ஒன்றிய அரசானது சண்டிகரில் நடந்த 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பெரும்பாண்மை உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை உயர்த்தி உள்ளது. இந்த வரி உயர்வானது ஜீலை 18 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேனா மை, மோட்டார் பம்புசெட், எல்.இ.டி பல்புகள் மற்றும் சர்க்யூட் போர்ட் ஆகிய பொருட்களுக்கு வரியானது 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும், சோலார் வாட்டர் ஹீட்டர் மற்றும் தோல் பொருட்களுக்கு 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும், தானியம் தரம் பிரிக்கும் இயந்திரம் மற்றும் சுத்தம் செய்யும் இயந்திரம் ஆகியவற்றிக்கு 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை வரி விதிக்காமல் இருந்த பொருட்களுக்கு வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு புதியதாக வரி விதிக்கப்பட்டு உள்ளது. பாக்கெட்டில் விற்கப்படும் இறைச்சி, மீன், பன்னீர், கோதுமை மற்றும் பிற தானியங்களுக்கு 5 சதவீதமும், வங்கி காசோலைகளுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அஞ்சல் சேவைகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
புதியதாக வரி விதிக்கப்பட்டுள்ள மற்றும் வரி உயர்த்தப்பட்டுள்ள பொருட்கள் யாவும் நாட்டில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்களே.
ஏற்கெனவே, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு, இவ்வரிவுயர்வானது அவர்களின் தலையில் இடிபோல் விழும்.
உழைக்கும் மக்களின் மீதான வரிச்சுரண்டலை தீவிரப்படுத்தும் மோடி அரசானது, உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி கொழுத்துப் போயுள்ள பெரும் முதலாளிகள் மீது வரி விதிப்பதை பற்றி கடுகளவும் யோசிப்பதில்லை. அவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு கூட வரி விதிக்க யோசிக்கின்றனர்.
சான்றாக, இந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் வைரத்தின் மீதான வரியானது 0.25 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வைரமானது உழைக்கும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருளாக இருந்து இருந்தால் அதன்மீது அதிக வரி விதிக்கப்பட்டு இருக்கும். நம் மக்களுக்கு வைரம் என்றாலே என்னவென்று தெரியாதே?
***
மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதை நீட்டிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்காதது, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய ஜி.எஸ்.டி இழப்பீட்டை ரத்து செய்து, அதை ஈடுசெய்ய மக்களின்மீது கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையே தற்போதைய ஜி.எஸ்.டி வரி உயர்வு என்ற முடிவிற்கு நம்மை ஆணித்தரமாக இட்டுச்செல்கிறது.
2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படும் போது ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்ய அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒப்பந்தம் 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
மாநிலங்களில் வரி வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்களை உருவாக்க கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, கேரள நிதியமைச்சர் கே.என் பாலகோபால், பிஹார் துணை முதல்வர் தார்கிஷோர் பிரசாத் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவானது தன்னுடைய அறிக்கைகளை தற்போது நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சமர்பித்தது. ஜி.எஸ்.டி கவுன்சிலானது அவ்வறிக்கையை ஏற்றுக்கொண்டது.
கடந்த 5 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டை மத்திய அரசானது முறையாக வழங்கியதில்லை. மாநில அரசுகளின் பல்வேறு அழுத்தங்களாலே ஜி.எஸ்.டி இழப்பீடானது வழங்கப்பட்டது.
மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய ஜி.எஸ்.டி இழப்பீட்டை எப்போது நிறுத்துவோம் என்று கண்ணுல எண்ணெயை ஊற்றி காத்துக் கொண்டிருந்த மத்திய அரசானது, தற்போது மக்களின் மீதான வரியை உயர்த்தி மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய ஜி.எஸ்.டி இழப்பீட்டை ரத்து செய்துள்ளது.
***
இந்தியாவில் பொருளாதார ரீதியாக மேல்நிலையில் உள்ள 10 சதவீதம் பேர், நாட்டின் மொத்த வருமானத்தில் 57 சதவீதத்தை அபகரித்துக் கொள்கின்றனர். பொருளாதார ரீதியாக கீழ்நிலையில் உள்ள 50 சதவீதம் மக்களுக்கு, நாட்டின் வருமானத்தில் 13 சதவீதமே செல்கிறது என்று உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022 குறிப்பிடுகிறது.
உழைக்கும் மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரி விதிப்பானது ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் கரும்பானது எப்படி பிழியப்படுகிறதோ, அதேபோல் அதிகப்படியான வரியை கட்ட சொல்லி பெரும்பான்மை மக்களின் உழைப்பானது பாசிஸ்டுகளாலும், கார்ப்பரேட் முதலாளிகளாலும் பிழியப்படுகிறது. கரும்பிலிருந்து வெளிவருவது கரும்புச்சாறு, மக்களிடமிருந்து உழைப்பாய் வெளிவருவதோ அவர்களுடைய இரத்தம். அந்த இரத்தத்தை குடித்தே, இரத்தவெறி பிடித்த ஓநாய்கள் இவ்வளவு காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது மற்றும் கொலை, திருடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகமாகியிருக்கும் இச்சூழலில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யாமல், அதற்கு 28 சதவீத வரி விதிக்க பரிந்துரைத்துள்ளோம் என்று கூறுவதை நாம் என்ன வார்த்தைகளில் கூறுவது. இரத்தவெறி பிடித்த ஓநாய்களிடம் வேறு என்ன நாம் எதிர்ப்பார்க்க முடியும்?
இரத்தவெறி பிடித்த ஓநாய்களை வேட்டையாடும் சிங்கங்களா? பலியாகும் ஆடுகளா? நாம் யார்! முடிவு செய்யும் காலம் நெருங்குகிறது.