ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அராஜகத்தை கண்டிப்போம்!
பத்திரிகை செய்தி
2009-ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புக்கு எதிரான நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கு மே17 இயக்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதை மீறிகூட்டம் நடத்திய அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு போலீஸ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இச்செயலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
மே 22-ம் தேதி ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழித்த நாளை நினைவு கூரும் விதமாக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டம் நடத்த தமிழ்நாடு போலீஸ் துறையிடம் மே17 இயக்கம் அனுமதி கேட்டிருந்தது.
மெரினா கடற்கரையில் அனுமதி அளிக்க மறுத்த தமிழ்நாடு போலீஸ், இழுத்தடித்து பெசன்ட் நகர் கடற்கரையில் அனுமதி அளித்தது. அவ்வாறு அனுமதியளித்த பிறகு மே 22 காலையில் திடீரென அந்த அனுமதியை ரத்து செய்திருக்கிறது. இந்த அநீதியைக் கண்டித்தும் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நினைவு கூரும் விதமாகவும் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.
கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கு கூட இந்த அரசு அனுமதிக்காது என்றால் இதுதான் வாராது வந்த மாமணியான திராவிட மாடல் அரசா?
சென்ற பழனிச்சாமி ஆட்சியில் மெரினாவில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அன்றைய எம்.எல்.ஏ.க்கள், இன்றைய அமைச்சர்கள் நடத்திய போராட்டம் எல்லாம் மறந்து போனதா?
சில நாட்களுக்கு முன்பு நாடுகடந்த தமிழீழம் தொடர்பான அமைச்சரவை கூட்டத்திலும் உள்ளே புகுந்த போலீசு அதில் கலந்து கொண்டவர்களை கைது செய்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் அவர்களுடைய உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கு உரிமையே இல்லை என்றால் இங்கு யார் ஆட்சி நடக்கிறது?
ஈழத் தமிழருக்காக போராட முடியாத நிலைதான் எடப்பாடி ஆட்சியிலும் மு.க.ஸ்டாலினின் ஆட்சியிலும் என்றால் எங்கே இருக்கிறது சமூக நீதி?
ஆகவே, மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த, தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த தமிழ்நாட்டு அரசை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. உடனே அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் எந்த கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன், தோழர் மருது
செய்தித் தொடர்பாளர் மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை 99623 66321.