பில்கிஸ் பானோவைக் கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவிற்கு, 134 முன்னாள் அகில இந்தியப் பணியாளர்கள், அரசியலமைப்பு நடத்தைக் குழுவின் பதாகையின் கீழ், உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவின் 75-வது ‘சுதந்திர தினமான’ ஆகஸ்ட் 15 அன்று அரசின் தண்டனை குறைப்புக் கொள்கையின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசு எடுத்த “தவறான முடிவை” திருத்துமாறு திறந்த கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு கூறியுள்ளனர்.

2002 குஜராத் வகுப்புக் கலவரத்தின்போது பானோவின் மூன்று வயது மகள் உட்பட 14 பேரைக் கொலை செய்ததற்காகவும், ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும் காவி பயங்கரவாதிகள் 11 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர்.

***

பிப்ரவரி 28, 2002 அன்று, 19 வயது நிறைந்த – ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோ, அவரது குடும்பத்தினர் மற்றும் பிற முஸ்லீம் உள்ளூர் மக்களுடன், காவிக் கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது நடந்த சம்பவங்களை விவரிப்பதன் மூலம் கடிதம் தொடங்குகிறது.

“பில்கிஸ், அவரது தாயார் மற்றும் மூன்று பேர் பாலியல் வன்கொடுக்கு ஆளானார்கள். அவரது மூன்று வயது மகளின் மண்டை உடைக்கப்பட்டது; 8 பேரை இறந்து கிடந்தனர்; 6 பேர் காணவில்லை. நிர்வாணமாகவும் சுயநினைவுவை இழந்திருந்த பில்கிஸ் உயிர்பிழைத்தார். தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றியும், தன் குடும்பத்தினரை காவி குண்டர்கள் கொலை செய்ததை பற்றியும் நீதிமன்றங்களுக்கு நீதி கேட்க சென்றது என்பது ஒரு குறிப்பிடத்தக்க தைரியத்தின் கதை” என்று கடிதம் கூறுகிறது.

இந்த வழக்கை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இந்தக் கடிதம் ஆட்சேபனைகளை எழுப்புகிறது. மேலும் இந்த அவசரத் தீர்ப்பை வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பியது.

“அரியானா மாநிலம் ஜகதீஷ் வழக்கில் உச்ச நீதிமன்றம் 22 மார்ச் 2010 அன்று அளித்த தீர்ப்பின்படி, தண்டனையின் போது இருக்கும் கொள்கையின் அடிப்படையில் நிவாரணத் திட்டத்தை ஆராய்வது நடைமுறையாக இருந்தாலும், நிச்சயமாக 2014-ல் நிர்பயா வழக்குக்குப் பிறகு பலாத்காரம் மற்றும் கொலைக்கான தண்டனைகள் மற்றும் நிவாரணத்திற்கான கொள்கைகள் மிகக் கடுமையாக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் அறியாமல் இருக்க முடியாது? 2002-ல் பலாத்காரம் மற்றும் கொலை செய்தவர்கள் தற்போது பலாத்காரம், கொலை செய்பவர்களை விட குறைவான பொறுப்பாக இருக்க முடியுமா? என்று” கடிதம் கூறுகிறது.

***

பில்கிஸ் பானோ வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை குஜராத் அரசு விடுவித்ததற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களும் ஆகஸ்ட் 27, அன்று பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் பல எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க பெங்களூரு சுதந்திர பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். அவர்கள் பில்கிஸ் பானோவுக்கு ஆதரவாகவும், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு எதிராகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

தெலுங்கானாவில், தெலுங்கானா பெண்கள் மற்றும் திருநங்கைகள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் தெலுங்கானாவின் சிவில் சொசைட்டி அமைப்பு ஆகியவை ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத்நகரில் உள்ள மக்தூம் பவனில் இந்த பிரச்சினை தொடர்பாக வட்ட மேசை மாநாட்டை நடத்தியது. இரு குழுக்களின் உறுப்பினர்களும் மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும், குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்து, அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குற்றவாளிகள் 11 பேரையும் சிறைக்கு அனுப்பக் கோரி, ஆகஸ்ட் 20 அன்று, ஹைதராபாத்தில் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தியது. நகரில் உள்ள தர்ணா சவுக்கில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மகளிர் குழுக்களின் ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கேரளாவில் மகிளா ஸ்வராஜ், இந்திய மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின. இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பில்கிஸ் பானோவுக்கு ஆதரவாகவும், 11 குற்றவாளிகளின் விடுதலையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மகிளா ஸ்வராஜ் அமைப்பின் உறுப்பினரான டாக்டர் ஷைலஜா மேனன், “இது (11 பேரின் விடுதலை) அநீதி இழைக்கும் செயல், இதைப் பற்றி நாங்கள் அமைதியாக இருக்க முடியாது”என்றார். மைசூருவில் போராட்டங்கள் நடந்தன. ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியில் மனித உரிமைகள் மன்றம் “கொடூரமான கொலைகாரர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமையாளர்களை ஆதரிக்கும் பாசிசப் போக்குகளுக்கு எதிராக” கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அனைத்து மகளிர் கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஆகஸ்ட் 28-ம் தேதி போராட்டம் நடைபெற்றது.

***

பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகள்(காவி பயங்கரவாதிகள்) விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டம் தெரிவித்து வருகின்றனர். மோடி ஆட்சியில் காவி பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்கான போராடும் போராளிகள், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் ஒடுக்கப்படுகின்றார்கள். நாடுமுழுவதும் அரங்கேறும் இந்த காவி-கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து அமைத்து அமைப்புகளும், உழைக்கும் மக்களும் ஓரணியில் திரளவேண்டிய தருணமிது.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க