Thursday, April 17, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுஅடாவடி வேலைநீக்கம்: ஐ.டி நிறுவனங்களுக்கு பதிலடி! | பு.ஜ.தொ.மு

அடாவடி வேலைநீக்கம்: ஐ.டி நிறுவனங்களுக்கு பதிலடி! | பு.ஜ.தொ.மு

சுமார் அரை கோடி ஊழியர்கள் பணிபுரியும் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் அமைக்க முடியாது என்றிருந்த அவலத்திற்கு பு.ஜ.தொ.மு தான் 2015-ல் முடிவு கட்டியது என்கிற பெருமிதம் எமக்கிருக்கிறது.

-

30.12.2022

அடாவடி வேலைநீக்கம்: ஐ.டி நிறுவனங்களுக்கு பதிலடி!

பத்திரிகை செய்தி!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி பிரிவு ஊழியர் தோழர் செந்தில்குமார் என்பவர் காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் என்கிற அமெரிக்க ஐ.டி நிறுவனத்தின் சென்னை கிளையில் புரிந்தபோது, பணியில் மூத்தவர்களை ‘களை’ எடுத்து, புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தது. பணியில் மூத்தவர் என்பதால் அதிக சம்பளம் தர வேண்டும். புதியவர்களுக்கு அற்ப சம்பளம் கொடுத்தால் போதும். இதுதான் நிர்வாகத்தின் நல்லெண்ணம். வேலைநீக்கத்தை விட ராஜினாமா என்கிற ‘கவுரவ’க் ஆட்குறைப்புதான் நிர்வாகத்தின் உத்தியாக இருந்தது.

நிர்வாகத்தின் தந்திரத்துக்கு சிலர் பலியாகினர். சிலர் பலியாக மறுத்தனர். பலியாக மறுத்தவர்களில் ஒருவர்தான் தோழர் செந்தில்குமார்.

இதன் காரணமாக 5-6 மாத இடைவெளிகளில் சென்னையிலிருந்து கோவை, புனே, பெங்களூரு போன்ற இடங்களுக்கு கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட்டார். உடல் நலப்பிரச்சினையை காரணம்காட்டி கோவையிலேயே பணியில் அமர்த்த -பணி வழங்க- கோரினார். இதை ஏற்காத நிர்வாகம் காத்திருப்போர் பட்டியலில் வைத்தது.

திடீரென கொல்கத்தாவுக்கு இடமாற்ற உத்தரவு என அடுத்த சுற்று தாக்குதலைத் தொடங்கியது, நிர்வாகம். மீண்டும், மீண்டும் உடல் நலத்தை சுட்டிக்காட்டி கோவையிலாவது பணியமர்த்துங்கள் என்று கேட்டார். இதை பெயரளவுக்கு கூட பரிசீலிக்காத நிர்வாகம், பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப்  சட்டவிரோத வேலைநீக்கம் செய்தது.


படிக்க : மாற்றியமைக்கப்பட்ட பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு! | பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி!


இதை எதிர்த்து நடைபெற்ற வழக்கில் சென்னை கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தோழர் செந்தில்குமாரின் வேலைநீக்கம் செல்லாது எனவும், 50% பின் தேதியிட்ட ஊதியத்துடன் சென்னை அல்லது கோவையில் பணி வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது, ஒரு வழக்கின் சுருக்கமான பின்னணி. இதைப்போல வழக்குகள், வெவ்வேறு ஐ.டி. நிறுவனங்கள் மீது நடந்து கொண்டிருக்கின்றன. சில வழக்குகளை பு.ஜ.தொ.மு-வின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்தி வந்தது. அதில் ஒரு வழக்கில்தான் தற்போதைய உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட பு.ஜ.தொ.மு மேற்கொண்ட நடவடிக்கைகளில் மீண்டும் வேலைபெறுகின்ற இரண்டாவது ஐ.டி ஊழியராக தோழர் செந்தில்குமார் திகழ்கிறார். (அக்டோபரில் விப்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த தோழர் காளிராஜன் இத்தகைய உத்தரவைப் பெற்றார்.)

இந்த வெற்றிகளுக்கு பு.ஜ.தொ.மு தொடக்கக்கட்டத்தில் வழிகாட்டுதல் கொடுத்து துணைநின்றது. 2021 பிளவுக்குப் பிறகு தொடர்புகள் அறுந்த நிலையில் இத்தகைய தீர்ப்புகளை பெற்றுள்ளோம். விடாப்பிடியான போராட்டம்.

தொழிலாளி வர்க்கத்தை பலப்படுத்தும் என்பதற்கு இந்த தீர்ப்பு இன்னுமொரு சான்றாகும்.  சட்டப்போராட்டத்தின் மூலம் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானதுதான் என்கிற போதிலும், கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில், சட்டப் போராட்டம் என்கிற  வரம்புக்குட்பட்ட போராட்டம் கூட சிறிதளவேனும் நம்பிக்கையூட்டக் கூடியதாக இருக்கிறது. ஆனால், இத்தகைய வரம்புக்குட்பட்ட போராட்டத்துக்கு கூட முன்வராமல் தயங்கி நிற்கும் அறிவுத்துறை ஊழியர்கள் தங்கள் அச்சத்தை துடைத்தெறிய ஊக்கமளிப்பதாக இத்தகைய தீர்ப்புகள் இருக்கின்றன.

இதுபோன்ற எண்ணற்ற முன்னெடுப்புகள் தேவைப்படுகின்ற இந்த தருணத்தில் நாடு முழுவதிலும் ஐ.டி ஊழியர்கள் தங்களை அமைப்பாக்கிக் கொண்டு வருகின்றனர். சுமார் அரை கோடி ஊழியர்கள் பணிபுரியும் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் அமைக்க முடியாது என்றிருந்த அவலத்திற்கு பு.ஜ.தொ.மு தான் 2015-ல் முடிவு கட்டியது என்கிற பெருமிதம் எமக்கிருக்கிறது. பு.ஜ.தொ.மு அமைத்த அடித்தளத்தின் மீது பயணிப்போருக்கு வாழ்த்துகள்.


இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க