கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் – ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை – 25 ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓட்டூர், பாறையூர், கொல்லப்பள்ளி, மாரிகவுண்டனூர், சோமநாதபுரம், கங்கசந்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவை. பெரும்பாலானோர் சிறு, குறு விவசாயிகள் ஆவர். இப்பகுதிகளில் சுமார் 800 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர்.
இங்கு விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை குருபரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூர் பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் விவசாயம் அல்லாத நேரங்களிலும், நிலமற்றவர்களும் மேற்சொன்ன பகுதிகளுக்கு கட்டட வேலைகளுக்கு செல்கின்றனர்.
மேலும் இக்கிராமங்களுக்கு பாறையூரில் ஒரு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு 8.கி.மீ தொலைவிலுள்ள குருபரபள்ளிக்கு நடந்து சென்று வரவேண்டிய நிலை உள்ளது. சாலைகள் இருந்தும் இக்கிராமங்களுக்கு இதுவரை பேருந்து வசதி இல்லை.
சுமார் 200 மாணவர்கள் வரை இக்கிராமங்களிலிருந்து உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு செல்கின்றனர். பெரும்பாலானோர் தினமும் நடந்து செல்கின்ற நிலைமைதான் உள்ளது.
இக்கிராமங்களுக்கு அருகில் ஓடும் மார்க்கண்டேயா நதி (இது கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் கலக்கிறது) கே.ஆர்.பி அணையில் சென்று கலக்கிறது. தண்ணீர் ஓடாத காலங்களில் ஆற்றின் குறுக்கே நடந்து சென்றால் குருபரபள்ளிக்கு செல்வதற்கு 4.கி.மீ குறையும். தண்ணீர் ஓடும் காலங்களில் ஆற்றைக் கடப்பது ஆபத்தானது என்பதால் 8.கி.மீ சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
பேருந்து வசதி இல்லாததால் மாணவர்களுக்கும், பகுதி மக்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள் :
மாணவர்கள் குருபரபள்ளிக்கு ஊரிலிருந்து வந்து நெடுஞ்சாலையின் வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் நெடுஞ்சாலையில் நடக்க வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் ஓட்டுரைச் சேர்ந்த பள்ளி மாணவனுக்கு விபத்து ஏற்பட்டதில் கால் முறிந்துள்ளது.
புத்தகப்பையை வெகுதூரம் சுமந்து செல்வதால் உடல்ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. நடந்து செல்வதன் காரணமாக பள்ளிக்கு தாமதமாக செல்லும் சூழல் இருப்பதால், பள்ளியில் அதுகுறித்து கேள்விகள் எழும் நிலையில் மாணவர்கள் அன்றாடம் மன அழுத்தத்தில் இருந்தே கல்வி கற்கும் சூழல் உள்ளது. இதனால் கல்வி கற்கும் திறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சிறு தடங்கல் என்றாலும் பள்ளிக்கு தினசரி வருகை குறையும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
சிறப்பு வகுப்புகள் இருக்கும்பொழுது இரவு 7 மணிக்கு வீட்டுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவிகள் அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக மாணவிகளின் படிப்பை நிறுத்தும் ஆபத்தும் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களும் தினமும் அச்சத்துடன்தான் வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
இவ்வூரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு இடமாற்றம் செய்தால் பெரும்பாலான ஆசிரியர்கள் இங்கு வருவதற்கு யோசிக்கும் நிலைதான் உள்ளது.
நடக்கும் தூரம் சற்றுக் குறையும் என்பதற்காக ஆற்றில் தண்ணீர் சற்று குறைவாக ஓடும்பொழுது ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து செல்லும்போது தண்ணீரில் இழுத்துச் சென்ற நிகழ்வும் நடந்துள்ளது.
விவசாயிகளுக்கு காய்கறிகளை கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூர் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்தவும் கடுமையான சிரமங்கள் ஏற்படுகின்றன.
தீர்விற்கான மக்களின் முயற்சிகளும், அரசின் அணுகுமுறையும் :
மாணவர்களுக்கு பேருந்து வசதி காலை, மாலையில் வேண்டும். அது மட்டும் நடந்தாலே போதும் என்றே மக்கள் கூறுகின்றனர்.
பேருந்து வசதி கோரி தொடர்ந்து எடுத்த முயற்சிகளால் போக்குவரத்துத் துறை சார்பாக டிப்போவில் இருந்து இதுவரை 10 முறை வந்துள்ளார்கள். GM வந்து பார்த்துள்ளார். அதேபோல் வேப்பனப்பள்ளி தொகுதியின் தற்போதைய MLA கே.பி.முனுசாமியிடமும் பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி கலெக்டரிடமும் மனு அளித்துள்ளனர்.

தொடர்ந்து முயற்சிகள் எடுத்தும் மக்களின் அடிப்படையான இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் கடந்த 25 ஆண்டுகளாக நீடிப்பதாக இப்பகுதி மக்கள் ஆதங்கத்தோடு கூறுகின்றனர். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதே பெரும்பான்மையான மக்களின் குமுறலாக உள்ளது. தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகளும், மனு கொடுக்கும்போது அதிகாரிகளும் வந்து பார்த்துவிட்டு பேருந்து வசதி செய்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுக்கின்றனர். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தொடர்கதையாக உள்ளது. மக்கள் நம்பி நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் என்றே சொல்ல வேண்டும்.
ஏறக்குறைய பேருந்து வசதி இல்லாததால் ஏற்படும் கஷ்டங்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் நிலையில் மக்கள் இதை சகித்துக் கொள்ளப் பழகிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கிற்கு ஒரு காரணம் என்றும் கூற முடியும்.
பேருந்து வசதி செய்து தருவதில் போக்குவரத்துத் துறை சார்ந்த பிரச்சினை:
இது குறித்து போக்குவரத்து துறை தொழிலாளிகளிடம் கேட்டபொழுது அவர்கள் கூறியது என்னவெனில்,
தங்கள் பகுதிக்கு பேருந்து வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தால், அந்த வழித்தடத்தை ஆய்வு செய்து புதிய பேருந்துகள் விடுவது என்பதை அதிகாரிகள் செய்வதில்லை. அதற்கு பதிலாக ஏற்கனவே வேறு வழித்தடத்தில் ஓடும் பேருந்தையே திருப்பி விடுவது என்பதே நடக்கிறது.
கூடுதல் பணிச்சுமை மற்றும் கூடுதல் தொலைவு செல்ல வேண்டியதாகிறது. ஆனால் சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஏற்கனவே ஓட்டிய அதே நேரத்தில் (ட்ரிப் டைம்) ஓட்ட வேண்டும் என்று பேருந்து ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் சுமையைத் திணிக்கின்றனர்.
புதிய ஊர்களுக்கு செல்வதால் ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் உள்ள உழைக்கும் மக்கள் வேலைக்கு செல்வதற்கான நேரத்தில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த சுமைகள் அனைத்தும் போக்குவரத்து தொழிலாளிகளின் மீது திணிக்கப்படுகிறது.
இது எதற்கும் வாய்ப்பில்லாவிட்டால் திட்டமிட்டே மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது என்பதே நடக்கின்றது.
புதிய வழித்தடங்களுக்கு புதிய பேருந்துகளை விடுவதும், அதற்காக புதிதாக ஓட்டுநர்களை வேலைகளில் நியமிப்பதும்தான் இதற்கு தீர்வு என்று கூறுகின்றனர்.
மேற்கண்ட விசயங்கள் நமக்கு எதை உணர்த்துகின்றன?
உழைக்கும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றில் மிக முக்கியமானது பேருந்து வசதி. பள்ளி செல்லவும், வேலைக்கு செல்லவும், தங்களின் அன்றாட அலுவலகளுக்கும் உழைக்கும் மக்களுக்கு பேருந்து போக்குவரத்து மிக முக்கியமானதாக உள்ளது. இப்படிப்பட்ட சேவைகளுக்காகத்தான் வரி வாங்குகிறோம் என்று அரசு கூறிக்கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய மாநிலம், எல்லாக் கிராமங்களுக்கும் சாலை வசதி, பேருந்து வசதிகள் இங்குதான் அதிகம் என்று கூறிக்கொள்ளும் தமிழகத்தில்தான் இப்படிப்பட்ட அவலநிலை தொடர்கிறது.
ஏன் இந்த அவலநிலை தொடர்கிறது? இந்த அளவுக்கு இழுத்தடிப்பதற்கான காரணம் என்ன? சரியாகச் சொன்னால் அரசு மக்களுக்கு செய்வதாக ஏற்றுக் கொண்ட கடமைகளில் இருந்து ஒதுங்குகிறது என்பதே ஆகும். முக்கியமான விசயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காலையிலும், மாலையிலும் பேருந்து வசதி செய்து தர முடியாத மிகப்பெரும் பிரச்சினை அல்ல. உழைக்கும் மக்களுக்கு அவ்வாறு செய்து தரக் கூடாதென்பதுதான் அரசின் நோக்கமாக உள்ளது.
அதற்கு அடிப்படையான காரணம் அரசின் தனியார்மயக் கொள்கை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டும்தான் சலுகைகள் கொடுக்க வேண்டும். உழைக்கும் மக்களுக்கு கொடுக்கும் சேவைகளையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பதுதான் தனியார்மயக் கொள்கையின் அடிப்படை.
போக்குவரத்துத் துறையை படிப்படியாக தனியார்மயமாக்குவதுதான் அரசின் நோக்கம். அதனால்தான் புதிய பேருந்துகளை இயக்குவதையும், போக்குவரத்துக்கு புதிதாக ஆட்களை நியமிப்பதையும் செய்யாமல் ஏற்கனவே உள்ள தொழிலாளிகளை வாட்டி வதைக்கிறது அரசு. அதற்கு ’விடியல் அரசு’ உள்ளிட்ட எந்த ஆட்சியாளர்களும் விதிவிலக்கல்ல. அவர்களால் கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகளை மட்டுமே வாரி வழங்க முடியும். உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. அதற்கு அவர்களின் கார்ப்பரேட் எஜமானர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
இதே கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஐபோன் நிறுவனத்தின் ஆலை வரப்போகிறது என்றும் அதில் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்றும் நமது இளம் தொழிலாளர்களை அத்துக் கூலிகளாக ஐபோன் நிறுவனம் சுரண்டப்படப்போவதையே பெருமையாகப் பேசிக் கொள்கிறது தமிழக அரசு. ஆனால் அதற்கு சில பத்து கிலோமீட்டர் அருகில் உள்ள இக்கிராமப் பகுதிகளில்தான் நமது உழைக்கும் மக்களுக்கு பேருந்து வசதியின்றி அன்றாடம் நமது பிள்ளைகள் கால்கடுக்க துயரத்தோடு பல ஆண்டுகளாக பள்ளி சென்று வருகிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். வளர்ச்சி என்று கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் மக்களின் பிரச்சினைகளை மறைப்பதுதான் நடக்கிறது.
படிக்க : தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
மக்களின் வரிப்பணத்தில் இருந்து கடனாகக் கொடுத்த பல லட்சம் கோடி ரூபாயை வாராக்கடன் என்ற பெயரில் முதலாளிகளுக்கு அரசால் தள்ளுபடி செய்ய முடிகிறபோது, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரும் நிறுவனங்களுக்கு நிலம், நீர், மின்சாரம், சாலை வசதி என அனைத்தையும் மிக மிக சலுகையில் அரசால் கொடுக்க முடிகிறபோது, காலையும், மாலையும் உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க முடியவில்லை என்பது எப்படிப்பட்ட அநியாயம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
எந்த முதலாளியின் வீட்டுப் பிள்ளைகளும், பணக்கார அரசியல்வாதிகளின் வீட்டுப் பிள்ளைகளும், நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளின் வீட்டுப் பிள்ளைகளும் எக்காலத்திலும் நமது பிள்ளைகளைப் போல் கால்கடுக்க நடந்து சென்று படிக்கப் போவதில்லை. அவர்களுக்கெல்லாம் அரசுப் பள்ளிகள் ஒரு பொருட்டல்ல. அரசுப் பேருந்துகளும் பொருட்டல்ல.
காசிருந்தால் வாழு, இல்லாவிட்டால் எக்கேடோ கெட்டுப் போ என்பதுதான் அரசின் கொள்கையாக உள்ளது. இதுதான் தனியார்மயம். ஒட்டுமொத்த நாட்டையே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எழுதிக் கொடுக்க தீர்மானித்த பிறகு, உழைக்கும் மக்களின் பேருந்து வசதியும், நமது பிள்ளைகளின் துயரங்களும் இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கவா போகிறது?
நமது அடிப்படைத் தேவைகளுக்கே நாம் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டும்தான் தீர்வு கிடைக்கும் என்பதே கோடான கோடி உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
வினவு செய்தியாளர் – கிருஷ்ணகிரி