தலயா? தளபதியா? கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?

தமிழ் மொழிக்காவும், தமிழ் கலாச்சாரத்திற்காகவும் தங்கள் உயிரை விட்ட வீரர்களையும் தியாகிகளையும்தான் நாம் தல, தளபதியாக கொண்டாட வேண்டும். ஆனால் இவர்களை கொண்டாட மறந்தது இன்றைய இளைய சமூகம்!

டந்த ஒரு மாத காலமாக தலயா? தளபதியா?; வாரிசா? துணிவா? என்ற போட்டாபோட்டியை ஊடகங்கள் ஊதிபெருக்க, இரசிகர்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது. இரண்டு படங்களும் வெளியானதால் திருவிழாபோல் திரையரங்குகள் இளைஞர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது.  பால் அபிஷேகம், காவடி, அலகு குத்துவது என எண்ணற்ற மூடத்தனங்கள் அரங்கேறின.

அப்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்குக்கு சென்ற அஜித்  ரசிகரான  சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பரத்குமார் என்பவர் அருகில் வந்த லாரியின் மீது ஏரி நடனமாடி கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்து இறந்துவிட்டார். இப்படி உயிரிழப்புகளும் நடந்துள்ளது.

இப்படி தன் உயிரை பணயம் வைத்து தல – தளபதி என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு இவர்கள் என்ன செய்தார்கள். உன் வயிற்றுக்கும், வாழ்வுக்கும் வழி சொல்வார்களா? இன்றைக்கு தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்களா? இல்லை போரடினார்களா? மாறாக கோடிக்கணக்கில் வருமானம், தன்னை கொண்டாட ஒரு கூட்டம் இருக்கிறதே என்ற பெருமிதம். தமிழுக்கும் தமிழ் சமுகத்திற்க்கும் ஒன்றும் செய்யாத இவர்களை தல, தளபதி என்று வானத்தில் தூக்கி வைத்து கொண்டாடிவருகிறோம். ஆனால் மாறாக நாம் கொண்டாட வேண்டியது யாரை?

1938-39 – ஆம் ஆண்டு அப்போதிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ராஜாஜியிடம் இருந்து இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என்று அறிவிப்பு வெளியானது, தமிழ் மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது,  போராளிகள், சமுக ஆர்வலர்கள், மொழி அறிஞர்கள் என்று அனைவருமே இந்தி திணிப்பை எதிர்த்தார்கள். நாங்கள் மாண்டாலும் பரவாயில்லை எங்கள் சந்ததிகள் தமிழ் கற்று வாழவேண்டும் என்று உயிர் நீத்தவர்கள் பலர்.

இந்த மொழிப்போரில் முதல் முதலாக தன் உயிரை நீத்தவர்கள் ”நடராசன், தாளமுத்து”. இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக போரடினார்கள் என்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்; அவர்களுக்கு உடல் நிலை பாதிப்படைந்த நிலையில்  சிகிச்சைத் தேவைப்பட்டது. காங்கிரஸ் கட்சி உங்களுக்கு சிகிச்சை தரவேண்டுமானால் நீங்கள் மன்னிப்புக் கடிதம் தர வேண்டும் என்றது. தமிழுக்காக எங்கள் உயிரை விடுவோமே தவிர எங்கள் கரங்கள் ஒரு போதும் மன்னிப்புக் கடிதம் எழுதாது என்று கூறி சிறையிலையே உயிரை விட்டார்கள். இதனைத் தொடர்ந்து மொழிப்போர் தீவிரம் அடைந்தது, உடனே அன்றைய பிரதமர் , ”1950 -இல் இருந்து 1965-ற்கு இந்த அறிவிப்பு தள்ளி வைக்கப்படுகிறது, அவரவர் தாய்மொழிகளிலேயே பாடங்கள் பயிற்றுவிக்கப்படும், ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடரும்” என்று கூறினார்.


படிக்க: ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்


ஆனால் நேருவின் மறைவுக்கு பின்னர் வந்த பிரதமர் லால்பகதுர் சாஸ்த்திரி மீண்டும் இந்தி மொழியை முதன்மை மொழியாக கொண்டுவர முயற்ச்சியை மேற்கொண்டார். அன்றைய மதராஸ் மாகாணத்தின் முதல்வர் ”பக்தவச்சலம்” அதை நடைமுறைப் படுத்தினார். இதனால் தென்னிந்தியாவில் மீண்டும் ஒரு பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் போரட்டக்களத்தில் ஒன்று சேர்ந்தனர். அமைப்புகள் அமைப்புசாராதவர்கள் என அனைவரும் போரட்டகளத்தில் இறங்கினர். மேலும் பொதுமக்களும் போரட்டத்தில் இறங்கினார்கள்.

இப்படி இந்தி மொழியை எதிர்த்து போராடியவர்களில் பெரும்பாலானோரை சிறையில் அடைத்தனர். இந்த மொழிப்போரில் தீ குளித்தவர்கள், துப்பாக்கி குண்டை நெஞ்சில் ஏந்தியவர்கள், விசம் குடித்தவர்கள் என 400 – க்கும் மேற்பட்டோர் தன் உயிரை விட்டனர், 2000 – க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதில் குறிப்பாக திருச்சி அருகே உள்ள கீழப்பழுவூரை சேர்ந்த சின்னசாமி ”மொழிக்காக நான் சாகிறேன், என்னை வாழ்த்தி வழி அனுப்புங்கள், மொழிக்காக நான் செய்த இந்த தியாகம் வெல்லும்” என்று கடிதம் எழுதி தீ குளித்து தன் உயிரை நீத்தார்.

இந்தி எதிர்ப்பு போரட்டத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்தவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்தான். அதில் குறிப்பாக மதுரை ஏ.வி.சி. கல்லூரி என்று அழைக்கப்படும் அன்னதானபுரம் வகையறா கல்லூரியில் கல்லூரியில் பி.காம் படித்துவந்த சாரங்கபாணி என்ற மாணவர் இந்த போரட்டத்தில் ஆரம்பத்திலேயே மிக தீவிரமாக களம் இறங்கியவர். மதுரையில் மிக அமைதியாக நடந்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் உள்ளே புகுந்த காங்கிரஸ் தொண்டர்கள் மாணவர்களை தாக்கினார்கள். இதை பார்த்த சாரங்கபாணி தீ குளித்து தன் உயிரை நீத்தார்.

இந்த மொழிப் போரில் உயிரைவிட்ட மிக முக்கியமானவர்  விருகம்பாக்கம் அரங்கநாதன். இவர் அடிப்படையில் ஒரு பி.எஸ்.என்.எல் ஊழியர்.  இவர் தமிழ் கலைகளை மாணவர்களுக்கு கற்றுகொடுத்துவந்தார். தன் மொழிக்காக தீக்குளித்து தன் உயிரை நீத்தார்.

மாணவர் ”ராஜேந்திரன்” இந்த மொழிப்போரில் மிக முக்கியமான தியாகி. அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து மாணவர்கள் இப்போரட்டத்தில் தீவிரமாக களமிறங்கிய போது அங்கு உள்ளே நுழைந்த போலிசு துப்பாக்கிச்சூடு நடத்தப் போவதாக அறிவித்தது. போலிசு இதை அறிவித்ததும் தன் சட்டையை கழட்டி மார்பைக் காட்டி துப்பாக்கி குண்டை தன் மார்பில் ஏந்தி உயிரை விட்ட தியாகி ராஜேந்திரன். இன்னும் ராஜேந்திரன் என்கின்ற அந்த மொழிப்போர் தியாகியின் சிலை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருக்கிறது.


படிக்க: இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 1| வீடியோ


இப்படி தமிழ் மொழிக்காவும், தமிழ் கலாச்சாரத்திற்காகவும் தங்கள் உயிரை விட்ட வீரர்களையும் தியாகிகளையும்தான் நாம் தல, தளபதியாக கொண்டாட வேண்டும். ஆனால் இவர்களை கொண்டாட மறந்த இளைய சமூகம், தன் நலனுக்காகவும், பிரபலத்துகாகவும் நடித்துக்கொண்டிருக்கும்  நடிகர்களைக் இன்று கொண்டாடி வருகிறது. இதுவா நம் வீரம். இதையா நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் 58-வது ஆண்டில் மீண்டும் இந்தியை கட்டாய மொழியாக திணிக்கும் வேலையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் இறங்கியுள்ளது. இதை எதிர்த்து மீண்டும் ஒரு மொழிப்போரைத் தொடங்கவேண்டிய கடமை பள்ளி – கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களாகிய நம் முன்னே நிற்கிறது.

இன்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க