‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் மோடி அரசு !

நாடுதழுவிய பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், அக்னிபாத் திட்டத்தை 4 ஆண்டு காலத்திற்கு திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

0
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட 75% ராணுவ வீரர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 17 அன்று 72 மணிநேரத்திற்குள் இத்திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்பினர் விடுத்துள்ள பாரத் பந்த் அழைப்பை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இப்போராட்ட அறிவிப்பால் ஜூன் 20 அன்று 500-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 181 மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 348 பயணிகள் ரயில்கள் உட்பட 529 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவில், கௌதம் புத்த நகர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி-குருகிராம் விரைவுச் சாலையில் பாதுகாப்புப் படையினரால் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அரியானாவில், ஆயுதப்படை பணிக்கான காத்திருப்பவர்கள் சாலைகளை மறித்து, அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர். ரோஹ்தக் மாவட்டத்தில் சாலைகளில் போராட்டம் நடத்தினர். அரியானாவில் உள்ள அம்பாலா, ரேவாரி, சோனிபட் மற்றும் பஞ்சாபின் லூதியானா, ஜலந்தர், அமிர்தசரஸ் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
படிக்க :
♦ குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !
♦ இசுலாமியர்களை தனிமைப்படுத்தித் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.
ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற பீகார் போன்ற மாநிலங்களில் போராட்டங்களைத் திரட்டுவதற்கு சமூக ஊடக தளங்கள் (வாட்ஸ்அப்) பயன்படுத்தப்படுகிறது. இதனால், அக்னிபாத் திட்டம் குறித்து போலியான செய்திகளை பரப்பியதற்காக 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு மத்திய அரசு கடந்த ஜூன் 19 அன்று தடை விதித்தது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை பங்கேற்க தூண்டியதாக ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டை நகரில் உள்ள பயிற்சி நிறுவன உரிமையாளரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயிற்சி நிறுவன உரிமையாளர் அவுலா சுப்பா ராவ், நூற்றுக்கணக்கான ராணுவ ஆர்வலர்களை உள்ளடக்கிய ஹக்கிம்பேட் ராணுவ வீரர்கள் என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அனைத்து உறுப்பினர்களுக்கும் போராட்டங்களில் பங்கேற்குமாறு செய்திகளை அனுப்பியதாக குற்றம்சாட்டப்படுள்ளார்.
நாடுதழுவிய பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், அக்னிபாத் திட்டத்தை 4 ஆண்டு காலத்திற்கு திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. தீ வைப்பு, வன்முறைப் போராட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று எழுத்துப்பூர்வ உறுதிமொழியை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த உறுதிமொழி போலீசுத்துறையால் சரிபார்க்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
“இந்த சீர்திருத்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த சீர்திருத்தத்தின் மூலம் இளமையையும் அனுபவத்தையும் கொண்டு வர விரும்புகிறோம்” என்று ராணுவ விவகாரத் துறையின் கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்தார்.
“அக்னிவீர் தொகுதி எண் 1 பதிவு செயல்முறை ஜூன் 24 முதல் தொடங்கும் மற்றும் ஜூலை 24 முதல் கட்டம் 1 ஆன்லைன் தேர்வு செயல்முறை தொடங்கும். முதல் தொகுதி டிசம்பரில் பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் 30-ம் தேதிக்குள் பயிற்சி தொடங்கும்” என்று ஏர் மார்ஷல் எஸ்கே ஜா கூறினார்.
நாடுதழுவிய அளவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய அரசு திமிர்தனமாக அக்னிபாத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று கூறியுள்ளது. தங்கள் வேலைவாய்ப்புக்காக போராடும் இளைஞர்களை குற்றவாளிகள் என்றும், போராடியவர்களுக்கு பணி வழங்க இயலாது என்றும் மிரட்டுகிறது. போர் வீரர்களாக மாற நினைத்த இளைஞர்களை போராட்டக்களத்திற்கு அழைத்து சென்றுள்ளது இந்த காவி பாசிச மோடி அரசு.
புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க