கடந்த 14.06.2022 அன்று, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு’, ‘புரட்சிகரமான திட்டம்’ என்று பா.ஜ.க. அரசால் படாடோபமாக அறிவித்துக் கொண்டுவரப்பட்டது ‘அக்னிபத்’ என்ற திட்டம்.
17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களை, 6 மாதங்கள் பயிற்சிகொடுத்து 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த முறையில் (காண்டிராக்ட்) இராணுவத்தில் வீரர்களாக சேர்த்துக் கொள்வதே அக்னிபத் திட்டமாகும். இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் வீரர்கள் ‘அக்னி வீரர்கள்’ என்று அழைக்கப் படுவார்களாம்.
இவர்களுக்கு தொடக்கத்தில் 30 ஆயிரம் சம்பளமாகவும் பின்னர் படிப்படியாக அதிகரித்து இறுதியாண்டில் 40 ஆயிரம் சம்பளமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகள் பணி முடித்தவுடன் இவர்களில் 25 சதவிகிதம் பேர் மாத்திரம் இராணுவத்தில் நிரந்தரப் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவிகிதம் பேர் வெளியேற்றப்படுவார்கள். மற்ற இராணுவ வீரர்களைப் போல இவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படாது. பணியிலிருந்து விடுவிக்கபடும்போது, இதுவரை சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையோடு, கூடுதலாக அரசு செலுத்தும் தொகையும் சேர்த்து சேவா நிதி என்ற பெயரில் 12 இலட்சம் வழங்கப்படும். அக்னிபத் வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் இவை.
படிக்க : இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம் | தோழர் ரவி வீடியோ
முப்படைகளுக்குமான இராணுவச் செலவுகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் 5.26 இலட்சம் கோடியில் 1.20 இலட்சம் கோடி ஓய்வூதியத்திற்கு மட்டுமே செலவிடப்படுகிறது; மொத்த பட்ஜெட் தொகையில் 48.8 சதவிகிதம் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் ஓய்வூதியத்திற்கும் மட்டுமே செலவிடப்படுகிறது; அக்னிபத் என்ற பெயரில் இராணுவத்தில் காண்டிராக்ட் முறையைப் புகுத்துவதன் மூலம் இச்செலவினங்களை மிச்சப்படுத்தி, ‘இராணுவத்துறையை நவீனமயப்படுத்தப் போகிறோம்’ என்கிறது பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு.
அக்னிபத்-க்கு எதிரான போராட்டத் தீ!
“இந்திய இராணுவத்தை வலுப்படுத்தும் திட்டம்”, “இராணுவத்துறையை நவீனமயமாக்கும் திட்டம்” அத்துடன் இலவச இணைப்பாக, “தேசபக்தி மிக்க இளைஞர்கள் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு பொன்னான வாய்ப்பை வழங்கும் திட்டம்” – என மிகக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் இராணுவத்தில் காண்டிராக்ட் முறையை புகுத்தும் இத்திட்டம் பா.ஜ.க.வாலே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இளைஞர்களின் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது.
குறிப்பாக, இராணுவத்தில் சேரும் கனவோடு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் நாடு முழுக்க வீரியமான பல போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், இராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்கள் தொடங்கி தெலுங்கானா வரை மொத்தம் 18 மாநிலங்களில் இளைஞர்களின் போராட்டங்கள் மிகப் போர்குணமாக நடைபெற்றன.
தமிழகத்திலும் சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், இராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தினர்.

பல மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள் இரயில் மறியலில் ஈடுப்பட்டனர். 12 இரயில்கள் போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் போராட்டக்காரர்கள் இரயிலுக்குத் தீவைத்தபோது, போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இளைஞர்களின் போராட்டத்தால் சுமார் 300 இரயில்கள் இரத்துசெய்யப்பட்டன. 1,000 கோடிகளுக்கு மேல் இரயில்வே துறைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டதற்காக போலீசால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டம் – வெடித்தெழுந்த கோபம்
15 ஆண்டுகால இராணுவ வீரர் பணியை, 4 ஆண்டு தற்காலிக ஒப்பந்த பணியாக மாற்றும் அக்னிபத் திட்டம், 21 வயதே ஆன இளைஞனை உத்தரவாதமில்லாத வாழ்க்கைச் சூழலில் வெளியே தள்ளுகிறது. அடுத்த வேலைக்கு உத்தரவாதம் இல்லை. இளைஞர்களின் கோபத்திற்கு முக்கியக் காரணம் இது.
தற்போது இராணுவப் பணி காண்டிராக்ட்மயத்தை எதிர்த்துப் போராடுவதைப் போலவே, கடந்த ஜனவரி மாதம் இரயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) நடத்திய தேர்வில் மோசடி நடைபெற்றதாகக்கூறி பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அரசுத் தேர்வெழுதிய மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.
இச்செய்தி குறித்து, 2022 பிப்ரவரி மாத புதிய ஜனநாயகம் இதழில், “வேலை உத்தரவாதமின்மை, வாழ்க்கைச் செலவினங்களுக்கு கூட போதிய வருவாயின்மை ஆகிய பிரச்சினைகள் மக்களை ஒரு கிளர்ச்சிகர சூழலின் தருவாயில் நிறுத்தியுள்ளது. அதில் ஒரு சிறு தீப்பொறியைத்தான் பீகாரில் பார்க்கிறோம்.” என்று எழுதியிருந்தோம். இதோ இன்று அக்னிபத் பிரச்சினையில் நாடு முழுவது பற்றிப் பரவுகிறது இளைஞர்களின் போராட்டங்கள்.
எந்தெந்த மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றனவோ, அந்த மாநிலங்களெல்லாம் மிகக் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதைப் பார்க்கலாம். சான்றாக, இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy) மே மாதத் தரவுகளின்படி, பீகாரில் 13.3 சதவிகிதம் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது; இதுவே ஹரியானாவில் 24.6 சதவிகிதமாகவும், இராஜஸ்தானில் 22.2 சதவிகிதமாகவும், ஜார்கண்டில் 13.1 சதவிகிதமாகவும் உள்ளது.
எப்பாடு பட்டாவது, மத்திய அல்லது மாநில அரசுப் பணியிடங்களில் நுழைந்துவிட்டாலோ இராணுவம், போலீசு ஆகிய துறைகளில் சேர்ந்துவிட்டாலோ வாழ்க்கையை உத்தரவாதப் படுத்திக் கொள்ளலாம் என ஒருபிரிவு இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பில் இடியை இறக்குவது போல இறங்கியிருக்கிறது இராணுவத்துறையில் காண்டிராக்ட் முறையைப் புகுத்தும் அக்னிபத் திட்டம். இளைஞர்களின் கோபத் தீ, மேலோங்கிப் படர்ந்துவருவதற்கு இதுவே அடிப்படை.
நிரந்தர வேலை பறிப்பே, புதிய வேலைவாய்ப்புகளாக…
இதில் கொடுமை என்னவென்றால், 2024 முடிய, ஒன்றரை ஆண்டுக்குள் மத்திய அரசுப் பணிகளில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக அறித்துள்ளார் மோடி; அக்னிபத் திட்டம் மூலம் 4 ஆண்டுகளில் உருவாக்கப் போவதாகச் சொல்லும் 1.86 இலட்சம் வேலைவாய்ப்புகள், மேற்சொன்ன 10 இலட்சத்தில் ஓர் அங்கமாகக் குறிப்பிடப்படுகிறது.

2020 மார்ச் 01 அன்று, நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய அரசுப் பணியிடங்களில் இன்றைய புள்ளிவிவரப்படி, 8.72 இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அரசுத் துறைகளில் நிரந்த ஊழியர்கள் நிரப்பப்பட வேண்டிய இலட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் அனைத்தும் காண்டிராக்ட்மயமாக்கப்பட இருக்கின்றன என்பதை மோடியின் ‘10 இலட்சம் வேலைவாய்ப்பு’ திட்டத்தை அக்னிபத் திட்டத்தோடு இணைத்துப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்பை அழிப்பதையே ‘வேலைவாய்ப்பை உருவாக்குவதாக’ நா கூசாமல் பிரச்சாரம் செய்கிறார்கள் மோடியும் அவரது அடிவருடிகளும்.
எனவே ‘வேலைவாய்ப்பு உருவாக்கம்’ என்ற பெயரில், அனைத்துத் துறை அரசுப் பணிகளையும் காண்டிராக்ட்மயமாக்கும் விரிந்த திட்டத்தின் ஓர் அங்கமே அக்னிபத். ஆகவே பாசிச மோடி அரசு இதிலிருந்து பின்வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல.
நாடெங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்களின் போராட்டங்கள் வெடித்தபோதும், அதைப் பார்த்து மோடி அரசு பின்வாங்கிவிடவில்லை. “முப்படைகளிலும் தற்காலிக வீரர்களைச் சேர்க்கும் அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்படாது” – என தெளிவாகவே அறிவித்திருக்கிறார் இராணுவ விவகாரங்களுக்கான கூடுதல் செயலர் ஜெனரல் அனில் புரி.
ஆனால், சில சலுகைகளை அறிவிப்பதன் மூலமும் பொய் நம்பிக்கைகளை ஊட்டுவதன் மூலமும் எதிர்ப்புகளை ஓரளவு சிதறடிக்க முயற்சிக்கிறது பாசிச பா.ஜ.க.
இந்த ஆண்டு மட்டும் அக்னிபத் வீரர்களுக்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டு 23 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அக்னிபத் திட்டத்தில் வேலை பார்த்த வீரர்களுக்கு, மத்திய அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மத்திய ஆயுத போலீஸ் படை, அசாம் ரைஃபில் படை ஆகிய படைப்பிரிவுகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங். கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநில அரசாங்கங்கள், பணி முடித்து வெளியே வரும் அக்னி வீரர்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவோம் என அறிவித்திருக்கிறார்கள்.
கார்ப்பரேட்டுகளுக்கான குண்டர் படைகளா அக்னி வீரர்கள்?
பா.ஜ.க. மற்றும் அதன் ஊதுகுழுல் ஊடகங்களின் ஆதரவுப் பிரச்சாரங்களுக்கு இடையே, கார்ப்பரேட் முதலாளிகளும் அக்னிபத் திட்டத்திற்கு வெளிப்படையாகத் தங்கள் பேராதரவுகளை வழங்கி வருகிறார்கள்.
ஆர்.பி.ஜி. எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேனு, டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் ஆகியோர் அக்னிபாத் திட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இத்திட்டம் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வேட்டைக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கப் போகிறது என்பதை இந்த வெளிப்படையான ஆதரவுகளே நமக்கு உணர்த்துகின்றன.
“இந்த திட்டத்தின் கீழ் ஒழுக்கம் மற்றும் திறன் பயிற்சி பெறும் வீரர்கள் வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாறுவார்கள்; தலைமைப் பண்பு, குழுப் பணி மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றுடன், அக்னி வீரர்கள் தொழில்துறையில் சந்தைக்கு ஏற்றத் தீர்வுகளை வழங்குவார்கள்” என்று டுவிட் செய்திருந்தார் ஆனந்த் மஹிந்திரா.

தொழிலாளர் நலச் சட்டங்களெல்லாம் வெட்டி வீசப்பட்டு, தொழிலாளர்கள் மீது கொடூரச் சுரண்டல்கள் நிகழ்த்தப்படும் தீவிர மறுகாலனியாக்கக் காலம் இது; சங்கம் வைக்க உரிமை இல்லை, 12 மணி நேரம் வேலை, நீம் – எஃப்.டி.ஈ உள்ளிட்ட காண்டிராக்ட் கொத்தடிமைத்தனங்கள் என தாக்குதல் மேல் தாக்குதல்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஏவப்படுகின்றன; இதற்கெல்லாம் தாக்குப் பிடித்து, உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் மாடுபோல் உழைக்கும் நபர்களை, கட்டளைக்கு சிரமேற்கொண்டு கீழ்படியும் நபர்களை தொழிலாளர்களாக தேடுகிறார்கள் மஹிந்திரா உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள். அவர்களுக்கான ரெடிமெட் தயாரிப்புகளாக கிடைக்கிறார்கள் அக்னி வீரர்கள். இதைத்தான் ஆனந்த மஹிந்திரா அவரது மொழியில் டுவிட் செய்திருக்கிறார். ஏனெனில் இராணுவ சிப்பாய்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுவது இந்த வகையான ‘தலைமைப் பண்புதான்’.
மேலும் ஆயுதப் பயிற்சி பெற்ற இந்த முன்னாள் அக்னி வீரர்களை, கார்ப்பரேட்டுகள் தங்களது குண்டர் படையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. ஆலையில் போராடும் தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் ஆலை போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் சூறையாடலுக்கு எதிராக போராடும் மக்கள் ஆகியோர் மீது வன்முறையை ஏவி அடக்கி ஒடுக்க இப்பிரிவினர் பயன்படுத்தப்படலாம். “இப்படியெல்லாம் நடக்குமா, நீங்கள் பிரச்சினையை மிகைப்படுத்திச் சொல்கிறீர்கள்” என்று தோன்றலாம்.-
இதில் சற்றும் மிகைப்படுத்தல் இல்லை. சதீஷ்கர், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளின் கனிமவளச் சூறையாடலை ஒடுக்குவதற்காக அம்மக்கள் மத்தியிலிருந்தே சில கருங்காலிகளைப் பொறுக்கியெடுத்து, அவர்களுக்கு காசு கொடுத்து ‘சல்வாஜூடும்’ என்ற ஆயுதம் தாங்கிய கூலிப் படையை, அரசே உருவாக்கவில்லையா? கார்ப்பரேட் சூறையாடல் மிகத் தீவிரமாக நடைபெறும் பகுதிகளில், அரசுப் படைகளையும் தாண்டி மக்களின் ஒருபிரிவு மத்தியிலிருந்தே உருவாக்கப்படும் சல்வாஜீடும் போன்ற கூலிப் படைகள், போராடுபவர்களை அடக்கி ஒடுக்குவதற்கான சிறந்த கருவி.
ஆளும் வர்க்கங்களின் சுரண்டல் வெறி தீவிரமடையும்போது, அதற்கெதிராக புரட்சிகர போராட்டங்கள் மக்களிடையே வெடித்துக் கிளம்பும்போது, மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக மக்களின் ஒருபிரிவு மத்தியிலிருந்தே எதிர்ப்புரட்சி குண்டர் படைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற வரலாறை நாம் உலகின் பலநாடுகளின் வரலாற்றிலும் காணாலாம். இத்தகைய குண்டர் படைகள் அனைத்தும் உதிரிப் பிரிவு மக்களிடமிருந்தே (சமூகத்தின் கடைநிலையிலுள்ள, தங்கள் வாழ்க்கையை முறையாக அமைத்துக் கொள்ள வாய்ப்பில்லாத மக்கள் பிரிவினர்) கட்டப்பட்டிருக்கின்றன.
வேலையில்லாத் திண்டாட்டம் என்பது சாதாரணப் பிரச்சினை இல்லை. சமூகத்தில் குற்றங்கள் பெருகிவருவதற்கு அது ஒரு முக்கிய காரணம். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக காசு கொடுத்தால் எதையும் செய்யும் ஒரு பிரிவினரை (உதிரிகள்) இது நிச்சயம் உருவாக்கும். 21 வயதே முடிந்த முறையாக ஆயுதப்பயிற்சி பெற்ற ஒரு இளைஞர் கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா பட்டாளத்தில் சேரும்போது, அவர்களின் நிர்கதியான நிலை எதற்கு வேண்டுமானால் அவர்களை தயார் செய்யும்.
காவி பயங்கரவாதத் திட்டமே அக்னிபத்!

அக்னிபத் திட்டம் என்பது இராணுவத் துறையில் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை புகுத்தும் திட்டம் என்ற கூற்று நாம் கவனிக்க வேண்டிய அடுத்த முக்கியமான விசயம். காவிகளும் கார்ப்பரேட்டுகளும் ஒருசேர தங்கள் நோக்கங்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இருக்கிறார்கள். புரட்சிகர சக்திகள் மட்டுமல்லாது, தி.க. தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டு பல அரசியல் கட்சித் தலைவர்களும் “இது இராணுவத் துறையில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்களை புகுத்தும் திட்டம்” என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.
2021 ஆம் ஆண்டு, நாடுமுழுவதும் புதிதாக 100 இராணுவப் பள்ளிகளை தொடங்கப் போவதாக அறிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக 21 பள்ளிகளை தொடங்கியுள்ளது. அரசு – தனியார் கூட்டு அடிப்படையில், இந்த இராணுவப் பள்ளிகளை தொடங்கி நடத்த தனியார் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அனுதியளிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகளில் பெரும்பாலானவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படுபவை ஆகும்.
இத்திட்டம் மூலம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஏராளமானோர் அலைஅலையாக இராணுவத்தில் நுழைக்கப்படும் அபாயம் இருப்பதையும் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்தும் மே மாதம் புதிய ஜனநாயகத்தில், “தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம். இது அக்னிபத் திட்டத்திற்கும் பொருந்தும்.
“இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நாஜி சித்தாந்தம் கொண்ட பாசிச கும்பல் இராணுவத்தில் ஊடுருவி வருகிறது. இரசியாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கின்ற போரில், உக்ரைன் இராணுவத்தில் நவநாஜி ஆயுதப்படையான அசோவ் படைப்பிரிவு பங்குபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த அசோவ் பாசிசக் கும்பல் சொந்தநாட்டு சிறுபான்மையினரைக் கொல்வதையும், அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிப்பதையும் செய்து வருகிறது.
படிக்க : கார்ப்பரேட்டின் நலனுக்காக நாட்டின் மனித வளத்தை நாசம் செய்யும் நடவடிக்கையே அக்னிபாத்! | வீடியோ
உக்ரைனிலாவது அசோவ் படைப்பிரிவு இராணுவத்துடன் இணைத்து பணியாற்றுகிறது. மோடி அரசின் இத்திட்டம் அமலானால், இந்திய இராணுவமே ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச படையணியாகிவிடும்.
ஹரித்துவார் மாநாட்டில், முசுலீம்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று காவி கும்பல் அறைகூவல் விடுத்துள்ள நிலையில், இராணுவம் அலைஅலையாக ஆர்.எஸ்.எஸ்.மயமாக உள்ளது” – தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம்.
தனது பாசிச நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதில் அடுத்தடுத்த படிகளில் முன்னேறி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. இலங்கை உழைக்கும் மக்கள் இராஜபக்சேவுக்கு பாடம் புகட்டியது போல, நாம் மோடி அரசுக்கு, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பரிவாரங்களுக்கு பாடம் புகட்டியாக வேண்டும். அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், பீகார் மாநில இளைஞர்கள் அம்மாநில துணை முதல்வரும் பா.ஜ.க. தலைவருமான ரேணு தேவியின் வீட்டை தாக்கினார்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். எதிரியை நேரடியாக குறிவைத்து தாக்கும் இத்தகைய போராட்டங்களை நாடு முழுக்க பரப்புவோம், பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலை வேரறுப்போம்!
ரவி