சுலாமியர்களை தனிமைப்படுத்தித் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.
இசுலாமிய மக்கள் இறைத்தூதராகக் கருதும் முகமது நபியை இழிவுபடுத்திப் பேசி, ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தையும் வீதிக்கு அழைத்துவந்துவிட்டார்கள் காவி பாசிஸ்டுகள். இவ்விவகாரத்தில், உலக இசுலாமிய நாடுகள் அனைத்தும் மோடி அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன.
எதிர்ப்புகளின் அழுத்தம் காரணமாக, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நூபுர் ஷர்மா, கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதே கருத்தை டிவிட்டரில் பதிவிட்ட பா.ஜ.க டெல்லி ஊடகப் பிரிவின் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
ஜீன் 5-ம் தேதி அன்று கத்தார், ஈரான், குவைத் ஆகிய நாடுகள், இந்திய தூதர்களை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்ததோடு, மோடியை பொதுமன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளன. மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்டு 15 நாடுகள் மோடி அரசுக்கு வெளிப்படையாக தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
படிக்க :
♦ புதிய ஜனநாயகம் – ஜூன் 2022 | அச்சு இதழ்
♦ யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !
ஆனால், இசுலாமிய அரசுகளின் கண்டனங்கள் எவையும் உள்நாட்டில் இசுலாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க செலுத்தி வரும் ஒடுக்குமுறையை தற்காலிகமாகக் கூட நிறுத்திவிடவில்லை. மாறாக, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் என பல மாநிலங்களிலும் மோடி அரசை எதிர்த்துப் போராடும் இசுலாமியர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.
ஜூன் 3-ம் தேதி கான்பூரில் நடைபெற்ற கடையடைப்பு மற்றும் அமைதிப் பேரணியின்போது, “இசுலாமியர்கள் கல்லை விட்டெறிந்து, கலவரம் செய்தார்கள்” என்றுகூறி, காத்திருந்த வெறிநாயாய் போராட்டத்தின் மீது பாய்ந்து குதறியது உ.பி. போலீசு; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவுசெய்து, 50-க்கு மேற்பட்ட அப்பாவி இசுலாமியர்களை சிறைவைத்துள்ளது.
கேமராவில் பதிவான போராட்டக்காரர்களின் முகத்தை, நகரம் முழுவதும் “கலவரக்காரர்கள்” என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது உ.பி போலீசு. “கலவரக்காரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளை, சொத்து பறிமுதல் சட்டத்தின்கீழ் இடிப்போம்” என்று அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
ஜார்க்கண்டில் நடைபெற்ற போராட்டத்தில், போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் படுகாயமுற்றிருக்கிறார்கள். போரில் எதிரிகளை அணுகுவதைப்போல, இசுலாமியர்களை அணுகுகிறது மோடி அரசு.
பா.ஜ.க.வை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் ஓட்டுக் கட்சிகளோ, இசுலாமிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிய பிறகே, சம்பிரதாய அறிக்கைகள் விட ஆரம்பித்தார்கள். அதுவரை கள்ள மவுனம் காத்தார்கள்.
‘இசுலாமியர்கள் மட்டும் போராடுகிறார்கள்’, ‘இசுலாமிய நாடுகள் மட்டும்தான் கண்டனம் தெரிவிக்கின்றன’ என்று காவிகள் அம்மக்களை தனிமைப்படுத்தித் தாக்குதவற்கு அவர்கள் செய்துகொடுத்திருக்கும் வசதி அது. ஓட்டுப் பொறுக்குவதற்காக பா.ஜ.க.வை எதிர்த்து ஏகவசனம் பேசும் கட்சிகளின் உண்மை நிலைப்பாடு இதுதான் என்பது ஒவ்வொரு முறையும் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.
இசுலாமியர்களை தனிமைப்படுத்தி ஒடுக்கும் காவி பாசிஸ்டுகளின் உத்தியை தவிடுபொடியாக்க வேண்டுமானால், மோடி அரசின் அரசியல்-பொருளாதாரத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களையும் போராடும் இசுலாமியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கச் செய்ய வேண்டும். அக்கடமை புரட்சிகர-ஜனநாயக இயக்கங்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க