உ.பி : சட்டவிரோத காவி புல்டோசர்களை சட்டபூர்வமாக மாற்றும் யோகி அரசு !
முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்தது மட்டுமல்லாமல் அது சட்டப்பூர்வமாக நடந்தது என்று தனது சட்டவிரோத வீடுகள் இடிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தப் பார்க்கிறது பாசிச யோகி அரசு.
சமீபத்தில் கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் முஸ்லீம் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்ட நிகழ்வு, நகராட்சி சட்டங்களின்படி மேற்கொள்ளப்பட்டதாக உத்தரப்பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 22 அன்று தெரிவித்துள்ளது.
வீடுகள் புல்டோசரால் இடக்கப்படுவதற்கு எதிராக ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், மாநில அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத இடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு உத்தரப்பிரதேச அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
***
ஜூன் மாத தொடக்கத்தில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள், நபிகள் நாயகத்தைப் பற்றிய இரண்டு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களின் இழிவான கருத்துக்களுக்கு எதிராகப் போராடி முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளியது.
அதில், பிரயாக்ராஜில் உள்ள ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீடும் இடிக்கப்பட்டது. நபிகள் நாயகத்தைப் பற்றிய பா.ஜ.க.வின் அவதூரு கருத்துக்களை எதிர்த்து நகரில் வன்முறைப் போராட்டங்களை நடத்த சதி செய்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம், சட்டவிரோத கட்டுமானம் குறித்து முகமதுவுக்கு மே 10 அன்று நோட்டீஸ் கொடுத்ததாகக் கூறியது. ஆனால், முகமதுவின் குடும்பத்தினர் எந்தத் தகவலையும் பெறவில்லை என்று கூறுகிறார்கள். பல இடங்களில் வீடுகள் இடிக்கப்பட்ட நாள் அன்று நோட்டீஸ் கொடுத்த சில மணி நேரத்திலேயே வீடுகளை இடிக்கத்தொடங்கிவிட்டன காவி புல்டோசர்கள்.
பிரயாக்ராஜ் இடிப்பு வழக்கில், அது ஒரு குடியிருப்பு கட்டிடமாக இருந்ததாகவும், எனினும் அது ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. “மே 10, 2022 அன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் – காரண அறிவிப்பிற்கு பதிலளிக்கத் தவறியதால் – ஜூன் 10-ம் தேதி இடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று அறிக்கை கூறியது.
ஜூன் 11 அன்று, மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தார். “புல்டோசர்களின் நிழலில் வீடுகள் இருப்பவர்கள் மற்றவர்கள் மீது கற்களை எறிய மாட்டார்கள்” என்று கூறினார்.
ஜூன் 4 அன்று, கான்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் இடிக்கப்படும் என்று கூடுதல் போலீசுத்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறியுள்ளார். இருப்பினும், கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையங்கள், சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்புகள் என்றும், உ.பி நகர்ப்புறத்திற்கு ஏற்ப, அங்கீகரிக்கப்படாத / சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத்தான் அவர்கள் இடிப்புகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அந்த பிரமாணப் பத்திரம் கூறுகிறது.
வளர்ச்சித்துறை அதிகாரிகள் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுவதாக அரசு கூறினாலும், ஜூன் 12-ம் தேதி முதல்வர் ஆதித்யநாத், “புல்டோசர் நடவடிக்கையை தொடருங்கள்” என்று அதிகாரிகளுக்கு கூறியதாக தகவல்கள் வெளியாகின. பாஜக தலைவர்களின் கருத்துக்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதே கருத்துக்களைதான் மூத்த அதிகாரிகளும், பிற அதிகாரிகளும் பல்வேறு வடிவங்களிலும், சமூக ஊடகங்களிலும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.
முஸ்லீம் மக்களின் வீடுகளை இடித்தது மட்டுமல்லாமல் அது சட்டப்பூர்வமாக நடந்தது என்று தனது சட்டவிரோத வீடுகள் இடிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தப் பார்க்கிறது பாசிச யோகி அரசு. பாஜகவிற்கு எதிராக போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, எப்படி அதுநாள் வரை சட்டப்பூர்வமாக இருந்த வீடுகள் சட்டவிரோத வீடுகளாகவும், ஆக்கிரமிப்பு வீடுகளாகவும் மாறியது என்று கேள்வியெழுகிறது. எனவே இந்த ‘புல்டோசர் நீதி’ என்பது காவி பாசிஸ்டுகளின் ஓர் புதிய நடைமுறை. இந்த புதிய நடைமுறையைதான் சட்டப்பூர்வமானதாக மாற்ற முயற்சித்து வருகிறது பாசிச யோகி ஆதித்யநாத் அரசு.
காவிகள் இனி முஸ்லீம் மக்களை உ.பி.யில் வாழவே விடமாட்டார்கள் என்பதுதான் யோகி ஆதித்யநாத் அரசின் பாசிச செயல்பாடுகள் நமக்கு உணர்த்து செய்தி!