சிற்பி திட்டம் – சீர்திருத்துவதற்கா? ஒடுக்குவதற்கா?

தமிழக அரசு மேற்கொள்ளும் ’சிற்பி’ திட்டத்தை கல்வியை தனியார்மயமாக்கும் அரசின் முன்தயாரிப்பாகப் பார்க்க வேண்டும். புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதாகும்.

மீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. போதை பொருள் விற்கும் மாஃபியா கும்பல்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இக்கும்பல்களை ஒழிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் டாஸ்மாக் கடைகளை நடத்தி தமிழகத்தை சீரழித்து வரும் தமிழக அரசு, தற்போது கண் துடைப்பிற்காக சில நடவடிக்கைகளை அரங்கேற்றி நாடகமாடி வருகிறது தமிழக அரசு.

கடந்த 14.09.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் போதை பழக்க வழக்கங்களில் இருந்து பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர போலீசுத்துறை சார்பில் ‘சிற்பி’ (Students in Responsible Police Initiatives (SIRPI)) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “சிறுவர்களை சமூக ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது நம் கடமை” என்று வலியுறுத்தியுள்ளார். இதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகளையும், பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!

இதில் முதல்வர்  ஸ்டாலின் பேசியதாவது: “போலீசுத்துறையை மக்களின் நண்பன் என்கிறோம். அதற்கேற்ப, மக்கள் அனைவரும் போலீசுத்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். போலீசுத்துறையும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றங்களே நிகழாமல் தடுக்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருவாய் இல்லாமை, ஆதரவின்றி வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவையே சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபட காரணமாக உள்ளன. இவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுக்க முடியும்.

போதைப்பொருள் ஒழிப்பு, குடிப் பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த, அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்துதல், சுய ஆளுமைத் திறனை மேம்படுத்துதல், பெற்றோர் பேச்சை மதித்து நடத்தல், பொதுமக்களுடன் தொடர்பு, இளம் வயதிலிருந்தே போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கச் செய்தல், மாநிலத்தின் செழுமை, வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடம் உருவாக்க வேண்டும்.

இத்திட்டத்துக்கு 100 பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவிகள் இந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள். அவர்களுக்கான வகுப்புகளை போலீசு அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் நடத்துவார்கள்” என்று இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை முதல்வர் விளக்கியுள்ளார்.

மேலே முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ள படி பள்ளி மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகவும், சமூக பற்றுள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டியதும், சிறார் குற்றங்கள் நிகழாதபடியும், மாணவர்களை மதுபழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதும் அவசியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. கட்டாயம் செய்தாக வேண்டும்.

ஆனால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சிற்பி திட்டம் இந்த வேலையை  நிறைவேற்றுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த போவது போலீசுத்துறை ஆகும்.

போலீசுதான் மாணவர்களுக்கு முதல்வர் குறிப்பிடுகின்ற நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்க போகிறார்கள் என்றால், மாணவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களால் செய்ய முடியாததை போலீசால் மட்டும் எப்படி செய்ய முடியும்? இந்த நற்பண்புகளை கற்றுக் கொடுக்கத்தான் பாடத்திட்டங்கள், பயிற்றுவிக்கும் முறைகள், அவற்றிற்கான ஆசிரியர்கள், பள்ளிகள் ஆகிய கட்டமைப்புகள் உள்ளன. இந்தக் கட்டமைப்பு சரியாக செயல்படவில்லை என்கிறபோது கட்டமைப்பை சரிசெய்யாமல், போலீசை வைத்து கற்றுக் கொடுப்பது எப்படி தீர்வாகும்?

மாணவர்களுக்கு போதை பொருள், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் நாம் அனைவரும் அறிந்ததே. போதை பொருள் விற்கும் மாஃபியா கிரிமினல் கும்பல்களும், மதுவை விற்கும் அரசும் இதன் மூலம் கல்லாகட்டி வருகிறது. அவற்றை ஒழித்து கட்டாமல் மாணவர்களை குற்றவாளிகளாக்கி போலீசு மூலம் கண்காணிக்க வழி செய்வதே ’சிற்பி’ திட்டமாகும்.

மேலும், குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருவாய் இல்லாமை, ஆதரவின்றி வளர்வது, வேலையின்மையே குற்ற செயல்களில் ஈடுபட காரணம் என கூறிவிட்டு அதை தீர்ப்பதற்கான வேலையை செய்வதை புறந்தள்ளிவிட்டு, பள்ளி மாணவர்களை  கண்காணிப்பதால் மட்டும் இவை எல்லாம் தீர்ந்து விடுமா?

கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலர் வெ.இறையன்பு, “இத்திட்டத்தில் மாணவர்களுக்கு போலீசுத்துறையினரால் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். போதை ஒழிப்பில் இருந்து பல்வேறு நன்னடத்தைகளை கற்பார்கள். தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்வார்கள். இது மற்ற மாணவர்களிடம் நாமும் தூய்மையானவர்களாக திகழ வேண்டும், திறன் பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதன்மூலம் அவர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வர். 100 பள்ளிகளிலும் இப்பழக்கம் ஏற்படும்போது, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாற்றம் ஏற்படும். எதிர்காலத்தில் நாட்டுக்கு பங்களிப்பவர்களாகவும், சட்ட திட்டத்தை மதிப்பவர்களாகவும் திகழ்வார்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த சிற்பி திட்டம் விதைக்கிறது” என்றார்.

பார்க்க : அரசுப் பள்ளி ஆசிரியர்களை வதைக்கும் மத்திய, மாநில அரசுகள்!

இதிலிருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்ன வென்றால் இனி பள்ளியில் பாடம் நடத்தபோவது கட்டாயம் ஆசிரியர்கள் இல்லை போலீசுதான் என்பதாகும். இவ்வாறு போலீசு வழங்கும் பயிற்சியின் மூலம் தங்களை தாங்களே ஒழுங்குப்படுத்திக் கொள்வதோடு, இதை பார்க்கும் மற்ற மாணவர்களுக்கும் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என்றால், அந்த பயிற்சியை ஆசிரியர்களால் ஏன் கொடுக்க முடியாது.

போலீசு மூலம் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் வேலையை அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் தமிழக அரசு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது போலீசு கண்காணிப்புக்குள் அரசுப் பள்ளிகளை கொண்டு வரும் தமிழக அரசு, தனியார் பள்ளிகளில் நடக்கும் கிரிமினல் குற்றங்கள் மற்றும் சீரழிவுகளுக்கு எந்த கண்காணிப்பையும்  போடுவதில்லையே அது ஏன் என்ற கேள்விக்கு எந்த விளக்கமில்லை. அதாவது தனியார் பள்ளி மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கும், ஒழுக்க சீர்கேட்டிற்கும் பலியாகவில்லை என்றாகிவிடுமா?

ஆகையால் தமிழக அரசு மேற்கொள்ளும் ’சிற்பி’ திட்டத்தை கல்வியை தனியார்மயமாக்கும் அரசின் முன்தயாரிப்பாகப் பார்க்க வேண்டும். புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதாகும்.

போதைப் பொருட்கள், விபச்சாரம் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களின் பிறப்பிடம் போலீசுதான். போலீசுத்துறையை ஒழித்தாலே குற்றங்கள் குறைந்துவிடும் என்பதுதான் எதார்த்தம். அதனைவிடுத்து போலீசை வைத்து குற்றங்களைக் குறைக்கப்போவதாக சொல்வது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, தமிழக அரசின் சிற்பி திட்டத்தை எதிர்த்துப் போராடுவது நமது அனைவரின் கடமையாகும்.

அபுபக்கர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க