வடகிழக்கு: பழங்குடியினரிடையே திட்டமிட்டு மத முனைவாக்கத்தை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்!

கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்ற சங்க பரிவாரங்களின் கோரிக்கையானது  புதிதல்ல. கிறிஸ்துவ பழங்குடியினர் பிற பழங்குடியினர் என்ற வடிவத்தில் பிளவை ஏற்படுத்தி பிற பழங்குடியின மக்களை தனக்கான அடித்தளமாக மாற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

0

நாகலாந்து மற்றும் மேகாலயாவில்  கிறித்துவர்களாக மதம் மாறிய   பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான ஜனஜாதி தர்ம-சம்ஸ்கிருதி சுரக்ஷா மஞ்ச் (JDSSM) கூறியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்தில் பெரும்பான்மையாக பழங்குடியின மக்கள்  வசித்து வருகின்றனர். மேகாலயாவில்  32 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அதில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிறிஸ்தவர்கள். அவர்களில் 8.50 லட்சம் பேர் கத்தோலிக்கர்கள்.  நாகாலாந்தில்  20 லட்சம் மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிறிஸ்தவத்தை  பின்பற்றுகின்றனர். இரு மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான  ஜனஜாதி தர்ம சமஸ்கிருதி சுரசஷா மஞ்ச்  கிறித்துவராக மதம் மாறிய பட்டியல் பழங்குடியினருக்கு சலுகைகள் தரக்கூடாது என்றும் அவர்களை அப்பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மேலும், பிப்ரவரி 12-அன்று ஒரு லட்சம் பேரை திரட்டி  “சல்லோ டிஸ்பூர்” (Challo Dispur) என்ற பெயரில் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாகவும் அறிவித்திருந்தது. இந்திய அரசியலைப்பு சட்டத்தின் 342 பிரிவு பட்டியலின மக்கள் பிரிவிலிருந்து பட்டியல் பழங்குடிகளை சேர்க்கவோ அல்லது நீக்கவோ வழிவகை செய்கிறது. எனவே கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை  ஜனாதிபதி முர்முவுக்கும், மோடிக்கும் அனுப்பி வைக்க இவ்வமைப்பு திட்டமிட்டுள்ளது.


படிக்க: சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!


இதுகுறித்து ஜே.டி.எஸ்.எஸ்.எம்-இன் உறுப்பினரான பினுத் கும்பங்  பேசுகையில், “கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற அந்நிய மதங்களை ஏற்றுக்கொண்டவர்கள் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். அவர்கள் சிறுபான்மையினராக பலன்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆனால் பட்டியலினத்தவருக்கான உதவித்தொகை, வேலைகள், பதவி உயர்வு போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று கூறினார்.மேலும், “அதுமட்டுமின்றி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க கடுமையாகப் போராடும் பட்டியல் பழங்குடிகளின் உரிமைகளை அவர்கள் பறிக்கின்றனர்” என்றவாறெல்லாம் கிறிஸ்துவ பழங்குடியினர் மீது மதவெறி வெறுப்பை கக்கினார்.

அதே போல், ஜே.டி.எஸ்.எஸ்.எம்  அமைப்பின் தலைவரான பாகிராம் போரோ கூறுகையில், “எங்களுடைய அமைப்பின் நோக்கம் இந்தியாவில்  இருக்கின்ற பழங்குடியின மக்களின்   கலாச்சாரத்தையும்,   பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் அவர்கள் பேசும் மொழியையும் பாதுகாக்க வேண்டியதாகிறது. பழங்குடியின மக்கள் அந்நிய மதங்களை நோக்கி நகரமால் தடுப்பதற்கும், மதம் மாறுவதை எதிர்த்து ஒவ்வொரு மாவட்டங்களிலும்  கிருத்துவர்களுக்கு எதிராக  பிரச்சாரம் செய்ய வேண்டும். இதன் மூலம்  பட்டியல் பழங்குடியின மக்களிடம் கிறித்துவ வெறுப்பை பேசுவதன் மூலம் நம்முடைய அமைப்பிற்கு  ஆதரவை நிலைநாட்ட முடியும்” என்று நேரடியாக பேசினார். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சத்தீஸ்கரில் கிறித்துவ பழங்குடியினரின் மதமாற்றத்திற்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்தியதும் இதே ஜே.டி.எஸ்.எஸ்.எம் அமைப்பு தான்.

கிறித்துவர்களாக மதம் மாறிய பழங்குடியினரை பட்டியல்  பழங்குடியின  பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்ற சங்க பரிவாரங்களின் கோரிக்கையானது  புதிதல்ல. பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் இந்தவகை பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு பா.ஜ.க-வின் பெமா காண்டு முதல்வராக உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பட்டியல் பழங்குடியினர் பிரிவிலிருந்து அபோர் பழங்குடியினரை நீக்கிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


படிக்க: ம.பி : பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியினர் !


சிறுபான்மையினருக்கு எதிராக கலவரத்தை அரங்கேற்றுவதன் மூலம்  மக்களை பிளவு படுத்தி தனக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ். அது நாட்டில் இஸ்லாமியர்கள்-இந்துக்கள் என்ற வடிவத்தில் செய்யப்படுகிறது. அதையே காட்டி கிறிஸ்துவ பழங்குடியினர் பிற பழங்குடியினர் என்ற வடிவத்தில் பிளவை ஏற்படுத்தி பிற பழங்குடியின மக்களை தனக்கான அடித்தளமாக மாற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். இதனை பல்வேறு கிளை அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நிறைவேற்றி வருகிறது. எனவே, பழங்குடி மக்கள் மத்தியில் இவர்களை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

ரோகித் வெமுலா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க