மே 25 நக்சல்பாரி எழுச்சி நாள் : நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை?
1967-ம் ஆண்டு திரிபுவாத, நவீன திரிபுவாத திரைகளை கிழித்தெறிந்து இந்திய புரட்சிகர வானில் உதித்த நக்சல்பாரியை தான் நினைவூட்டுகிறது. ஆம் அது தான் நமது பாதையாக இருக்க முடியும். அதுதான் பாசிச அபாயத்தை முறியடித்து இந்திய புரட்சியை சாதிக்கும் வழியாக இருக்கிறது.
எந்தவொரு நிகழ்வையும் நினைவுகூர்வதென்பது அந்த நிகழ்வு சமகாலத்திற்கு எத்தனை பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதை பொருத்ததாகவே இருக்கிறது. அந்த நிகழ்வு எதைக் குறிக்கின்றதோ, அது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கும் பட்சத்தில், அது சமகாலத்திலும் அதிக முக்கியத்துவமுடையதாக உணரப்படுகிறது. அந்த வகையில் நக்சல்பாரி புரட்சி நாளான மே 25-ம் நாள் இந்திய கம்யூனிச வரலாற்றில் என்னென்றும் நினைவு கூரத்தக்கதாக இருக்கும். இமயமலை அடிவாரத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்துள்ள டெராய் பகுதியில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்தில் தொடங்கிய அந்த புரட்சி வசந்தத்தின் இடிமுழக்கமாக இந்திய வானில் வெடித்தது.
நக்சல்பாரி என்னும் கிராமத்தின் பெயர் வெறுமனே இந்தியாவில் ஆயுதப் புரட்சியின் குறியீடாக மட்டும் இருக்கவில்லை. ஏனெனில், அதற்கு முன்பு தெலுங்கானா போராட்டம் போன்ற ஆயுதப் புரட்சியை இந்தியா சந்தித்திருக்கிறது. ஆனால், அவையாவும் உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாக இருக்கவில்லை. திரிபுவாதத்திற்கு எதிரான போர்க்கொடியை அவை உயர்த்தவில்லை. இந்திய கம்யூனிஸ்ட்களின் துரோகத்தனமான நாடாளுமன்ற சமரச பாதையின் மாயையை துடைத்தெரிந்து, நவீன திரிபுவாதத்தின் பிடியிலிருந்து இந்திய புரட்சியை விடுவித்து உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைபற்றுவதற்கான வழிகாட்டியாக அமைந்தது என்ற வகையில்தான் நக்சல்பாரி புரட்சியின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. அது நிலவும் சமூக கட்டமைப்புடன் சமரசம் செய்துகொள்ளும் திரிபுவாதத்தில் இருந்து முறித்துக் கொண்டு, புரட்சிகர மார்க்சிய – லெனினிய வழியை பின்பற்றியது. இந்தியாவில் அரசியல் புரட்சிக்கான பாதையை திறந்து வைத்தது.
நக்சல்பாரி புரட்சி வெடித்த 1967-ம் ஆண்டு ஏகாதிபத்திய புதிய காலனிய இடைக்கட்டத்தில் இந்திய சமூக அரசியல் பொருளாதார நிலை என்னவாக இருந்தது? எத்தகைய முரண்பாடுகள் நக்சல்பாரி புரட்சியை கொண்டு வந்தது என்பதை புரிந்துகொள்வது அவசியம். அதன் வழியாகதான் இன்றைய நவ தாராளவாத மறுகாலனியாக்க இடைக்கட்டத்தில் இந்தியாவில் நக்சல்பாரி புரட்சி முன்வைத்த பாதையின் முக்கியத்துத்தையும், தேவையையும் விளங்கிக் கொள்ளமுடியும்.
000
முதலில் 1947-ம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக இருந்ததா? என்ற கேள்வி முக்கியமானது. அதை சுதந்திரம் என்று சொல்வதைவிட ஆட்சி மாற்றம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆங்கிலேய அரசிடமிருந்து, இந்திய நிலப்பிரபுக்கள் மற்றும் தரகு முதலாளிகளின் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் மாற்றப்பட்டது. அது காலனிய ஆட்சிக் காலத்தில் நிலவிய அரசு இயந்திரத்தை அப்படியே வரித்துக் கொண்டது. அதிகார மாற்றத்திற்கு பிறகும் இந்தியா அந்நிய மூலதனத்தை சார்ந்தே இருந்தது. மிக முக்கியமாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க மூலதனத்தை சார்ந்து இருந்தது.
அதிகார மாற்றத்திற்கு பிறகு சில ஆண்டுகள் வரை இந்திய ரூபாயின் மதிப்பு பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்கின் மதிப்பை சார்ந்திருந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வயது வந்த அனைத்து இந்திய குடிமக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையின் உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. 1935-ம் ஆண்டு ஆங்கிலேய காலனிய அரசு கொண்டுவந்த இந்திய அரசியல் சட்டத்திலிருந்து ஏறக்குறைய 250 பிரிவுகள் (மொத்தமுள்ள 395 பிரிவுகளில்) அச்சுப் பிறழாமல் அல்லது சொற்தொடர்களில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அன்றைய தினத்தில் இந்தியா போன்ற அரைக்காலனிய நாடு பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளை சார்ந்துதான் நின்றது. மிக முக்கியமாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை சார்ந்து இருந்தது. 1960-களில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தையும் சார்ந்து நின்றது. இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்தியாவில் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவோராய் இருந்த போதிலும் ஏகாதிபத்திய நாடுகள் மீதான சார்புநிலை என்ற சட்டகத்திற்கு உட்பட்டுதான் அதிகாரம் செலுத்த முடியும். இந்திய தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்புநிலை என்பது மிக முக்கியமாக ஏகாதிபத்திய மூலதனத்தின் மீதான சார்புநிலையாகும். அந்நிய மூலதனம், ஒருவகையில் தனியார் நேரடி முதலீடாகவும், மறுவகையில் “உதவி” என்ற சொல்லால் அழைக்கப்பட்ட கடன் மூலதனமாகவும் இருந்தது.
1957-ம் ஆண்டிற்கு பிறகு தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்கள் அந்நிய மூலதனத்தின் உடனான கூட்டு நிறுவனமாக இருக்கும் என்று அரசாங்கம் வலியுறுத்தியது. இந்த ஏகாதிபத்திய மூலதனத்தின் மீதான சார்புநிலை என்பது நாணயத்தின் ஒருபக்கம் மட்டும்தான். இந்த அந்நிய கடன் உதவிகள், மூலதனப் பாய்ச்சல்கள் எல்லாம் இந்திய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் அந்நியர்களுக்கு பெரும் செல்வாக்கை வழங்கியது.
இதிலிருந்து சொல்லிக்கொள்ளப்படும் இறையாண்மை என்பது இந்திய அரசுக்கு இருந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால், நேருவால் சோசலிசத்தின் பெயரால் கட்டப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் என்பது இந்திய பொருளாதாரத்தின் சார்பற்ற நிலையை, தனிச்சிறப்பை குறிக்கவில்லையா என்ற கேள்வியை ஒருவர் கேட்கலாம்? ஆனால், இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் எந்த அடிப்படை நோக்கத்திற்காக கட்டப்பட்டவை என்பதை பார்த்தால் இந்த நேருவிய மாயை கலைந்துவிடும். அதிகார மாற்றத்திற்கு பிறகு போதிய தொழிற்துறை வசதிகளும், தொழிற்துறை வளர்ச்சிக்கான கட்டுமானமும், பெரும் தொழிற்துறைகளும் இல்லாதது, தனியார் முதலாளிகளின் அதாவது ஏகாதிபத்தியத்தின் இந்திய கூட்டாளிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாகதான் கனரக தொழிற்துறை, தொலைதொடர்பு, போக்குவரத்து போன்ற வசதிகள் இந்திய அரசாங்கத்தால் செய்துதரப்பட்டது.
ஏனெனில் இந்திய தரகு முதலாளிகளுக்கு இதுபோன்ற அதிகம் மூலதனம் செலவாகும் துறைகளில் முதலீடு செய்யும் அளவுக்கு மூலதனமில்லை, மேலும் அது நீண்ட காலம் பிடிக்கும் லாபம் குறைவாக இருக்கும் துறைகள் என்பதால் அது தனியார் முதலாளிகளுக்கு தவிர்க்கப்பட்டது. இந்த தனியார் முதலாளிகளுக்கு மூலதனம் வழங்கதான் இந்திய பொதுத்துறை வங்கிகளும் உருவாக்கப்பட்டது. இந்த பொதுத்துறை நிறுவனங்களும் உள்கட்டுமானங்களும் கூட இந்திய மூலதனத்தால் அல்ல, மாறாக அந்நிய ஏகாதிபத்திய மூலதனத்தால், ஏகாதிபத்திய தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டது. இதுதான் நேருவிய பொதுத்துறையின் யோகிதை. அரசாகத்தால் கண்துடைப்புக்காக செய்யப்பட்ட நிலச் சீர்த்திருத்தங்கள் எந்த பயனையும் அளிக்கவில்லை என்று அரசாங்கமே ஒப்புக்கொண்டது.
இந்தியா பின்பற்றிய நிலவுடைமை மற்றும் தொழிற்துறை கொள்கை, ஒருபுறம், நிலமற்ற விவசாயக் கூலிகளையும், சிறு-குறு விவசாயிகவைளாயும் ஒட்டச் சுரண்ட நிலவுடைமையாளார்களுக்கு வசதி செய்துகொடுத்தது. மறுபுறம் நகரங்களால் மிகக்குறுகிய அளவிலான மேட்டுக்குடிகளை வளர்த்துவிட்டது. மீதமிருக்கும் 95% மக்கள் கடும் இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. 1962 இந்திய – சீனாப் போர்க்கு பின்பு பொருளாதாரம் மேலும் மோசமடைந்தது.
ஆனால், இதற்கு எதிராக மக்களை கிளார்ந்தெழவிடாமல் திசை திருப்ப கூட்டணி அரசாங்கங்களை அமைத்து சுரண்டல்காரர்களை பாதுகாத்தது திரிபுவாத, நவீன திரிபுவாத கட்சிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ(எம்). இந்த ஏகாதிபத்திய, தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சுரண்டல் அமைப்பை பாதுகாக்கும், போராடும் மக்களை ஒடுக்கும் நாடாளுமன்ற சமரச பாதையின் துரோகத்தனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி இந்திய புரட்சிக்கான உண்மையான பாதையா, விவசாயிகளின் தொழிலாளார்களின் எழுச்சிப் பாதையை முன்வைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் தோன்றியது தான் நக்சல்பாரி புரட்சி.அன்றைய ஏகாதிபத்திய புதிய காலனிய இடைக்கட்டத்தில், இந்தியாவிற்கு இறையாண்மை என்பது மருந்துக்குகூட கிடையாது என்பதை கண்டோம். இன்றைய ஏகாதிபத்திய மறு காலனிய இடைக்கட்டத்தில் இந்தியா இறையாண்மையுள்ளா நாடாக இருக்கிறதா? என்றால். இல்லை என்றே சொல்லமுடியும்.
இந்தியா தற்போது பன்னாட்டு கார்ப்பரேட்களின் நிதிமூலதன ஆதிக்கத்தின் பிடியில் இருக்கிறது. இந்தியாவின் இந்த பன்னாட்டு கார்ப்பரேட் நிதிமூலத சார்புநிலை என்பது, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது முதல் இராணுவ தளவாடங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் வரை சென்றுவிட்டது. இதைப்பற்றி விளக்க வேண்டுமென்றால், வால்யூம் புத்தகங்கள் எழுதவேண்டிருக்கும் என்பதால், சுறுக்கமாக ஒரு நிகழ்வை மட்டும் வைத்து இந்தியாவின் பன்னாட்டு நிதி மூலதன சார்புநிலையை விளக்கமுற்படுகிறோம்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் உலக அளவில் மிகக்கடுமையான ஊரடங்கை பின்பற்றியது இந்தியாதான். அதனால், மக்கள் பட்டினியில் கிடந்ததையும், புலம்பெயர் தொழிலாளார்கள் வொறுங்கால்களுடன் வெயிலில் நடந்தே கிராமங்களுக்கு சென்றதையும் நாம் மறந்திருக்கமாட்டோம். ஆனால், அத்தகைய இக்கட்டான நிலையிலும் அரசாங்கம் பொது சுகாதாரத்திற்காகவும், மக்களின் அடிப்படை தேவைக்காவும் கூட செலவு செய்ய மறுத்தது ஏன்? உலக அளவில் கொரோனா காலத்தில் செலவு செய்தில் கஞ்சத்தனமாக நடந்துகொண்டதில் இந்தியாதான் முதலிடம். ஏன் அரசாங்கம் செலவு செய்ய மறுத்தது? அதன் உண்மையா பின்னணி என்ன?
இந்தியா அந்நிய பன்னாட்டு மூலதத்தின் பிடியில் இருக்கிறது என்பதை முன்னரே கண்டோம். ஆனால், எந்த ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமும் ஏதேனும் ஒரு நாட்டில் வேர் கொண்டுள்ளது என்பதை நாம் காணத் தவறக்கூடாது. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்க நாட்டில் வேர்கொண்டுள்ளது, அமெரிக்க அரசு அதன் நலன்களின் பாதுகாவலனாக செயல்படுகிறது. அந்த பன்னாட்டு நிறுவனங்களை காப்பாற்ற, மக்கள் வரிப்பணங்கள் கொட்டிக்கொடுப்பது, அதன் நலன்களை வெளிநாடுகளில் உறுதிசெய்ய, மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளின் மீது அடாவடித்தனமாக பொருளாதாரத் தடை விதிப்பது முதல் போர் தொடுப்பது தொடுப்பது வரை செய்கிறது.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, எந்த பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் அதன் சொந்த நாட்டில் வேர்கொண்டுள்ளது என்பதைத்தான். அதன் படி இந்தியா அமெரிக்க ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசு மற்றும் பிற ஏகாதிபத்திய வல்லரசுகளின் பிடியில் இருக்கிறது. இந்தியாவின் மீதான இந்தப் பிடியை உறுதிசெய்ய சர்தேச முகமைகளின் தலையீடுகளும் உள்ளாது.
கொரோனா காலத்தில் இந்தியா அதன் செலவீனத்தை அதிகரித்தால் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் லாபங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் சர்வதேச முகமைகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவை இந்தியாவை எச்சரிக்கை செய்தது.
இந்தியா தனது செலவீனத்தை அதிகரிக்கும் போது சர்வதேச தயார் தர மதிப்பீட்டு நிறுவனங்கள், இந்தியாவின் மதிப்பீட்வை குறைத்துக்காட்டும் என்ற அச்சமும் இந்திய ஆளும் வர்க்கதிடம் உண்டு. அப்படி குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டல், இந்தியா சர்வதேச அளவில் முதலீடு செய்தற்கு தகுந்த நாடு இல்லை என்று பொருள். அதனால் அந்நிய முதலீடுகளின் வரத்து குறையும். இந்தியா அந்நிய நேரடி முதலீடுகளை அதிகம் சார்ந்திருப்பதால், இது இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது ஏகாதிபத்திய அரசுகளுக்கு சேவை செய்யும் சர்வதேச முகமைகள் மட்டுமல்ல தனியார் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் (International Rating Agencies) கூட இந்திய பொருளாதார கொள்கையின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் இந்தியாவின் இறையாண்மை எங்கேயாவது தெரிகிறதா தோழர்களே?
இந்திய கொள்கை வகுப்பாளார்களின் சட்டகமே அந்நிய மூலதனவரத்தை ஈர்ப்பதையும் தக்கவைத்தலையும் நோக்கியதாகவே அமைந்துள்ளது. நவ தாராளவாத காலத்தில், தேசிய அரசின் பாத்திரம் என்பது, அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பை பாதுகாப்பதும், அதன்மூலமாக அந்த நாட்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் அந்நிய மூலதனத்திற்கு எந்த பாதிப்பும் வராதவாறு பார்த்துக்கொள்வதுதான் என்று சுறுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கொரோனா காலத்தில் இந்தியா செலவீனத்தில் கடைபிடித்த கடும் கஞ்சத்தனத்திற்கு இவை மட்டுமே காரணமல்ல. மிக முக்கியமா காரணமாக இருப்பது, அரசாங்கம் செலவீனங்களை வலிந்து கட்டுப்படுத்திய வைக்கும் போது, அங்கே முதலீடுகளுக்கான ஒரே வாய்ப்பாக தனியார் மூலதனமே இருக்கிறது.
இத்தகைய தனியார் மூலதனமும் அதன் சொந்த மூலதனம் மட்டுமே அல்ல. மாறாக இந்திய அரசாங்கம் வழங்கும் கடன்கள், சலுகைகள்தான் அந்த மூலதன திரட்சிக்கு முக்கிய காரணம். ஒருபக்கம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் மற்றும் தரகு முதலாளிகளின் கைகளில் மூலதனம் குவிந்து கிடப்பதும், இந்திய அரசாங்கம் அவற்றிக்கு வழங்கும் சலுகைகளும், இன்னொரு பக்கம் மூலதனம் இல்லாமல், கடன் வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் வாடும் உள்நாட்டு நிறுவனங்கள். அரசாங்கம் செலவீனங்களை குறைப்பது உள்நாட்டு தேவையையும் அழுத்தும்.
அதனால் இந்திய நிறுவனங்களின் சொத்துக்களின் மதிப்பு சரியும். இதை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்க அரசாங்கம் முன்வருகிறது. இதனால் பயனடைவது அந்நிய பன்னாட்டு நிறுவனங்களும், அதனுடன் கூட்டு வைத்திருக்கும் இந்திய தரகு பெரும் முதலாளி வர்க்கமும்தான். இதுதான் இந்திய அரசாங்கம் தற்போது கடைபிடித்து வரும் தனியர்மயமாக்கல் கொள்கையின் சாரமும் கூட. இந்த பொருளாதார கொள்கையால் ஒட்டுமொத்த இந்திய சந்தை காரணிகளான நிலம், உழைப்பு சந்தை, கடன் வசதி ஆகிய அனைத்தும் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய தரகு பெருமுதலாளி வர்க்கத்திற்கும் ஏற்றாப்போல் மறுவார்ப்பு செய்யப்படும். அதனடிப்படையில்தான் இந்தியாவில் நிலம் மற்றும் தொழிலாளார் சட்ட சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது.
இந்த பொருளாதார அடிமைத்தனம் ஒருபக்கம் என்றால், இந்துத்து பாசிச அபாயம் இன்வொரு பக்கம். மோடி – அமித்ஷா தலைமையிலான இந்துத்துவ கும்பல், அரசையும் சமூகத்தையும் பாசிசமயமாக்கும் பொருட்டு, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தங்களது பாசிச கொள்கைக்கு ஏற்ப சமூகத்திலும் அரசு கட்டுமானத்திலும் ஒத்திசைவை ஏற்படுத்துவது, உடன்படாதவர்களை வழிக்கு கொண்டு வருவது, எதிர்ப்பாளார்களை அழித்தொழிப்பது, இவை அனைத்தையும் சட்டபூர்வமாக ஜனநாயகத்தின் பெயரிலே செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
இதற்காக ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றாப்போல் வெவ்வேறு வழிகளை கையாண்டு சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகவும் தலித் மக்களுக்கு எதிராகவும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அரசு இயந்திரம் முழுதும் இந்துத்து சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களால் இட்டு நிரப்பப்படுகிறது. அந்த கையில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் பாசிசமயமாக்கி வருகிறது இந்துத்து கும்பல்.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தொகுத்துப்பார்க்கும் போது, இந்த நிலவும் கட்டமைப்பிற்குள் மக்கள் விடுதலைக்கான தீர்வு இல்லை என்பது நிச்சயமாக புரிந்திருக்கும். ஆனால் தங்களை இதுநாள்வரை புரட்சியாளார்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் சிலர், தேர்தலில் ஓட்டுப்போடுவதன் மூலமாக பாசிச அபாயத்தை முறியடிக்க முடியும் என்று அறிவுரை முத்துக்களை சமீபத்தில் உதிர்த்தார்கள். ஒரு இக்கட்டான காலகட்டம்தான் ஒரு மனிதனின் உண்மையான பண்புகளை வெளிக்கொண்டு வரும் என்று சொல்வார்கள்.
அதன்படி பாசிசம் மக்கள் மீது ஏறித்தாக்கி வரும் இன்றைய சூழல் “போலிப் புரட்சியாளார்களின்” முகமூடிகளை கழற்றி எறிந்திருக்கிறது. இந்த பாசிச அபாய காலம், அவர்களை, அவர்களின் கொள்கைகளை மக்கள் முன்பு நிர்வாணமாக அம்பலப்படுத்திருக்கிறது.
நேற்று வரை புரட்சி பேசித் திரிந்தவர்கள், இன்று ஓட்டுப்போட்டால் “மூச்சுவிட அவகாசம்” கிடைக்கும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் நாங்கள் “நக்சல்பாரிகள் அல்ல” என்று கூறி உண்மையான புரட்சியாளார்களை காட்டிக்கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு எதை நினைவூட்டுகிறது. 1967-ம் ஆண்டு திரிபுவாத, நவீன திரிபுவாத திரைகளை கிழித்தெறிந்து இந்திய புரட்சிகர வானில் உதித்த நக்சல்பாரியை தான் நினைவூட்டுகிறது. ஆம் அது தான் நமது பாதையாக இருக்க முடியும். அதுதான் பாசிச அபாயத்தை முறியடித்து இந்திய புரட்சியை சாதிக்கும் வழியாக இருக்கிறது. இரவுகள் விடிந்தே தீரும். இந்திய வானில் மீண்டும் ஒருமுறை வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்கும்.
குறிப்புகள்:
1.) நக்சல்பாரி – முன்பும் பின்பும் – சுனிதி குமார் கோஷ்
2.) கோவிட்-19 நெருக்கடியும் சூறையாலும்- Research Unit for Political Economy (RUPE). தமிழில்: பிரவீன்ராஜ்.பா