இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!

2022 ஜனவரி முதல் நவம்பர் 21 வரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக 511 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அது கூறுகிறது. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட இந்த எண்ணிக்கை அதிகம்

0

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஐக்கிய கிறித்துவ மன்ற நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நவம்பர் 26 அன்று ஐக்கிய கிறித்துவ மன்றம் (UCF) தரவு அறிக்கையை வெளியிட்டது. 2022 ஜனவரி முதல் நவம்பர் 21 வரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக 511 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அது கூறுகிறது. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட இந்த எண்ணிக்கை அதிகம்

தேவாலயங்களின் பிராத்தனைக் கூட்டங்களுக்கு இடையூறு, போதகர்கள்-அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான தாக்குதல்கள், தேவாலயங்களை சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு சம்பவங்களின் தொகுப்பாக இந்த தரவு அறிக்கை அமைந்துள்ளது.

படிக்க : சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம் !

கடந்த ஐந்தாண்டுகளுக்கான தொகுக்கப்பட்ட தரவுகள், தாக்குதல்கள் மேலும் அதிகரித்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

2018-இல் பதிவு செய்யப்பட்ட மொத்த வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 292. 2019-இல் பதிவு செய்யப்பட்ட மொத்த வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 328.  2020-இல் பதிவு செய்யப்பட்ட மொத்த வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 279. 2021-இல் பதிவு செய்யப்பட்ட மொத்த வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 505 என இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட, கிறிஸ்தவர்களுக்கு எதிரான அதிக எண்ணிக்கையிலான வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் 149 தாக்குதல்களை பதிவு செய்து முதல் இடத்தில் உள்ளது. சத்தீஸ்கர் 115 தாக்குதல்களை பதிவு செய்துள்ளது. ஜார்க்கண்ட் 48 தாக்குதல்களை பதிவு செய்துள்ளது. தென் மாநிலங்களில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முறையே 30 தாக்குதல்களை பதிவு செய்துள்ளது.

ஆந்திராவில் 2018-இல் 5 தாக்குதல்கள், 2020-இல் 8 தாக்குதல்கள், 2019-இல் 9 தாக்குதல்கள் இந்த ஆண்டு 6 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், தெலுங்கானாவில் 2022, 2021, 2020, 2019, 2018-இல் முறையே 4, 3, 6, 18, 19 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் 2018-இல் 48 தாக்குதல்கள் , 2019-இல் 56  தாக்குதல்கள், 2020-இல் 17 தாக்குதல்கள், 2021-இல் 21  தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. UCF அளிக்கும் தரவுகளின்படி, 2014 முதல் 2022 வரை தமிழ்நாட்டில் 227 தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. கிட்டத்தட்ட பாதி சம்பவங்கள் (117) கொங்கு மண்டலத்தில் இருந்து பதிவாகியுள்ளன.

கர்நாடகாவில் 2018-இல் 8 தாக்குதல்கள், 2019-இல் 27 தாக்குதல்கள், 2020-இல் 16 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் இங்கு அதிகமாக இருந்தன.

கிறிஸ்துவ சிறுபான்மை மக்களுக்கு எதிரான காவிக்குண்டகளின் வன்முறை வெறியாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பதையே இந்த தரவுகள் காட்டுகின்றன.

படிக்க : தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!

இந்தியாவில், முஸ்லீம் மக்கள் மீதான சங் பரிவார கும்பல்களின் தாக்குதல்கள் மோடி அரசாங்கம் ஆட்சி அமைந்த பிறகு தீவிரமடைந்தது. வட மாநிலங்களில் குறிப்பாக பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் முஸ்லீம் – கிறித்துவ – தலித் சிறுபான்மை மக்களுக்கு எதிரான காவிக்குண்டர்களின் மதவெறி-சாதிவெறி தாக்குதல்கள் பலமடங்கு அதிகரித்துள்ளது.

தென் இந்தியாவிலும் கர்நாடகாவில் வெளியிப்படையாகவே ஹிஜாப் பிரச்சினை தொடங்கி பல்வேறு முஸ்லீம்-கிறித்தவர்கள் மீதான வன்முறைகள் அறங்கேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குண்டுவெடிப்புகள், பி.ஜே.பி அண்ணாமலை போன்றோரின் வெறுப்பு பேச்சுகள், சங் பரிவாரங்கள் மதக் கலவரைத்தை தூண்ட ஆயத்தமாவதை தெட்டத்தெளிவாக்கி வருகின்றன.

நாடுமுழுவதும் பற்றி படர்ந்து வரும் சங் பரிவாரங்களின் வன்முறை தாக்குதல்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களை பாதுகாக்கவும் களமிறங்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்!

புகழ்
நன்றி: நியூஸ்மினிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க