குளத்தை சேர்ந்த லாரி டிரைவர் முருகனின் உடலும் எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன், காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து பாறைகள் சரிவதாலும், மழை பெய்து கொண்டிருப்பதாலும் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
படிக்க :
♦ மாத ஊதியம் வழங்காமல் தூய்மைப் பணியாளரை மரணத்திற்கு தள்ளிய அரசு !
♦ சென்னை துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !
இக்கோர சம்பவம் நடைபெற்றதை கேள்விப்பட்டு சுற்றியுள்ள பகுதி மக்கள் ஒன்று கூடினர். அவர்களை அப்பகுதிக்குள் வரவிடாமல் தடுத்த போலீசுத்துறை போராட்டம் செய்தவர்களை கைது செய்தது. அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தது. இவ்வளவு தூரம் போலீசுத்துறை கடமையாற்றுவதற்கான காரணம் இந்த கல்குவாரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்கிறார்கள் மக்கள்.
பாதிக்கப்பட்ட அனைவரும் கூலி ஏழைத் தொழிலாளர்கள். 30 அடி தோண்ட வேண்டும் என்கிற விதிகளை மீறி சுமார் 400 அடி வரை தோண்டப்பட்ட இந்த கல்குவாரியில் மலைகளை உடைத்து கிரசர் இயந்திரத்தின் மூலம் ஜல்லியாகவும், எம்சாண்ட் மணலாகவும் எடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று கொண்டிருந்தது.
சுற்றியுள்ள பகுதி மக்கள், சட்ட விதிகளை மீறி தொடர்ந்து வெடி வைப்பதால் வீடுகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசடைவதாகவும் அதனால் கல்குவாரிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. காரணம் கல்குவாரியின் கொள்ளையில் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பதுதான்.
ஆனால், சம்பவம் நடந்தபிறகு தங்களை யோக்கியவான் போல காட்டிக் கொண்டு போலீசுத்துறை மூலம் குத்தகைதாரர்களை மட்டும் கைது செய்தது அதிகாரவர்க்கம்.
இன்று உலகையே தன்பிடிக்குள் கொண்டு வந்திருக்கின்றனர் கார்ப்பரேட் முதலாளிகள். காடு, மலை, கனிம வளங்கள், இயற்கை, மனிதன் என அனைத்தையும் தன்னுடைய இலாபவெறிக்காக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏற்றார்போல் ஆளும் பாசிச அரசுகளும் இவை அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டங்களும் அவ்வாறே திருத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு தான் போட்டுக் கொண்ட சட்டங்களை தானே மதிக்காமல் நடந்து கொள்வதோடு, உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் பலி கொடுத்துக்கொண்டு இருக்கிறது அரசு. இந்த அரசுகளை நம்பாமல் இயற்கையையும் மனிதர்களையும் காக்க மக்கள் களத்தில் இறங்குவது ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும்.

மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம் – 9385353605