மீபத்தில் மத்திய அரசு ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த இணைக்கும் பணியை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

ஆதார் எண்ணுடன் வாக்களர் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தும்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறித்தியுள்ளனர். மேலும் இப்பணியைக் கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து இப்பணியைச் செய்து வருகிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்ளில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று அங்கு இருப்பவர்களின் ஆதார் எண்ணுடன் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து வருகிறார்கள்.

“குறிப்பாக சென்னை நகரப் பகுதிகளில் செல்லும்போது மக்களின் பங்களா வீடுகள் முன்பு நின்று, வீட்டுல யாருங்க? நாங்க BLO வந்து இருக்கோம், கொஞ்சம் வெளியில வாங்க என்று தேஞ்சி போன ரெக்கார்டர் மாதிரி ஒவ்வொரு வீட்டு கேட்டு [gate] முன்பும் நின்று வேகாத வெயிலில் குரல் கொடுத்தாலும் வீட்டு ஓனர்கள் எட்டிப் பார்ப்பதில்லை. அவர்களின் நன்றியுள்ள ஜீவன்களான நாய்கள் எங்களை திருட வந்தவர்களென நினைத்து குரைத்து குரைத்து டையர்ட் ஆகிவிடுகிறது.


படிக்க : சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ


அப்படியே கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டி, இல்லை நாங்க எப்பவோ இணைச்சாச்சு என்று கூறி நமது பதிலைக் கூட எதிர்பார்க்காமல், கதவை மூடி உள்ளே சென்றுவிடும் மனிதர்கள் மத்தியில் இல்லங்க நீங்கள் இணைத்தது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை தான்; இது வேறு என்று கூறிப் புரிய வைப்பதே பெறும் வேலையாக இருக்கிறது.

மேலும், ஆசிரியர்கள் வாக்குச் சாவடி அலுவளர் பணி, அதாவது குறிப்பாக சொல்லப்போனால் நாட்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பது, இடை நீக்கம் செய்வது,  இறந்தவர்கள் கணக்கெடுப்பு, புதிய வாக்களர் சேர்ப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மேலும்  இப்பொழுது புதிதாக பள்ளிகளில் தினந்தோறும் குழந்தைகளின் எல்லா தகவல்களையும் இணையதளத்தில் [online] பதிவேற்றம் செய்வது.

அதுமட்டுமல்லாமல் மேலும் இவர்கள் கல்வித் துறையில் மாற்றத்தை கொண்டுவருகிறேன் என்ற பெயரில் பல திட்டங்களை கொண்டுவந்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசு பள்ளி ஆசிரியர்களை  முடுக்கி விடுவதே இவர்களது வேலையாக மாறி விட்டது” என்று கூறுகிறார் இந்த வேலையில் ஈடுபட்ட கல்வியியலாளர் உமா மகேஷ்வரி.

இப்பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவது அவர்களுக்கு பெரும் பணிச்சுமையாக இருக்கிறது. சமீபத்தில் ஆசிரியர் ஒருவர் இதுபோன்ற பணியில் ஈடுபடுவதால் என்னால் வேறெந்த வேலையும் செய்ய முடியாமல் போய்விடுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் “நாளை பள்ளிக்குச் செல்வதற்கு முன் ஏற்பாடு மேற்கொள்வதா? பாடக் குறிப்புகளை தயார் செய்வதா? சமையல் செய்வதா? துணிகளை துவைப்பதா? தாயை கவனிப்பதா?” என்று கண்ணீர் விட்டு தன் கஷ்டத்தை இணையதளத்தில் காணொளி  மூலம் வெளிப்படுத்தினார்.

இந்தக் காணொளி சமூகத்தில் பேசு பொருளானவுடன் நமது கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “கடந்த செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டுப் பேசியபொழுது, ஆசிரியர்களைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டாலே மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவார்கள்; ஆதலால் ஆசிரியர்களைச் சுதந்திரமாகச் செயல்படவிடுவதைப் பற்றி முதல்வர் கவனத்திற்குக் கொண்டுசென்று உரிய தீர்வு காணப்படும்” என்று கூறினார்.

அவர் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு கண்டதை, ஆசிரியர்கள் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை எண்ணை இணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருவதைக் காண்பதன் மூலம் நம்மால் புறிந்துகொள்ள முடிகிறது.

ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், பணிபுரியும் ஆசிரியர்களும் இதுபோன்ற வேலைகள் செய்வதற்கு மதியம் 2 மணிக்குமேல் சென்றுவிடுகிறார்கள். இதனால் ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் போய்விடுகிறது.

கொரோனா காலத்தில் ஏற்கனவே மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்றுக்கொண்டதால் அவர்களுடைய கற்றல் திறன் என்பது குறைந்துபோனது. அதன் பிறகு இப்பொழுதுதான் பள்ளிகள் ஒழுங்காக செயல்பட்டு வருகின்றன. மேலும் ஆசிரியர்களும் மாணவர்களிடத்தில் நேரத்தைச் செலவிட்டு அவர்களுடைய கற்றல் திறனை வளர்த்தெடுத்து வரும் நிலையில், இப்பொழுது மீண்டும் ஆசிரியர்களை அரசாங்கத்திற்குத் தேவையான வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இதனால் ஆசிரியர்கள் மீண்டும் மாணவர்களிடத்தில் செலவிடும் நேரம் என்பதும் குறைந்துவிட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் மீண்டும் கேள்விக்குறியாகிறது.

இங்கு ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி என்பது மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் கேவலமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது அதிகளவில் இருகிறது. ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் சரியாகக் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கவைத்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெற்றோர்கள் மட்டும்தான் தனது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைத்து வருகிறார்கள்.

இப்போது அவர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று இந்த அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து அதை ஒவ்வொன்றாக அரசு கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தி மாணவர்கள் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. ஆனால் இதே சமயத்தில்தான் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆண்டிற்கு 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று கூறியது. அதற்குத் தேவையான நிதியையும் அரசாங்கம்தான் வழங்கி வருகிறது.


படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!


குறிப்பாக அரசுக் கல்வி நிறுவனங்களிலே “இல்லம் தேடிக்கல்வி”, “எண்ணும் எழுத்தும்” இதுபோன்ற புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தச் செலவிடும் நிதிகளையும் தனியார் கல்வி நிறுவனத்தில் 25 சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கச் செலவிடும் நிதிகளையும் அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கி, ஆசிரியர் பற்றாக்குறையை ஏன் சரி செய்யக்கூடாது, சீர்குலைந்து இருக்கும் உள்கட்டமைப்பு வசதியை ஏன் ஒழுங்குபடுத்தக் கூடாது, அரசுப் பள்ளிகளில் 5583 கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன; அதை ஏன் சீரமைக்கக் கூடாது. இந்த அரசு நினைத்தால் இதையெல்லாம் செய்யலாம்; ஆனால் இந்த அரசு செய்யாது.

ஏனென்றால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைப் பற்றியும் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களைப் பற்றியும் இந்த அரசாங்கத்திற்கு கொஞ்சம் கூட கவலை கிடையாது. அதனால்தான் ஆசிரியர்களை மாணவர்களிடம் சேரவிடாமல் இவர்களுடைய வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொள்கிறது. இவர்களின் ஒரே நோக்கம், கல்வியைத் தனியார்மயமாக்குவதும், அதை பண்டப் பொருளாக மாற்றுவதும்தான்.

ஆகையால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் தனியார்மய கொள்கையையும் இந்த கொள்கையை நிறைவேற்ற உதவி செய்யும் இந்த அரசாங்கத்தையும் தகர்த்தெறிந்தால் மட்டும்தான் இங்கு கல்வி என்பது எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும்.


செழியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க