சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, உலகை கேள்விக்கிடமற்ற முறையில் மேலாதிக்கம் செய்துவந்த அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கு இன்று ஆட்டங்கண்டு வருகிறது. ஒருபக்கம் அமெரிக்காவின் மேலாதிக்க கருவியான புதிய தாராளவாதக் கொள்கை உலகெங்கும் படுதோல்வியைச் சந்தித்து வருகின்றது. மறுபக்கம் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் இரஷ்யாவும் சீனாவும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு முகாம்களுக்கு இடையிலான போட்டாபோட்டிதான் இன்றைய சர்வதேச அரசியல் -பொருளாதார நிகழ்வுப் போக்காக உள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என தெற்காசிய நாடுகளில் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் அரசியல் – பொருளாதார நெருக்கடிகளுக்குப் பின் மறைந்திருப்பதும் இந்த இரு முகாம்களுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டிதான். குறிப்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டா போட்டிதான்.
சீனா இன்று உலகின் மிகப்பெரிய உற்பத்தி குவிமையமாக வளர்ந்துள்ளது. மலிவு விலையில் பல்வேறு நாடுகளுக்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. தனது வர்த்தக மேலாதிக்கத்தை மென்மேலும் விரிவுபடுத்துவதற்காக “புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை” தொடங்கியுள்ளது. இந்த புதிய பட்டுப்பாதைத் திட்டம் கடல்வழியாகவும் தரைமார்க்கமாகவும் ஆசியா முதல் ஐரோப்பா வரை உலகின் பலநாடுகளை இணைக்கிறது. இது அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. சீனாவின் இப்புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு எதிராக பைடன் தலைமையிலான அரசு “பில்ட் பேக் பெட்டர் வொர்ல்ட்” (Build Back Better World) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
படிக்க :
♦ இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
♦ புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
தெற்காசியாவில் சீனாவினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி, இராணுவ ரீதியான பல நெருக்கடிகளையும் சீனாவுக்கு கொடுத்துவருகிறது அமெரிக்கா; மேலும் ஒரே சீனக் கொள்கையின்கீழ் (One China Policy) தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ளவிருப்பதாக சீனா அறிவித்ததை அடுத்து, தைவானுக்கு இராணுவ உதவி என்ற பெயரில் தன்னுடைய படைகளை அந்நாட்டில் குவித்து வருகிறது. இந்தியா இரஷ்யாவுடன் வர்த்தக உறவைப் பேணுவதால் குவாட் கூட்டணி பலவீனப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜப்பானை இணைத்துக் கொண்டு ஆசியாவில் நேட்டோ படைகளை விரிவுபடுத்துவதற்காக துடித்துக் கொண்டுள்ளது அமெரிக்கா.
வெளியிலிருந்து கொடுக்கும் நெருக்கடிகள் ஒருபுறம் எனில், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அந்நாட்டின் இரஷ்ய-சீன ஆதரவு ஆளும் வர்க்க கட்சிகளை தூக்கியெறிந்துவிட்டு தன்னுடைய பொம்மையாட்சியினை நிறுவுவதற்காக பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது, ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளை மேற்கொள்வது போன்ற வேலைகளில் அமெரிக்கா இறங்கியது. தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இலங்கையில் மஹிந்த இராஜபக்சேவின் ஆட்சியினையும் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியினையும் கவிழ்த்துவிட்டு தனது பொம்மைகளான இரணில் மற்றும் சபாஷ் ஷரீப் ஆட்சியை கொண்டுவந்துள்ளது.
‘பயங்கரவாதத்தை ஒழிப்பது’ என்ற பெயரில், சுமார் 20 ஆண்டுகாலாமாக உள்நாட்டுப் போரை நடத்தி ஆப்கானை சீரழித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். கடந்த ஆண்டு அக்டோபரில் நேட்டோ – அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பின்பு, ஆப்கானில் இடைக்கால அரசமைத்துள்ள தலிபான்கள் சீனா மற்றும் இரஷ்யாவுடன் அரசியல்-பொருளாதார உறவுகளைத் தொடங்கியுள்ளனர். சீனா தனது புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் ஆப்கானையும் இணைத்துக் கொள்ளவிருக்கிறது. மேலும் தலிபான் அரசுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களையும் சீனா போட்டுள்ளது.
மத்தியா ஆசியாவில் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த (Geo-Political Importance) ஆப்கானை சீனாவுக்கு தாரைவார்க்க விரும்பாத அமெரிக்கா, சர்வதேச பொருளாதாரத் தடைகளின் மூலம் வெளியிலிருந்து தலிபான் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆப்கான் மத்திய வங்கிக்கு சொந்தமான டாலர் கையிருப்பை முடக்கிவைத்துள்ளது. ஏற்கெனவே வறட்சியின் காரணமாக உணவு உற்பத்தி குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் நிதிமுடக்கமும் சேர்ந்துகொள்ள இன்னொரு சோமாலியாவாக மாறியுள்ளது ஆப்கான்.
அண்மைக்காலமாக தெற்காசியாவில் நடைபெறும் இந்த அரசியல் போக்குகளைப் புரிந்துகொள்வதானது, இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற உழைக்கும் மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான காரணங்களை இனங்காணவும் மேலாதிக்கவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரலெழுப்பவும் உதவும்.
இலங்கை
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த மக்கள் எழுச்சியின் அழுத்தம் காரணமாக பதவியை துறந்தோடியுள்ளார் மஹிந்த இராஜபக்சே. ஐம்பது நாட்களைக் கடந்த நிலையில், காலி முகத்திடலில் கூடிய மக்கள் பெருந்திரளோ, அதிபராக உள்ள கோத்தபயவும் பதவியை துறக்க வேண்டும்; மக்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட மஹிந்த மற்றும் அவரது குண்டர் படையைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
நெருக்கடியிலிருந்து மீட்க வந்த தேவதூதராக முன்னிறுத்தபட்டு பிரதமராகியுள்ள இரணில் விக்ரமசிங்க, ‘பொருளாதார மீட்பு முயற்சி’ என்ற பெயரில் ஐ.எம்.எஃப்.யிடம் நாட்டை அடகுவைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அப்படியே அடகுவைத்து, குறிப்பிட்ட அளவு கடன்பெற்றாலும் உடனடியாக ஒரு ‘மாயவித்தையை’ நிகழ்த்திக் காட்ட முடியாத அளவிற்கு நெருக்கடியின் பரிணாமம் மிகத்தீவிரமாக உள்ளது.
இலங்கை தற்போது சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடி – அதாவது அந்நிய செலாவணி பற்றாக்குறை, கடன் நெருக்கடி ஆகியவை ஏதேச்சையான நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல. ஆளும் வர்க்க பத்திரிகைகள் பிரச்சாரம் செய்ததைப் போல, அனைத்தும் கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து தொடங்கவில்லை.
இன்றைய நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் 1970கள் முதலே, அந்நாடு ஐ.எம்.எஃப் மற்றும் உலக வங்கிக்கு அடகுவைக்கப்பட்டதும்; அதன் தொடர்ச்சியாக, 1990கள் தொடங்கி இலங்கையில் அதிதீவிரமாக அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகளுமே. கொரோனா பொதுமுடக்கம் உலக வர்த்தகச் சங்கிலியில் ஏற்படுத்திய தேக்கமானது, மறுகாலனியாக்க கொள்கையின் திவால்நிலையை துரிதப்படுத்திவிட்டது, அவ்வளவுதான்.
அதேநேரம், இலங்கையில் இராஜபக்சே கும்பலின் தீவிர சீன சாய்வுப் போக்கைத் தடுத்து நிறுத்துவதற்காக, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியதும் நடந்தேறியது.
இப்போக்கைப் பற்றி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை கடன் நெருக்கடி தொடர்பாக வெளியான பு.ஜ. கட்டுரையில் விளக்கியிருந்தோம். (தலைப்பு: கடன்சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை: நெருக்கடியைத் தீவிரமாக்கி ஆதிக்க செலுத்தத் துடிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள்)
“தமது உலக மேலாதிக்க போர்த்தந்திர திட்டத்துக்கு ஒத்துழைக்காத கோத்தபய அரசின் சீன ஆதரவு நடவடிக்கைகள், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளுக்கு எரிச்சலூட்டுகிறது. இதனால், கோத்தபய அரசை எச்சரித்து, மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கத்துடன், இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி. (பொது விருப்பத் தேர்வு ஒழுங்கமைப்பு − generalized system of preference) என்ற வரிச் சலுகையை நீக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.” – மேற்சொன்ன கட்டுரை.
தனது அடிவருடி இரணில் விக்ரமசிங்கவை பதவியில் அமர்த்தியுள்ளதன் மூலம் இலங்கையை மேலாதிக்கம் செய்வதற்கான சதுரங்க ஆட்டத்தில், இப்பொழுது காயை வெற்றிகரமாக முன்நகர்த்தியுள்ளன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்.
தெற்காசியாவில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மேலாதிக்கப் போட்டியில், இலங்கை பகடைக்காயக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
000
மஹிந்த இராஜபக்சே தலைமையிலான ஆட்சியில், ‘உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது’ என்ற பெயரில் திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கான கடன்கள் சீனாவிடமிருந்து வாங்கிக் குவிக்கப்பட்டன. ‘இக்கடனுதவி’ சீன மேலாதிக்கத்திற்கான கருவியாக அமைந்தது. சான்றாக, சிலவற்றை குறிப்பிடலாம்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டுவதற்கு சீன வங்கியிடமிருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், அத்துறைமுகத்தை “சீனா மெச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்” (China Merchants Port Holdings) என்ற சீன அரசு நிறுவனத்திற்கு விற்றுவிட்டது மஹிந்த அரசு. மேலும் துறைமுகத்தைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலத்தையும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளது.
கொழும்புவை ஒட்டியுள்ள கடல் பகுதியில், 269 ஹெக்டேர் வரை மண்ணைப் பரப்பி சமப்படுத்தி “கொழும்பு துறைமுக நகரம்” (Colombo Port City) என்ற பிரம்மாண்டமான, அரசுக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சுயேட்சை நகரம் ஒன்றை இலங்கை அரசு உருவாக்க இருக்கிறது.
இத்திட்டத்திற்கான கட்டுமானப்பணிகளை 1.4 பில்லியன் மதிப்பில் சீனத் துறைமுக கட்டுமான நிறுவனம் (China Harbour Engineering Company) மேற்கொண்டுவருகிறது. இக்கட்டுமானப்பணிக்கு சன்மானமாக, சீரமைக்கப்படும் நிலப்பரப்பில் 116 ஹெக்டேரை அச்சீன நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டது மஹிந்த அரசு. உலக வர்த்தகத்தில் மேலாண்மை செலுத்துவதற்காக கட்டமைக்கப்பட்டுவரும் தனது பட்டுப்பாதைத் திட்டத்தில், இந்த கொழும்பு துறைமுக நகரத்தை இணைத்துக் கொள்ள திட்டமிடுகிறது சீனா.
இப்படி சீனாவிற்கு இலங்கையை அடகுவைத்த மஹிந்த-கோத்தபய அரசு, மறுமுனையில் சீனாவுக்கு எதிரான இதர நாட்டு ஆளும் வர்க்கங்களின் மூலதன நுழைவை கட்டுப்படுத்தவும் முயற்சித்தது.
“அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய மேலாதிக்கவாதிகளின் விசுவாசிகளான மைத்ரிபால சிறிசேனா – ரணில் விக்கிரமசிங்க அரசு, கடந்த 2019−ம் ஆண்டு மே மாதம் இலங்கை – இந்தியா – ஜப்பான் ஆகிய முத்தரப்பு நாடுகள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் ‘‘கிழக்கு சரக்குப் பெட்டக முனையம்’’ கட்டுவதற்காக திட்டத்தைப் போட்டுக் கொண்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் அத்திட்டத்தை கோத்தபய அரசு ரத்து செய்தது.” – மேற்சொன்ன கட்டுரை.
மஹிந்த-கோத்தபய அரசின் இத்தீவிர சீன சாய்வுப் போக்கைத் தடுத்து, தனது மேலாதிக்க நோக்கத்திற்கு பணியவைப்பதற்காக அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் இலங்கையின் அந்நிய செலாவணி நெருக்கடியை தீவிரமாக்கின. மறுகாலனியாக்கக் கொள்கைகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அந்நாட்டின் பொருளாதாரமே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த குடுமிதான் இராஜபக்சேக்களை பணியவைப்பதற்கான கருவியாக வாய்த்தது.
பொருளாதார நெருக்கடியை ஒட்டி வெகுஜன முதலாளித்துவ பத்திரிகைகள் எழுதியதைப் போல, இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாவை மட்டுமே முதன்மைப் படுத்தி இயங்கவில்லை. ஆயத்த ஆடைகள், பீங்கான் பொருட்கள், இரப்பர் ஆகியவை இலங்கையின் ஜி.டி.பி.யில் முக்கிய பங்குவகிக்கூடிய உற்பத்தித் தொழில்கள். இவைகள் ஏற்றுமதிக்காகவே உற்பத்தி செய்யப்படுபவை.
இலங்கையின் சந்தை – அதாவது அந்நாட்டின் இந்த உற்பத்திப் பொருட்களை மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யக்கூடிய முதல் இரண்டு நாடுகள் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனுமே. எனவேதான் வழக்கமாக வழங்கிவரும் இறக்குமதி வரிச் சலுகையை (ஜி.எஸ்.பி) ஐரோப்பிய யூனியன் இரத்துசெய்தமை, அந்நிய செலாவணி நெருக்கடியைத் தீவிரமாக்கியது.
இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் அழுத்தத்திற்கு மஹிந்த-கோத்தபய அரசு தொடக்கத்திலேயே பணிந்துவிடவில்லை.
‘‘பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை (ஐ.எம்.எஃப்) அணுகுமாறு ஆளுங்கட்சிக்கு யோசனை கூறுகிறார், முன்னாள் பிரதமரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரம சிங்கே. சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்க முடியும்; ஆனால், சமூக மட்டத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று இதற்கு பதிலளித்திருக்கிறார் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்.” – மேற்சொன்ன கட்டுரை. (‘நிதியமைச்சர்’ என்று தவறாக இருந்ததை, ‘மத்திய வங்கி ஆளுநர்’ என்று திருத்தி சரிப்படுத்தியுள்ளோம்.)
ஆனால், கடைசிவரை இராஜபக்சே கும்பல் தன்னுடைய நிலையை தொடரமுடியவில்லை. ஏப்ரல் மாதம் முதலாக, பிரதமரும் அதிபரும் பதவிவிலகவேண்டும் எனக்கோரி மக்கள் போராட்டம் தீவிரமானது. அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்ள, ஐ.எம்.எஃப்-ஐ விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையிலும் தங்களுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ளவதற்காகவும் அமெரிக்காவிடமே சரணடந்தது இராஜபக்சே கும்பல்.
இவ்விசயம் குறித்து “புரட்சிகரக் கட்சிக்காக ஏங்கும் இலங்கை” என்ற தலைப்பில், பு.ஜ. சார்பாக வினவு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் சுருக்கமாக விளக்கியிருந்தோம்.
“பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எஃப்.யிடம் கடன் வாங்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் யோசனையை தொடக்கத்தில் ஏற்காத மஹிந்த ராஜபக்சே, பின்னர் தானே ஐ.எம்.எஃப்.யிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த சீன விசுவாசியும் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பருமான அஜித் நிவார்டு கப்ரால் வெளியேற்றப்பட்டு முன்னாள் ஐ.எம்.எஃப் நிர்வாகியான நந்தலால் வீரசிங்கே ஆளுநராக நியமிக்கப்பட்டார். நீக்கப்பட்ட அஜித் நிவார்டு கப்ரால் ஐ.எம்.எஃப்.யிடம் கடன் வாங்குவதை கடுமையாக எதிர்த்தவர்; சீனாவிடம் கடன் பெறுவதை ஊக்குவித்தவர் ஆவார்.
“குடும்ப ஆட்சி”, “ஊழல் ஆட்சி” என்று மக்கள் மத்தியில் தமக்குள்ள அவப்பெயரை போக்குவதற்காக, ‘பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள’ என்ற பெயரில் ஏப்ரல் 18 அன்று அமைச்சரவையை புதுப்பித்தார் மஹிந்த. இதற்குமுன் அமைச்சர்களாக இருந்த சமல் ராஜபக்சே, மஹிந்தவின் மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தினர் நீக்கப்பட்டு 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அமைத்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில், ஐ.எம்.எஃப்.யிடம் கடன்பெற தாமதித்தது தவறுதான் என்றும் தம்முடைய சில தவறான முடிவுகள் காரணமாகவே நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் சரணடைந்தார் மஹிந்த.
ஆனால், இந்த நாடகங்கள் எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பிரதமரும் அதிபரும் பதவி விலகக் கோரிய போராட்டங்கள் தொடர்ந்த படியே இருந்தன.
சரணடைந்தாலும், ஆள்வதற்குரிய தார்மீக ஆதரவை மக்களிடம் இழந்துவிட்டபடியாலும் முழுமையாக ராஜபக்சே கும்பலை நம்பத் தயாராக இல்லாததாலும் அமெரிக்காவும் ராஜபக்சேவுக்கு உதவவில்லை. ஐ.எம்.எஃப் உடன் நடந்த பேச்சுவார்த்தையில், 300 முதல் 600 மில்லியன் டாலர்கள் வரை தருவதாக ஒப்புக் கொண்டாலும் ராஜபக்சே பதவி விலகி ஓடும் வரை நிதியை விடுவிக்கவில்லை. இதன் மூலம் நெருக்கடியை மென்மேலும் தீவிரப்படுத்தியது அமெரிக்கா.” – மேற்கூறிய கட்டுரை.
000
தற்போது, அமெரிக்காவின் திட்டப்படி அனைத்தும் இனிதே முடிந்து, அமெரிக்க அடிவருடியான இரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அவரை பதவியில் அமர்த்திய அடுத்த சில நொடிகளிலேயே பங்குச் சந்தைகள் திடீர் ஏற்றத்தை சந்தித்தன; இலங்கைக்கு 5 பில்லியன் டாலர்களை தருவதாக ஒப்புக்கொண்டிருந்த ஜப்பான், உடனடியாக 2 பில்லியன் டாலர்களை விடுவித்தது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 600 மில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி ஒப்புதல் தந்துள்ளது. இவற்றையெல்லாம் சொல்லி, ‘மாற்றங்களைக் கொண்டுவரும் அரசியல் ஞானி’ என்று இரணிலை மெச்சிப் புகழ்கின்றன ஆளும் வர்க்க ஊடகங்கள்.
அமெரிக்கா தலைமையிலான ஏகாபத்தியங்கள், தற்போது அடுத்தகட்ட நகர்வில் உள்ளன. ஒன்று இரணிலின் ஆட்சியை உறுப்படுத்துவது. இரண்டாவது, மக்கள் போராட்டங்களை மெல்ல மெல்ல வடியவைப்பது.
தன்னுடைய கட்சியில் தான் மட்டுமே எம்.பி.யாக – அதுவும் நியமன எம்.பி.யாக உள்ளார் இரணில். இந்நிலையில், ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் குதிரை பேரங்களின் மூலம் பிற கட்சி எம்.பி.க்களை அவர் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக திரட்டுவது அவசியமாக உள்ளது. இம்முயற்சியில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது.
படிக்க :
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! பாசிஸ்டுகள் வீழ்வர் ! மக்களே வெல்வர் ! | மக்கள் அதிகாரம்
மே 20 ஆம் தேதி அளவில், இரணில் தலைமையிலான அரசாங்கத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 13 நபர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவற்றுள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ஹரின், மனுச நாணயக்கார ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர்களது கட்சி அறிவித்துள்ளது. “அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை” என்ற கட்சியின் முடிவை மீறி அவர்கள் செயல்பட்டுள்ளார்கள் என்கிறார் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. இதே காரணத்திற்காக, இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி செல்வா ஆகியோர் மீதும் அவர்களது கட்சி நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
அரசாங்கத்தில் இணையவில்லை என்றாலும் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, பிரதமராக பதவியேற்றுள்ள இரணிலின் நடவடிக்கைகளுக்கு ‘வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்போம்’ என்பதுதான் அனைத்து எதிர்க்கட்சிகளது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, நாட்டை ஐ.எம்.எஃப்.யிடம் அடகுவைக்கும் முயற்சிக்கு இந்த துரோகிகள் அனைவரும் உடந்தை.
இருப்பினும், கோத்தபயவை அதிபராக வைத்துக் கொண்டு, இரணிலின் ஆட்சி தொடர்வதை மக்கள் விரும்பவில்லை; இரணில், இராஜபக்சேக்களை மறைமுகமாக பாதுகாக்கிறார் என்று கருதுகிறார்கள்.
எனவேதான் நேரடியாக ஆட்சியில் பங்கெடுத்துக் கொள்ள அஞ்சி, பொதுத்தேர்தலை கோருகிறார்கள் எதிர்க்கட்சிகள். இழுபறிகளும் குதிரை பேரங்களும் முடிய இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

அப்பு
(தொடரும்…)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க