ஹைதரபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் படிக்கக்கூடிய இளங்கலை பட்டபடிப்பு மாணவிகள் அக்டோபர் 28-ம் தேதி விடுதி வசதி வேண்டி கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் 3000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரி உஸ்மானிய பல்கலைக் கழகத்தின் ஒரு உறுப்புக் கல்லூரி. அக்கல்லூரியில் முதுகலை மற்றும் இளங்கலை பயிலக்கூடிய மாணவர்கள் 90 அறைகள் கொண்ட விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அதே கல்லூரியில் முதுகலை பயிலக்கூடிய மாணவிகள் மட்டும் விடுதி இல்லாத காரணத்தால், உஸ்மானிய பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். ஆனால் இதே கல்லூரியில் பயிலும் இளங்கலை மாணவிகளுக்கு விடுதியே இல்லை. அவர்கள் வெளியில் தங்கிதான் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.

இந்நிலையில், தங்களுக்கு விடுதி வசதி வேண்டும் என கோரி கடந்த அக்டோபர் 28-ம் தேதி போராட்டத்தில் ஈடுப்பட்டனர் இளங்கலை மாணவிகள். அதன் பிறகு ஐந்து நாட்கள் கடந்தும் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலுமில்லை. இதனால் மீண்டும் இளங்கலை மாணவிகள் நவம்பர் 4 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படிக்க : மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

இதன் விளைவாக நவம்பர் 8 ஆம் தேதி அமைச்சர் கே.டி.ராமராவ்,  “பெண்கள் விடுதி கட்டப்பட்டு கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டது. உங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கல்வி அமைச்சரிடம் கூறியுள்ளேன்” என ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவிகளில் ஒருவரான ஸ்ரவாணி, “விடுதி வசதி வேண்டி கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆணையர் நவீன் மிட்டலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். கிராமங்களில் இருந்து தினமும் நீண்ட தூரம் பயணித்து 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள். அனைத்து மாணவிகளுக்கு விடுதி வசதி வேண்டிய எங்கள் கோரிக்கையில் 50 சதவீதம் மட்டும் நிறைவேற்றி தருவதாக கூறி போராட்டத்தை தணிக்க முயன்றார். ஆனால், எங்கள் கோரிக்கைகளை 100 சதவீதம் நிறைவேற்றி அனைத்து இளங்கலை மாணவிகளுக்கும் விடுதி வசதி செய்து தரவேண்டும் என்று கோரினோம். அதற்கு நவீன் மிட்டல் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள். நாங்கள் செய்ய வேண்டியதை செய்வோம் என்று கூறி எங்களை மிரட்டினார்” என்று ஸ்ரவாணி கூறினார்.

நிஜாம் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் வாரங்கலை சேர்ந்த ஐஸ்வர்யா, “தனியார் விடுதிகளில் மாதம் ரூ.6000 வாடகைக்கு தங்கியுள்ளேன். இதுபோக உணவு கட்டணம், இன்னும் பிற செலவினங்களுக்காக பகுதி நேரமாக நான் வேலைக்கு செல்கிறேன். எங்களிடம் பணம் இருந்திருந்தால் நாங்கள் ஏன் அரசு கல்லூரிக்கு வரப்போகிறோம். நாங்கள் முதலாம் ஆண்டு சேரும் போது விடுதி வசதி செய்து தருகிறேன் என்றார்கள். தற்போது நாங்கள் இறுதியாண்டு பயில்கிறோம். இதுவரை எங்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திதரப்படவில்லை” என்று அவர் கூறினார்.

படிக்க : பாரதிதாசன் பல்கலையில் தேர்வு கட்டண உயர்வு! திரு.வி.க அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

இந்த நிஜாம் கல்லூரியில் கிட்டத்தட்ட பலவருடங்களாக இளங்கலை மாணவிகளுக்கு விடுதி வசதி இல்லை என்பதே அவலமானநிலை. இந்நிலையில் தற்போது பயிலும் இளங்கலை மாணவிகளின் விடாபிடியான தொடர் போராட்டத்தின் விளைவாக கல்லூரி நிர்வாகமும், அரசும் அடிபணிந்து மாணவிகளுக்கு விடுதி வசதி ஏற்படுத்தி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் 15 ஆம் தேதி நிஜாம் கல்லூரியில் பயிலும் இளங்கலை மாணவிகளுக்கு விடுதி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி தனியார்மயத்தின் விளைவாக அரசு பள்ளி கல்லூரிகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதற்கு நிஜாம் கல்லூரியின் விடுதி பிரச்சினை ஓர் துலக்கமான சான்று.

ரோகித் வெமுலா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க