ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !
ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு - இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.
திரௌபதி முர்மு, பழங்குடி சமூகத்தில் இருந்து சென்ற முதல் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும், அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் பழங்குடி மக்கள் எஃகு ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போராட்டங்களுக்காக அரசின் மிகவும் கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
வெற்றிலை விவசாயிகள் மற்றும் பட்டியல் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மீனவர்கள் வசிக்கும் பகுதிதான் திங்கியா. கடந்த பத்தாண்டுகளில் தென் கொரிய நிறுவனமான போஸ்கோ (POSCO) மற்றும் இப்போது ஜிண்டாலுக்கு சொந்தமான JSW உட்கல் ஸ்டீல் லிமிடெட் (JUSL) ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களின் மையமாக விளங்குகிறது திங்கியா.
கடந்த ஆறு மாதங்களில், எஃகு ஆலைக்கு எதிராக போராட்டத்தில் 60 பேரை போலீசு கைதுசெய்துள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமங்களில் மிகவும் கொடூரமான அடக்குமுறைகளை போலீசு ஏவி வருகிறது. இதனால் அப்பகுதி தொடர்ந்து பதட்டமான சூழலே நிலவுகிறது. இராணுவப்படையினரும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதனால் இக்கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள், தங்கள் மனித உரிமைக்கு தொடர்ந்து அச்சுருத்தல் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு திங்கியாவில் அரசின் அடக்குமுறை தீவிரமடைந்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள், கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்து பழங்குடி மக்கள்மீது தடியடி நடத்தியுள்ளனர். பல ஆர்வலர்களை கைது செய்துள்ளனர்.
***
ஜிண்டால் குழுமத்தால் ஆண்டுக்கு 13.2 மில்லியன் டன் ஒருங்கிணைந்த எஃகுத் திட்டம் அமைக்கப்படுவது என்பது பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்கின்றனர் ஆர்வலர்கள்.
இக்கிராமங்களில் இதற்குமுன், ரூ.52,000 கோடி முதலீட்டில் 12 மில்லியன் டன் திறன் கொண்ட எஃகு திட்டத்தை அமைக்க போஸ்கோ (POSCO) திட்டமிட்டிருந்தது. 2011-ம் ஆண்டில் கோபிந்த்பூர், திங்கியா மற்றும் நுகாவ்ன் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் வன உரிமைச் சட்டத்தின்படி, நிலத்தை போஸ்கோ (POSCO) நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தென் கொரிய எஃகு நிறுவனம் (POSCO) அதிகாரப்பூர்வமாக எஃகுத் திட்டத்திலிருந்து வெளியேறியது.
ஜிண்டால் பிரதிரோத் பீதாமதி சுரக்ஷா சமிதி (ஜிண்டால் எதிர்ப்புக்குழு)-வின் செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் பைக்ரே, “கடந்த ஆறு மாதங்களில் 60 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். போஸ்கோ (POSCO) எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்ற 2,500 பேர் மீது 400-க்கும் மேற்பட்ட பொய்யான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது, ஜிண்டால் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்பதற்கு எதிராக பலர் அவ்வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,000 பேர் மீது குறைந்தது 72 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்கிய தலைவர் தேபேந்திர ஸ்வைன் உட்பட ஏழு தலைவர்கள் சிறையில் அவதிப்படுகின்றனர். சமீபத்தில், குனி மாலிக், சுமந்த நாயக் மற்றும் திலிப் ஸ்வைன் உள்ளிட்ட ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்” என்று பைக்ரே கூறினார்.
திங்கியாவில் போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுவர்கள்.
மேலும், “கடந்த 2021 டிசம்பர் முதல், திங்கியா பாரிய உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட கிராமங்கள் போலீசு கட்டுப்பாட்டில் உள்ளது. திங்கியாவில் மட்டும் இரண்டு படைப்பிரிவு போலீசார் உள்ளனர். நாங்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை; நாங்கள் பொதுநல வழக்கு ஒன்றின்மூலம் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். இருப்பினும், வழக்கு முடித்து வைக்கப்பட்டு, கலெக்டர் மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம்” என்று பைக்ரே கூறினார்.
போலீசின் நோக்கம் மக்களை நீண்ட காலம் சிறையில் அடைப்பதும், பழைய வழக்குகளை மீண்டும் செயல்படுத்துவதும், அனைத்து போராட்டங்களையும் ஒடுக்குவதும்தான். இரண்டு பெண் ஆர்வலர்களும் சிறையில் வாடுகின்றனர். ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முர்மு இதற்கு முன்பு பாஜக சார்பில் இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.
“பழங்குடியினரின் உரிமைகள் பற்றி முர்மு ஒருபோதும் பேசியதில்லை. அவர் அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் ஒரு கைப்பாவையாக மட்டுமே இருப்பார். அவர் மீது நாங்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்?” என்று கூறுகிறார் மக்கள் இயக்கத்தின் தேசியக் கூட்டணியின் (NAPM) பிரஃபுல்லா சம்ந்தா.
மேலும், “தேபேந்திர ஸ்வைனின் குடும்பத்தைப் பார்க்க வந்த மேதா பட்கர் தடுத்து நிறுத்தப்பட்டார். போலீசு இடைவிடாமல் திங்கியா மக்கள்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து வருகிறது. இங்கு யாருக்கும் மனித உரிமை இல்லை; யாருக்கு பேச உரிமை இல்லை. தினமும், இடைவிடாத கைதுகள் நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுகின்றன. அதில் இளைஞர்களும் கைதுசெய்யப்படுகிறார்கள்” என்று வேதனையுடன் கூறுகிறார் பிரஃபுல்லா சமந்தா.
இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடுவற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஒடிசா மாநிலத்தின் பழங்குடி மக்களை, அரசு தன் கொடுங்கரங்களினால் ஒடுக்கி வருகிறது. திரௌபதி முர்மு ஜனாதிபதியானால் மட்டும் இந்த அடக்குமுறைகள் குறைந்துவிடுமா என்ன? அவர் பாசிச அரசின் இன்னொரு பாசிஸ்டாக இருப்பாரே தவிர பழங்குடி மக்களுக்கு ஒருபோது உதவமாட்டார்.
ஜிண்டா நிறுவனத்திற்காக பழங்குடி மக்களை ஒடுக்கும் பாசிச அரசின் கொடுங்கரங்களை உடைத்தெறிய வேண்டியது அவசியம். இயற்கை வளங்களை கார்ப்பரேட் கழுகுகளிடமிருந்து பாதுகாக்க, தொடர்ந்து போராடிவரும் ஒடிசா பழங்குடி மக்களுக்கு ஆதரவாக கரம் நீட்ட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.