ஸ்ரேலில் சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி பென்ஜமின் நெத்தன்யாஹூ (Benjamin Netanyahu) மீண்டும் பிரதமர் ஆகிறார். மதவாத சியோனிச கட்சியுடன் (Religious Zionism) கூட்டணி அமைப்பதன் மூலம் தற்போது மீண்டும் ஆட்சியமைக்க உள்ளார். இந்த சியோனிச கட்சி என்பது ஒரு பாசிச கட்சியாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலில் நடைபெற்ற ஐந்தாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு அந்நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழல் நிலவுகிறது. கடந்த முறை, ஆட்சியிலிருந்த கூட்டணியில் ஒரு இடதுசாரி கட்சி இடம்பெற்றிருந்ததால் இந்திய இடதுசாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், அது வெறும் கானல்நீர் என்பது விரைவில் தெளிவாகிவிட்டது.

குறிப்பாக, தொடர்ந்து பாலஸ்தீனத்தின் இறையாண்மையைப் பறித்து அதனை ஒரு காலனியாக நடத்தி வரும் பிராந்திய மேலாதிக்க வல்லரசாகிய இஸ்ரேலில் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் இருந்தாலும், இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஜனநாயகமான அரசியல் கட்சிகள் இல்லை என்பதே எதார்த்தம். இதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு மீண்டும் உணர்த்துகின்றன.

நெத்தன்யாஹூ 1996 இல் இஸ்ரேலின் இளம் பிரதமரானார். 1996 – 1999 மற்றும் 2009 – 2021 என நீண்ட காலம் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 17 மாதங்களாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த அவர் தற்போது மீண்டும் பிரதமராகவுள்ளார்.

நெத்தன்யாஹூவின் லிகுட் கட்சி (Likud Party) 32 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது கடந்தாண்டு தேர்தலை விட இரண்டு இடங்கள் அதிகமாகும். பாசிச கட்சியான மதவாத சியோனிசம் 14 இடங்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. கடந்தாண்டுத் தேர்தலைவிட எட்டு இடங்கள் அதிகம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. லிகுட் கட்சியும் பாசிச மதவாத சியோனிச கட்சியும் அமைக்கும் கூட்டணியில் மற்ற மதவாதக் கட்சிகளான யுனைடெட் டோரா ஜூடாயிசம் (United Torah Judaism UTJ) — 7 இடங்கள் — மற்றும் ஷாஸ் (Shas) — 11 இடங்கள் —ஆகியவை இணையவுள்ளன. 120 இடங்கள் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசட்டில் (Knesset) இதன்மூலம் இவர்களுக்குப் பெரும்பான்மை (64 இடங்கள்) கிடைக்கும்.

படிக்க: காசா: “பிள்ளைக்கறி திங்கும் யூத இனவெறி பிடித்த இசுரேல்”

இஸ்ரேலின் ‘இடதுசாரிகள்’ படுதோல்வி அடைந்துள்ளனர். 1968 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்த தொழிற்கட்சி (Israeli Labor Party — “HaAvoda”) வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

காபந்து பிரதமரும் எதிர் அணியின் தலைமையில் உள்ள யெஷ் அடிட் கட்சியின் (Yesh Atid) தலைவருமான யெயர் லாபிட்-ஆல் (Yair Lapid) ஒரு வலுவான கூட்டணி அமைக்க இயலவில்லை. அவரது கட்சி, கடந்தாண்டு தேர்தலை விட ஏழு இடங்கள் அதிகமாகப் பெற்று 24 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

மதவாத சியோனிச கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் ஜூயுஸ் பவர் (Jewish Power) கட்சியின் தலைவரான இடாமர் பென்-க்விரின் (Itamar Ben-Gvir), அரபுகள் மீதான வெறுப்புப் பேச்சுக்கு இழிபுகழ் பெற்றவர். பாலஸ்தீனியர்கள்மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, “அரபுகளுக்கு மரணம்” (Death to the Arabs) என்று முழங்கியது என அவரது யூத மதவெறிக்கு பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். பாருச் கோல்ட்ஸ்டைன்-ஐ (Baruch Goldstein) முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுபவர். 1994 ஆம் ஆண்டில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பாலஸ்தீனியர்களை கண்மூடித்தனமாக சுட்டு 29 பேரை படுகொலை செய்து, 125 பேரை காயமடையச் செய்த இஸ்ரேலிய-அமெரிக்க பயங்கரவாதிதான் அந்த பாருச் கோல்ட்ஸ்டைன்.

நெத்தன்யாஹூ ஆட்சியிலும் சரி யெயர் லாபிட் ஆட்சியிலும் சரி பாலஸ்தீனியர்கள் கடுமையாகவே ஒடுக்கப்பட்டனர். 2005 – 2009 காலகட்டத்தில், லாபிட்டின் கூட்டணி ஆட்சியின் போதுதான், பாலஸ்தீனியர்களை கொலை செய்வது அவர்களின் வீடுகளை இடிப்பது அவர்களை கைது செய்வது போன்ற ஒடுக்குமுறைகள் அதிகமாக நடைபெற்றன. ஆகவே, இஸ்ரேலில் யார் ஆட்சி அமைந்தாலும் பாலஸ்தீனியர்களுக்கு விடிவு இல்லை என்பது மட்டும் உறுதி. பாசிஸ்டுகளின் கூட்டணியோடு ஆட்சியமைவதால், தற்போது ஒடுக்குமுறை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

படிக்க: இலங்கையில் ‘சீன உளவுக் கப்பல்’: மக்களைத் திசைதிருப்பிய ஆளும் வர்க்க ஊடகங்கள்!!

ஐரோப்பாவில் வளர்ந்து வரும் பாசிசம்!

நவ-பாசிசம் ஐரோப்பாவில் அதிதீவிரமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் நடைபெற்ற தேர்தல்களில், பாசிச சக்திகள் பெருமளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. குறிப்பாக இத்தாலி, ஹங்கேரி, போலந்து, பிரான்ஸ், ஸ்வீடன், செக் குடியரசு, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் அதி தீவிரமாக வளர்ந்துள்ளன.

இத்தாலி நாட்டில், கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரதர்ஸ் ஆப் இத்தாலி (Brothers of Italy) என்ற பாசிச கட்சியைச் சேர்ந்த ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni) வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆகியுள்ளார். தான் ஒரு பாசிஸ்ட் அல்ல என்று அவர் கூறிக் கொள்கிறார். ஆனால், அவரது கட்சியானது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு முசோலினியின் பாசிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளால் தொடங்கப்பட்ட இத்தாலிய சமூக இயக்கம் (Italian Social Movement – MSI) என்ற கட்சியில் தனது வேர்களைக் கொண்டுள்ளது.

மெலோனியின் கட்சியின்கீழ் முசோலினியின் பேத்தியான ராச்செல் (Rachele) மற்றும் கொள்ளுப்பேரனான சீசெர் (Caio Giulio Cesare) ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்கள். முசோலினியின் பாசிஸ்ட் கட்சியின் கொடியில் இருக்கும் ‘மூவர்ண சுடர்’ பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சிக் கொடியிலும் இடம்பெற்றுள்ளது. மெலோனியிடம் முசோலினி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது “முசோலினி தான்செய்த அனைத்தையும் இத்தாலிக்காகவே செய்தார்” என்று பதில் அளித்தார். மேலும், ‘கடவுள், தேசபக்திமிக்க நாடு மற்றும் குடும்பம்’ என்ற பழமையான பாசிச முழக்கம்தான் அவரது முழக்கமாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் அதிதீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.

2010 ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியன் பிரதமராக இருக்கும் விக்டர் ஆர்பன் (Viktor Orban), கடந்த ஜூலை மாதத்தில் நாசிகளின் கொள்கையான இனத் தூய்மைவாதம் பற்றிப் பேசியுள்ளார். அவரது பேச்சு மிகுந்த கண்டனங்களுக்கு ஆளானது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹங்கேரியில் மட்டும் 75,000 – 1,00,000 யூதர்கள் நாசிகளால் படுகொலை (Holocaust) செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நவ-பாசிச அதிபர் வேட்பாளர் மரின் லு பென்(Marine Le Pen), 2017 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது தான் பெற்ற வாக்குகளை விட கிட்டத்தட்ட முப்பது லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.

சிறந்த ஜனநாயக நாடுகள் என்று கருதப்படும் ஸ்காண்டிநேவியா நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில், ஸ்வீடன் டெமாக்ரட்ஸ் (Sweden Democrats – SD) என்ற நவ-பாசிச கட்சி 20.5 சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது. அக்கட்சியின் ஆதரவுடன் தான் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வலதுசாரிகள் ஆட்சி புரியும் செக் குடியரசு நாட்டில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், பாசிச சக்திகள் கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளன. போர்ச்சுகல் நாட்டில், வென்டூரா (André Ventura) தலைமையிலான அதி தீவிர வலதுசாரி கட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. போலந்து நாட்டின் பிரதமர் தீவிர வலது சரியாகவும், நாசி ஆதரவு மற்றும் யூத வெறுப்பு கொண்டவராகவும் உள்ளார்.

படிக்க: பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !

பாசிசத்தின் வளர்ச்சிக்கான கூறுகள்

அன்று, அதாவது நூறாண்டுகளுக்கு முன்பு ஹிட்லர் – முசோலினி காலத்தில் இருந்த பாசிசத்திற்கும், இன்று இருக்கும் நவ-பாசிசத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இன்றைய சூழலுக்கு ஏற்ப பாசிசம் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது என்று கூறலாம்.

அன்று, ஐரோப்பிய கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதைத் தடுப்பதற்காக தொழிலதிபர்களாலும் வங்கியாளர்களாலும் பாசிசம் வளர்த்தெடுக்கப்பட்டது. இன்று, மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியுள்ள ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக, நிதி மூலதனத்தால் நவ-பாசிசம் வளர்த்தெடுக்கப்படுகிறது. வாரி இறைக்கப்படும் நிதியைக் கொண்டும் கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்களின் துணை வேண்டும் நவ-பாசிசம் வளர்த்தெடுக்கப்படுகிறது.

அன்றும் சரி இன்றும் சரி, அதிதீவிர தேசியவாதம், கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்பு, புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு போன்றவற்றை பரப்புவதன் மூலம் பாசிசம் வளர்கிறது. அன்று யூதர்கள் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர்; இன்று யூதர்களுக்கு பதிலாக முஸ்லிம்கள் எதிரிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். மூன்றாம் பாலினத்தவர்களை (LGBTQIA+) இழிவாக சித்தரித்து, அவர்களின் உரிமைகளை மறுக்கும் போக்கும் காணப்படுகிறது.

அன்றும் கம்யூனிசம் தான் — சோவியத் ரஷ்யா தான் — பாசிசத்தைக் களத்தில் நின்று மோதி வீழ்த்தியது. இன்றும் பாசிஸ்டுகளை வீழ்த்த வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளின் தோள்கள் மீதுதான் இருக்கிறது!

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க