கோவை கார் வெடிப்பு சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!

வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது, தி.மு.க. ஆட்சியைக் கலைத்து பா.ஜ.க. ஆட்சியை நிறுவுவது ஆகியவைதான் சங்கப் பரிவாரக் கும்பலின் உடனடி நோக்கங்களாகும்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. அதில் ஜமேஷா முபீன் என்ற முஸ்லிம் இளைஞர் உயிரிழந்தார். கார் வெடித்தது வெறும் விபத்தல்ல; இதன் பின்னணியில் பெரிய சதித்திட்டம் உள்ளது என்ற கோணத்தில் இது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த உடனேயே, விசாரணை தொடங்கப்படாத நிலையில், “கோவையில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கிவிட்டது”, “பயங்கரவாதத்தின் ஆணிவேர் அகற்றப்பட வேண்டும்”, “இவ்வழக்கை உடனடியாக என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும்” என்று பரபரப்பூட்டி முஸ்லிம் எதிர்ப்புக் கூச்சலிட்ட பாஜக, ஒன்றியத்தில் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடியும் கொடுத்தது.

பா.ஜ.க. கோரியபடி, தற்போது என்.ஐ.ஏ இவ்வழக்கை விசாரித்துவருகிறது. கோவையை பயங்கரவாத நகரம் போல காட்டி போலீசு கெடுபிடியை அதிகரிக்கச் செய்த வகையில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது; அப்பாவி இளைஞர்கள் பலரும் பா.ஜ.க.வின் பீதியூட்டும் பிரச்சாரத்தால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் கூலிப்படையைப் போல செயல்படும் என்.ஐ.ஏ. தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தி பீதியூட்டி வருகிறது.


படிக்க : கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!


ஆனால், பா.ஜ.க.வும் அதன் பார்ப்பன சங்கி ஊடகங்களும் எதிர்ப்பார்த்த வகையில் தமிழகம் பீதிக்கு உள்ளாகவில்லை; முஸ்லிம் மக்களின் மீது யாரும் வெறுப்புணர்ச்சி கொள்ளவில்லை; ‘நமது ஊரில் குண்டுவெடித்துவிடுமோ’ என்று யாரும் அச்சப்படவும் இல்லை. பா.ஜ.க. ஆளும் பசுவளைய மாநிலங்களைப் போல அல்லாமல், தமிழகத்தில் முஸ்லிம் மக்களுக்கும் இந்து மக்களுக்கும் நிலவுகிற நல்லிணக்கமே அதற்கு முக்கிய காரணமாகும். மற்றொரு பக்கம், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாத காரணத்தால், இதை விவாதிப்பதிலும் மக்கள் அக்கறை கொள்ளவில்லை.

‘முஸ்லிம் எதிர்ப்பு இந்துத்துவ வெறியை கிளறிவிட நினைக்கும் பா.ஜ.க.வின் திட்டம் தமிழகத்தில் பலிக்காது’, ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல பயங்கரவாத அமைப்பு இருக்க முடியுமா’- என்றவாறு பா.ஜ.க.வை தாக்குதல் (Offensive) நிலையிலேயே சமூக ஊடகங்களில் தமிழக மக்கள் அணுகினர்.

தினமணி, இந்து தமிழ்திசை, துக்ளக் போன்ற பா.ஜ.க. ஆதரவு பார்ப்பன ஊடகங்கள், அக்கட்சியின் எடுபிடியான சில சில்லறை அமைப்புகள் மட்டுமே தீவிரமான பீதி அரசியலைப் பரப்பின. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளான பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் கூட சில பொதுவான அறிவிப்புகளுடன் முடித்துக் கொண்டன. தி.மு.க. எதிர்ப்பரசியலைப் பேசியே காலத்தை ஓட்டிவரும் அ.தி.மு.க. தொடக்கத்தில் ஒன்றிரண்டு அறிவிப்புகளை வெளியிட்டது. அத்துடன் அதுவும் பயங்கரவாத பீதியூட்டிப் பேசுவதை நிறுத்திக் கொண்டது.

பி.எஃப்.ஐ. மீது தடை, எஸ்.டி.பி.ஐ. மீது சோதனை, பா.ஜ.க. அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு, தற்போது கோவை கார் வெடிப்பு – என தொடர்ச்சியான சம்பவங்களை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வினர் தீவிரமான முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களைக் கட்டியமைத்த போதும் தமிழகத்தின் பொதுநிலைமை இதுதான்.

தீவிரவாதப் போக்கிற்கு பலியான யாரோ ஒரு இஸ்லாமிய இளைஞர் அவ்வாறு செய்திருக்கலாம் என்ற கருத்தே தமிழக மக்களின் பொதுமனநிலையாக இருந்தது. இதனைத் தாண்டி முஸ்லிம் தீவிரவாதிகள் தமிழகத்தில் நுழைந்துவிட்டதாக எந்த பொதுகருத்தும் தமிழக மக்களிடையே உருவாகவில்லை. அவ்வாறு உருவாக்குவதற்காக பா.ஜ.க.வும் சங்கப் பரிவாரக் கும்பலும் அடுத்தடுத்து வீசிய அம்புகளெல்லாம் புஸ்வானமாகின.

சான்றாக, 2021-ஆம் ஆண்டு வரை (அதாவது தி.மு.க. ஆட்சிக்கு முன்) தமிழக உளவுத்துறையில் சிறப்பு வாய்ந்த அதிகாரிகள் பணியில் இருந்ததாகவும்; தற்போது உளவுத்துறையில் 60 சதவிகிதம் குறிப்பிட்ட மதம் (முஸ்லிம்) சார்ந்த அதிகாரிகளே இருப்பதால், இவ்வழக்கின் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படவில்லை என்றார் அண்ணாமலை.

அதைத்தொடர்ந்து, தமிழகப் போலீசு துறையை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தும் வகையில் பேசிவரும் அண்ணாமலையைக் கண்டித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கண்டன அறிக்கை வெளியிட்டார். இதுவரை தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களும் இவ்வாறு ஒரு போலீசு உயரதிகாரி கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு தரந்தாழ்ந்து சென்றதில்லை என்றே தெரிகிறது.

இக்கண்டனத்திற்கு பிறகு பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டு போலீசார் திறமையானவர்கள்தான், போலீசுத்துறையை வழிநடத்தும் டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் மட்டுமே தவறான வழிகாட்டுதலில் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

“இந்துக்களின் பண்டிகை நாளான தீபாவளியன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்” என்று எச்.ராஜா, வானதி சீனிவாசன், அர்ஜூன் சம்பத் போன்ற கழிசடைகள் தொண்டையைக் கிழித்துக் கொண்டிருந்தாலும், அவையெல்லாம் இந்து மக்களாலேயே சீந்துவாரின்றி ஒதுக்கப்பட்டன.

சிறுபான்மையினருக்கு எதிராக பிரச்சாரம் செய்வதோடு, இச்சம்பவத்தைப் பயன்படுத்தி, தி.மு.க. அரசுக்கும் நெருக்கடி கொடுக்கலாம் என்று கனவு கண்டது சங்கி கும்பல். ஆனால், குண்டுவெடிப்பு சம்பவமே பீதியூட்டவில்லை என்பதை கவனிக்காத இந்த கும்பல், இதனைப் பயன்படுத்தி தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டதுதான் நகைப்புக்குரியது.

“அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு தீவிரவாதத் தாக்குதல் என்பது சில மணி நேரங்களிலேயே தெரிந்துவிட்டது. ஆனால், சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்துதான் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டது. இது ஏன்” என்று கேள்வி எழுப்பினார் ஆளுநர் ரவி. ஆனால், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த உடனேயே என்.ஐ.ஏ.வே தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கிவிட்டது, தமிழக அரசும் நான்கு நாள் இடைவெளியிலேயே வழக்கை என்.ஐ.ஏ.விடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துவிட்டது. இதனையெல்லாம் அமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துக்காட்டிப் பேசியது சங்கிகளைப் பார்த்துக் காறித்துப்புவதாக இருந்தது.

கோவையில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருந்தால் தமிழக அரசு கலைக்கப்பட்டிருக்கும் என்று வெளிப்படையாகவே மிரட்டினர் பா.ஜ.க.வினர். ஆனால், இதையெல்லாம் கேட்பதற்குக் கூட தமிழகத்தில் ஆள் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் குண்டுவெடிப்பு தொடர்பாக சங்கப் பரிவாரக் கும்பலின் பிரச்சாரத்தின் நிலைமை.

இஞ்சி தின்ற குரங்கு வாயெரிச்சலில் செய்வதறியாமல் குதிப்பதுபோல், இம்மதவெறிக் கும்பல் தங்கள் நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள முடியாமல், மூக்குடைபடுகிறோமே என்ற பதற்றத்தில் சகட்டு மேனிக்கு உளறிக் கொண்டிருந்தது.

000

வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது, தி.மு.க. ஆட்சியைக் கலைத்து பா.ஜ.க. ஆட்சியை நிறுவுவது ஆகியவைதான் சங்கப் பரிவாரக் கும்பலின் உடனடி நோக்கங்களாகும். இந்த நோக்கங்களை ஈடேற்ற கோவை குண்டுவெடிப்புப் பிரச்சினையைப் பயன்படுத்த இயலாமல் போனது சங்கப்பரிவாரக் கும்பலுக்கு பெருத்த அடியாகும்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மட்டும், அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை, திருவாரூரில் கருணாநிதியின் பெயரை தெருவுக்கு வைப்பதற்கு நடந்த முயற்சி, ஆ.ராசா மனுதர்மத்தை அம்பலப்படுத்தியது உள்ளிட்டு பல்வேறு நிகழ்வுகளைப் பயன்படுத்தி மதவெறி, தி.மு.க. எதிர்ப்பரசியலை மேற்கொண்டது எதுவும் பலனளிக்கவில்லை. பா.ஜ.க.வினரே பெட்ரோல் வெடிகுண்டுகளை தங்களது வீடுகளில் வீசிவிட்டு பீதியூட்ட மேற்கொண்ட கேடுகெட்ட முயற்சிகளெல்லாம் உடனுக்குடன் அம்பலப்பட்டுப் போனது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக, மாநில அரசு வரியைக் குறைக்க வேண்டும் என்றும் விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டங்களைச் செய்வது; இந்தி மொழிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே, காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் விழா நடத்துவது, ஆளுநர் மூலமாக தமிழைப் பார்ப்பனியத்துடன் முடிச்சுப் போட்டு இழிவுபடுத்துவது; பி.எஃப்.ஐ. தடை, எஸ்.டி.பி.ஐ. அலுவலங்களில் சோதனை ஆகிய அனைத்தும் அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் தோல்வியடைந்து வருகின்றன. அந்தவகையில்தான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் பா.ஜ.க.விற்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபு இதற்கு காரணமாக இருந்தாலும், இந்த நேர்மறைக் கூறை வைத்து மட்டுமே பா.ஜ.க.வால் தமிழகத்தை வெற்றிக் கொள்ள முடியாது எனக் கருதி இறுமாந்திருக்க முடியாது.

தமிழகத்தில் சித்தாந்தரீதியாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் காலூன்ற முடியவில்லை என்றபோதும், அமைப்பு ரீதியாக தங்களுடைய அடித்தளங்களை விரிவுபடுத்தி வருகின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நீதித்துறை, போலீசுத்துறை, கல்வித்துறை என அரசின் கட்டுமானங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். தனது ஆட்களை வேகமாக நுழைத்துக் கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும்கூட ஆர்.எஸ்.எஸ். ஷாகா நடத்தப்படுகின்றன. கோவையில் ஜனநாயக சக்திகள் கோட்சேவை விமர்சிக்கத் தடை, மோகன் பகவத்தின் தமிழக வருகையை ஒட்டி மதுரை துணை வட்டாட்சியர் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்ததால் உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை, கள்ளக்குறிச்சி மெட்ரிக் பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் போலீசின் செயல்பாடு உள்ளிட்டு பல்வேறு நிகழ்வுகள் அதற்குச் சான்றுகளாக உள்ளன.


படிக்க : மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினரை கைது செய் || ஆர்ப்பாட்டம்


இன்னொருபக்கம், ரவுடிகளையும் கிரிமினல் குற்றவாளிகளையும் தங்களது கட்சியில் இணைத்துக் கொள்வது, சாதி அமைப்புகளை வளைப்பது, செல்வாக்குள்ள மாற்றுக் கட்சி நபர்களை விலைபேசி வாங்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் சங்கப் பரிவாரக் கும்பல் தமது அமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. ஓட்டுச் சீட்டு அரசியல் உருவாக்கியுள்ள பிழைப்புவாத சிந்தனையை மூலதனமாக்கிக் கொண்டும், காசை வாரியிறைத்தும் தெருவுக்குத் தெரு பிள்ளைப் பிடிப்பதைப்போல உறுப்பினர் சேர்க்கும் பணியில் வெறித்தனமாக ஈடுபடுகிறது பா.ஜ.க.

ஆகையால், இந்த பாசிஸ்டுகளை அரசியல்ரீதியாக மட்டுமல்ல, அமைப்புரீதியாக முறியடிப்பதும் அவசியமாகும். பெரும்பான்மை மக்களை அரசியல்ரீதியாக வென்றெடுத்த பின்னர்தான் பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று கருதி நாம் அலட்சியமாக இருக்க முடியாது. அரசுக் கட்டுமானத்தில் கட்டமைத்துவரும் வலைப்பின்னலும், பிழைப்புவாத பொறுக்கி அரசியலின் மூலம் தாம் சேர்த்துவரும் குறிப்பிட்ட அளவு மக்கள் அடித்தளமுமே பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற போதுமானது.

எனவே, தமிழகத்திலுள்ள பாசிச எதிர்ப்பு சக்திகள் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலை அமைப்புரீதியாக முறியடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்-இளைஞர்கள், சிறுவணிகர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் காவி கும்பலுக்கு எதிராக அமைப்புரீதியாக அணிதிரட்டி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராடுவதன் மூலமே பாசிசத்தை வேரடி மண்ணோடு பிடுங்கி எறிய முடியும்!


வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க