2022 சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (EPI) 180 நாடுகளில் இந்தியா மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் பகுப்பாய்வு, உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் செயல்திறனை கணக்கிடுகிறது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட 40 செயல்திறன் குறிகாட்டிகளில் 180 நாடுகளை EPI தரவரிசைப்படுத்துகிறது.
இந்தியா 18.9 மதிப்பெண்களுடன் கடைசி இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் டென்மார்க் உலகின் மிகவும் நிலையான நாடாக முதலிடத்தில் உள்ளது.
“ஒவ்வொரு நாட்டின் செயல்திறன் சுற்றுச்சூழலின் உயிர்த்தன்மை, பல்லுயிர் மற்றும் வாழ்விடங்கள், சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் புல்வெளி இழப்பு போன்ற பல (18) வகைகளில் பார்க்கப்படுகிறது. EPI இன் அறிக்கையின்படி, உலகளவில் கிட்டத்தட்ட அனைத்து வகைகளிலும் இந்தியா தொடர்ந்து கீழ்நிலையில் உள்ளது. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் சுற்றுச்சூழலையும் இயற்கையையும் அழிப்பது இனி நடக்கக் கூடாது” என்று ரவி செல்லம் (CEO, Metastring Foundation & Coordinator, Biodiversity Collaborative) கூறினார்.
மேற்கில் உள்ள 22 நாடுகளில் அமெரிக்கா 20-வது இடத்திலும், உலகளவில் 43-வது இடத்திலும் உள்ளது. “பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மற்றும் பலவீனமான மீத்தேன் உமிழ்வு விதிகள் ஆகியவற்றால் காலநிலை மாற்றத்தைத் தணிக்க அமெரிக்கா நேரத்தை இழந்துவிட்டது”.
படிக்க :
♦ COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!
♦ பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !
தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலில் வெளிப்படும் பொருளாதார செழுமைக்கான நோக்கத்திற்காக, காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் போக்குகள் சுற்றுச்சூழல் அமைப்பின் உயிர்ச்சக்தியை பாதிக்கிறது.
இந்தியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் தரவரிசையில் கீழ் நிலையில் உள்ளன. இது, அவற்றின் குறைந்த EPI மதிப்பெண்கள், காற்று மற்றும் நீர் தரம், பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முக்கியமான சிக்கல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறது.
“நமது பொருளாதாரத்தின் கார்பன் உமிழ்வை நாம் உடனடியாகக் குறைக்க வேண்டும். பெரிய அளவிலான மற்றும் நீண்ட கால அறிவியல் அடிப்படையிலான சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்” என்று செல்லம் கூறினார்.
டென்மார்க் மற்றும் யுனைடெட் கிங்டம் (UK) உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே 2050-ல் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை அடையும் பாதையில் உள்ளன. சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் வேகமாக அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகளால் தவறான திசையை நோக்கி செல்கின்றன.
சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகள் – தற்போதைய போக்குகள் அப்படியே நீடித்தால், 2050-ம் ஆண்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வை நோக்கி சென்றிருக்கும்.
உலக ஏகாதிபத்திய முதலாளித்துவம் இயற்கையை தொடர்ந்து அழித்து வருவதாலேயே இந்த காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருகிறது. கார்ப்பரேட் பகாசுர தொழிற்சாலைகள் கட்டுப்பாடற்ற முறையில் காற்று மற்றும் நீரை மாசுபடுத்தி வருகின்றன. இந்த சுற்றுசூழல் செயல்திறன் குறியிட்டில், 40 செயல்திறன் குறிகாட்டிகளிலும் இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பதற்கு, அதானி, அம்பானி போன்ற தரகு முதலாளிகளே காரணம்.
படிக்க :
♦ அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் : முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் தீர்வு இல்லை !
♦ இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – ஐ.எம்.டி அறிக்கை !
இந்த இயற்கையை அழிக்கும் கொடிய அரக்கனை (கார்ப்பரேட் முதலாளிகளை) ஒழிக்காமல் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் சூற்றுசூழல் மேன்மேலும் சூறையாடப்படும். இயற்கையை தன் இலாபவெறிக்காக வரைமுறையின்றி அழித்து நாசம் செய்து வருகிற உலக முதலாளித்துவத்தை ஒழிக்காமல் விட்டால், உலகமே அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு மனிதன் வாழ தகுதியற்ற இடமாக பூமி மாறக்கூடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இயற்கை பேரழிவை உருவாக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக, சர்வதேச ரீதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் ஒன்றிணைவது மிகவும் அவசியம்.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க