குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய குடிமக்களின் சட்ட, ஜனநாயக அல்லது மதச்சார்பற்ற உரிமைகளை பாதிக்காது என்று மத்திய அரசு அக்டோபர் 30 அன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு முஸ்லீம் அல்லாத மத சமூகங்களைச் சேர்ந்த அகதிகள், ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் மற்றும் டிசம்பர் 31, 2014 ஆம் தேதிக்கு முன்பாக நாட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குகிறது. இருப்பினும், சட்டத்தின்கீழ் இன்னும் விதிகள் உருவாக்கப்படவில்லை.

இந்த திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக மனுதாக்கள் செய்த மனுதாரர்கள் இது மத அடிப்படையிலான பாகுபாட்டை ஊக்குவிப்பதாகவும், சட்டத்தின் முன் சமத்துவத்தைக் கையாளும் அரசியலமைப்பின் 15-வது பிரிவை மீறுவதாகவும் கூறி, இச்சட்டத்திற்கு எதிராக 200-க்கும் மேற்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

படிக்க : குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !

சில மனுக்களின் வாதங்களில், இச்சட்டம் “அசாமில் சட்டவிரோதமாக குடியேறுவதை எந்த வகையிலும் ஊக்குவிக்கவில்லை” என்றும், இது “ஆதாரமற்ற… அச்சம்” என்றும் கூறியது மத்திய அரசு. குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வாழும் துன்புறுத்தப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்க மட்டுமே முயல்கிறது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

“எந்தவொரு நாட்டின் வெளிநாட்டினரும் இந்தியாவின் குடியுரிமையைப் பெறுவதற்கான தற்போதைய வழிமுறைகள் அப்படியே உள்ளது. செல்லுபடியாகும் ஆவணங்கள் மற்றும் விசாவின் அடிப்படையில் சட்டப்பூர்வ இடம்பெயர்வு மூன்று குறிப்பிடப்பட்ட நாடுகள் உட்பட உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது” என்று அரசாங்கம் கூறியது.

இந்திய குடிமகன் ஒருவர் தன்னை வாக்காளராகப் பதிவு செய்வதையோ அல்லது வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்குவதையோ CAA தடை செய்யாது என்றும், வாக்காளர் பட்டியலில் எந்த நபரையும் சேர்ப்பது அல்லது விலக்குவது போன்ற செயல்களை இது பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அச்சட்டத்தின் விதிகள் உருவாக்கப்படாததால் இந்த சட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. தொற்றுநோய் முடிந்தவுடன் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மே மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில், 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கியர், பார்சி, கிறிஸ்தவ, புத்த மற்றும் ஜெயின் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்குமாறு குஜராத்தில் உள்ள மெஹ்சானா மற்றும் ஆனந்த் மாவட்ட ஆட்சியர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அக்டோபர் 31 அன்று கேட்டுக் கொண்டது.

ஆகஸ்ட் மாதம், குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, 40 பாகிஸ்தானிய இந்துக்களுக்கு இந்திய குடியுரிமைச் சான்றிதழை வழங்கியதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல், அகமதாபாத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்களுக்கு 1,032 குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது என்று அது கூறுகிறது.

படிக்க : குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக 2020 ஆம் ஆண்டில் மாபெரும் போராட்டங்கள் இந்தியா முழுவது நடைபெற்றது. முஸ்லீம் மக்களை மட்டும் தனிமைப்படுத்தி ஒடுக்குமுறைகளை செலுத்த முயற்சிக்கிறது பாசிச மோடி அரசு என்று பல்வேறு கண்டனக்குரல்கள் எழுந்தன. போராடியவர்கள் மீது மிகப்பெரிய அடக்குமுறைகளை ஏவியது மோடி அரசு. ஆனால் தற்போது இச்சட்டத்தால் மதச்சார்பற்ற உரிமைகள் பாதிக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு கூறுவது உடனே அமல்படுத்துவதற்கான நடவடிக்கை. அதன் தொடர்ச்சியாக குஜராத்தின் குடியுரிமை வழங்கும் நடைமுறையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

பாசிச பாஜக குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தி, முஸ்லீம் மக்களை ஒடுக்குவதில் தீவிரமாக செயல்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சட்டத் திருத்தத்தை முறியடிக்க அனைவரும் களமிறங்க வேண்டியது அவசியம்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க