நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஜி.எஸ்.டி. வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டு பல்வேறு மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தொடக்க நாள் முதல் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
பாக்கெட்டில் அடைத்த உணவுப் பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி கூட்டியதைக் கண்டிக்கும் விதமாகவும் விலைவாசி உயர்வு குறித்து அவையில் விவாதிக்கக் கோரியும் தயிர், பால் பாக்கெட்டுகளுடன் எதிர்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவை நடவடிக்கைகளை முடக்குவதாகக் கூறி அவைத்தலைவர் ஓம் பிர்லா 27 எதிர்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தார். மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “நாடாளுமன்ற நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதை பா.ஜ.க. சட்டப்பூர்வமான தந்திரமாகவே கடைபிடிக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி. “விவாத சுதந்திரம் இல்லையென்றால் நாடாளுமன்றம் எதற்கு” என கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.
படிக்க : நொறுங்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் அரங்கேறும் பாசிச சர்வாதிகாரம் !
பாசிச பா.ஜ.க. ஆட்சியின் கீழ் நாடாளுமன்றத்தில் நடைபெறும் இடைநீக்கங்களும் விவாத மறுப்பும் முந்தைய காங்கிரஸ் அரசின் எதேச்சதிகாரத்தைப் போன்றதல்ல. நாடாளுமன்ற போலி ஜனநாயகம் திவாலாகி பாசிசம் சட்டப்பூர்வமாகியதன் வெளிப்பாடே என்று நாம் முன்பே அடையாளப்படுத்தினோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் தி பிரிண்ட் இணையதளம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பா.ஜ.க. ஆட்சியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவது, மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 2006-ஆம் ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடர் முதல் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் 51 எம்.பி.க்கள். அதேநேரம் 2015 ஆகஸ்டு முதல் தற்போது வரை 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல், சகுனி, சர்வாதிகாரி, திறமையற்றவர், கபட நாடகம், பொய், போலித்தனம், பாலியல் வன்முறை உள்ளிட்டு பல சொற்கள் விவாதங்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறிப் பேசினால் அவைக்குறிப்பிலிருந்து அவை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “மோடியையும் பா.ஜ.க. ஆட்சியையும் விமர்சனம் செய்கின்ற சொற்களை பொறுக்கியெடுத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது; இந்த அடிப்படையான சொற்களைக்கூட பேசக்கூடாது என்றால் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை விமர்சிக்கவே முடியாது” என்று குற்றஞ்சாட்டுகின்றன எதிர்கட்சிகள்.
இதுகுறித்து ஊடக விவாதம் ஒன்றில் பேசிய தி.மு.க. வழக்கறிஞர் சரவணன், “எதிர்காலத்தில் இந்த அவைக்குறிப்பைப் படிப்பவர்கள் பா.ஜ.க. ஆட்சி இவ்வளவு தூய்மையான ஆட்சியா என்று வியக்க வேண்டும்; அத்தகைய ஒரு ’பொற்கால வரலாற்றை’ உருவாக்கத்தான் பா.ஜ.க. இச்சொற்களுக்குத் தடைவிதித்துள்ளது என்றார்.
ஜெர்மனியிலும் இத்தாலியிலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அதிரடியாக ரத்துசெய்ததைப் போல் அல்லாமல், நிலவுகின்ற போலி ஜனநாயகத்தையே பாசிசத் தன்மைகொண்டதாக மாற்றிக் கொண்டுவருகிறது பா.ஜ.க. நாடாளுமன்றம் இருக்கிறது, எதிர்கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் அவையில் பேச முடியாது. விவாதம் நடத்தி சட்ட மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பதிலாக, குரல் வாக்கெடுப்பு மூலமாகவே அனைத்து சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும். இனிமேலும் இதை ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ என்று சொல்லமுடியாது. ‘நாடாளுமன்ற பாசிசம்’ என்று அழைப்பதே பொருந்தும்.
