இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் அதிபர் பதவிக்கு தெரிவு செய்தபோது, கொழும்பில் “கோ, ரணில், கோ (Go, Ranil, go) என்ற முழக்கங்கள் எதிரொளித்தன.
முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் எஞ்சிய காலப்பகுதிக்கு (2024 வரை) பணியாற்றுவதற்காக, இதுவரை முன்னாள் பிரதமராக இருந்த விக்கிரமசிங்க, ஜூலை 20 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மஹிந்த ராஜபசவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதிபர் தேர்தலில் விக்கிரமசிங்க 134 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்ற செய்தி வந்தவுடன், போராடும் மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.
ரணில் இடைகால அதிபராக நியமிக்கப்பட்டபோதே மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என போராடும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் முடிவினை அறிவிக்கையில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என அஞ்சிய அதிகார வர்க்கம், காலி முகத்திடலில் உள்ள பாராளுமன்றத்திலிருந்து அதிபர் செயலகம் வரையிலான வீதிகளில் இராணுவம், போலீசு படையை நிறுத்தியது. அதிபர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள போராட்ட இடத்தில் அமைந்துள்ள முன்னாள் பிரதமரின் பண்டாரநாயக்க சிலைக்கு சேதம் விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை போலீசு நீதிமன்றில் தெரிவித்துள்ளது. கொழும்பின் மையப் பகுதியில் காலி முகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீட்டர் சுற்றளவிற்குள் மக்கள் கூட தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
படிக்க : இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
37 வயதான Vraie Cally Balthazaar, “134 பேராசை பிடித்த மற்றும் சுயநல அரசியல்வாதிகள், விக்ரமசிங்கே ஆட்சியைப் பிடிக்க உதவினார்கள். மக்கள் வேறு ஒன்றை விரும்புகிறார்கள், ஆனால் பாராளுமன்றம் வேறு ஒன்றை விரும்புகிறது. நாங்கள் இங்கு வந்து 103 நாட்கள் ஆகிறது. இப்போது கேள்வி என்னவென்றால், இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோமா? இல்லை” என்று அவர் கூறினார்.
“கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இடைக்கால அதிபராக பதவியேற்ற விக்ரமசிங்கே, 6 முறை பிரதமராக பதவியேற்றவர், ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் இருக்கிறார். பாராளுமன்றமும் ஏனைய கட்சிகளும் எம்மை ஏமாற்றிவிட்டன”, என 39 வயதான சட்டத்தரணி அமில எகொடமஹாவத்த தெரிவித்தார்.

செயற்பாட்டாளர்களின் குழுக்கள் “கோ, ரணில், கோ” என்ற முழங்க துவங்கினர்., ஜூலை 20 மாலை இரண்டு கலைஞர்கள் விக்கிரமசிங்கவுக்கு எதிரான சுவரொட்டிகளை செயலகத்தின் தூண்களில் ஒட்டினார்கள். “விக்கிரமசிங்க ஒரு தந்திரமான ஒப்பந்தம் செய்பவராகவும் நேர்மையற்ற அரசியல்வாதியாகவும் காணப்படுகிறார். கேவலமான ராஜபக்சக்களிடமிருந்து வேறுபட்டவர் அல்ல” என்று இந்த ஓவியங்கள் உணர்வுகளை திறம்பட சுருக்கமாகக் கூறுகின்றன.
“நான் பேசும் மனநிலையில் இல்லை” என்று தொடக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நாடக கலைஞர் விசாகா ஜெயவீர், 54, “அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இது ஒரு சதுரங்க விளையாட்டு போன்றது. அவர்கள் தங்கள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர், இப்போது எங்கள் முறை” என்றார்.
“ரணிலை ராஜபக்சேக்கள்தான் நியமித்தனர். மக்கள் விருப்பத்திற்கு மாறாக ரணில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை உள்ளடக்கிய ராஜபக்ச ஆட்சியால் உண்டான பொருளாதார நெருக்கடியால் நாங்கள் அவதிப்படுகிறோம். மக்கள் இயக்கம் என்ற வகையில் நாங்கள் ரணிலுக்கு எதிரானவர்கள். அவர் பதவி விலகும் வரை எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம், நிறுத்த மாட்டோம்” என்று ஜீவந்த பீரிஸ் கூறினார்.
படிக்க : மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ரணில் அதிபரானார் – இது இலங்கை மக்களுக்கு விடப்பட்ட சவால் !
ஆளும் வர்க்க கைக்கூலி, இலங்கை மக்களை பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்த ராஜபக்சேக்களுக்கு மிகவும் நெருக்கமான நபர், மக்களால் விரட்டியடிக்கப்பட்ட நபர் மீண்டும் அதிகாரத்திற்கு வருகிறார். ரணில் வீடு, இலங்கை மக்களின் போராட்டத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டது. மக்கள் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்டவரே மீண்டும் அதிகாரத்திற்கு வருவதென்பது, இலங்கை மக்களுக்கு ஆளும் வர்க்கம் விடும் சவாலாகும்.
ரணிலை எதிர்த்து மீண்டும் துளிர் விடும் இலங்கை உழைக்கும் மக்களின் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படும்; அதே நேரத்தில் மக்கள் அடிதளம் கொண்ட புரட்சிகர கட்சி என்ற முன்னணிப்படையை கொண்டு ஆளும்வர்க்கத்தின் கோட்டைகளை தகர்த்தெறிய வேண்டியது அவசியம். இதை செய்யவில்லை என்றால் – அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவில்லை என்றால் – மீண்டும் ரணிலை தொடர்ந்து வேறு ஒரு மீட்பரைத்தான் ஆளும் வர்க்கம் முன்வைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
காளி