தேதி : 18.02.2023
அனுப்புதல் :
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
பெறுதல் :
காவல் ஆணையர்,
காவல் ஆணையரகம்,
சென்னை.
பொருள்: வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து இன வெறியைத் தூண்டி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க கோருதல்.
ஐயா, வணக்கம்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகிய இருவரும் நாம் தமிழர் கட்சி நடத்தும் பொதுக்கூட்ட மேடைகளில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டும் கருத்துக்களை பேசி வருகின்றனர்.
இது ஒரே இடத்தில் வேலை செய்யும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் மோதல் போக்கை உருவாக்கும் செயலாகும். சமீபத்தில் திருப்பூர், ஓசூர் போன்ற இடங்களில் உண்மையாக நடந்த சம்பவம் என்ன என்பதை அறிவதற்கு முன்பே வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான விஷமக் கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன.
சாட்டை துரைமுருகன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது “வடக்கன் வரும்போது 25 கிலோ கஞ்சாவோடு வருகிறான். பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் கஞ்சா விற்கின்றான்” என்றும், “நமது பெண்களை கையைப் பிடித்து இழுப்பான், நமது குழந்தைகளை கடத்திச் சென்று விடுவான்” என்றும் வட மாநில தொழிலாளர்களை பார்த்தாலே கோபம் வரும் அளவிற்கு இனவெறி கருத்துக்களை பேசியுள்ளார்.
புகார் அளித்த பின் பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் அதிகாரம் தோழர்கள்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 15.02.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “கஞ்சா வச்சிருக்கான், அபின் வச்சிருக்கான், பெண்களை கைய பிடித்து இழுத்தான், கற்பழித்தான் என்று உள்ளே தூக்கிப்போட்டு சாப்பாடு இல்லாமல் அடி வெளுத்துவிடுவேன். அவனே பெட்டியை தூக்கி கிட்டு ஓடிடுவான்” என்று விஷமத்தனமான இன வெறியூட்டும் கருத்தை பேசியுள்ளார்.
வடமாநில மற்றும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி ரத்தம் குடித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே சீமானும் சாட்டை துரைமுருகனும் இதை செய்து வருகின்றனர்.
இதனால் சமூகத்தில் அசாதாரண சூழல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே இன வெறியை தூண்டி மோதலை ஏற்படுத்தத் துடிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.