கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதியன்று துருக்கி – சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 46,000-ஐ நெருங்கியுள்ளது. துருக்கியின் தெற்குப் பகுதியிலும், சிரியாவின் வடக்குப் பகுதியிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின. தற்போது வரை துருக்கியில் 39,672 பேரும் சிரியாவில் 5,800 பேரும் பலியாகியுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி இன்னும் முடிவுறாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
நிலநடுக்கத்தால் துருக்கியில் 10 மாகாணங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,000 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன அல்லது இடிந்து தரைமட்டமாகிவிட்டன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து கூடாரங்களில் வசித்து வருகின்றனர்.
துருக்கி அமைந்திருக்கும் புவியில் பரப்பு யுரேசிய மற்றும் அரேபிய தட்டுக்களின் (Eurasian and Arabian Plates) எல்லையில் உள்ளது. இவை தவிர, அனடோலிய தட்டும் உள்ளது (Anatolian plate). இத்தட்டுகள் மோதிக் கொள்வதானது வழக்கமான புவியியல் செயல்பாடு. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அரேபிய மற்றும் அனடோலிய தட்டுக்களின் மோதலால் ஏற்பட்டதாகும். இது நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான இயற்கைக் காரணம்.
ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கி மரணித்ததற்கு இயற்கை மட்டுமே காரணம் அல்ல. துருக்கியில் எந்நேரம் வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அறிவியல் உண்மை துருக்கி அரசுக்கு ஒன்றும் தெரியாததல்ல. கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 33,000 நிலநடுக்கங்கள் துருக்கியில் பதிவாகியுள்ளன. அதில் 332 நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.0 மற்றும் அதற்கு மேலான அளவில் பதிவாகியுள்ளன.
படிக்க: பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளவே துருக்கியின் ஸ்வீடன் எதிர்ப்பு!
துருக்கியின் பூகோள அமைப்பையும் முந்தைய பேரழிவுகளையும் கருத்தில் கொண்டே துருக்கியின் கட்டுமான விதிகள் உருவாக்கப்பட்டன. அவற்றின் படி, கட்டிடங்களைக் கட்டும்போது நிலநடுக்கத்தை எதிா்கொள்வதற்கான பொறியியல் தர அளவுகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், இந்த பாதுகாப்பு விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. இதன் விளைவாகவே ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் கட்டுமானத் தொழில் என்பது பெரும் இலாபம் கொழிக்கும் ஒன்றாக உள்ளது. வெறும் 8.5 கோடி மக்கள் தொகை கொண்ட துருக்கியில், 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களின் எண்ணிக்கை 3,30,000 ஆகும். 8.3 கோடி மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்த நாடான ஜெர்மனியில் வெறும் 3,800 ஒப்பந்ததாரர்கள் மட்டுமே உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற துருக்கி அதிபர் எர்துவான் “எல்லாம் விதி” என்று கூறியதன் மூலம் அரசுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே உள்ள கள்ளக் கூட்டை மறைக்க முற்படுகிறார். கட்டுமானம் தொடர்பான சட்ட விதிகள் ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்றவாறு பலமுறை மாற்றப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்களும் தாங்கள் ஈட்டும் இலாபத்தை அரசியல் கட்சிகளில் முதலீடு செய்கின்றனர்.
1999-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 17 அன்று துருக்கியின் மர்மாரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 18,000-ம் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 2001-ஆம் ஆண்டில் நிலநடுக்கத்தை தாங்கும் கட்டிடங்களை கட்டவும் ஆய்வு செய்யவும் புதிய சட்டம் இயற்றப்பட்டது. நவீன தொழில்நுட்ப மற்றும் அறிவியல் தர நிலைகளுக்கு ஏற்ப இச்சட்டத்தின் ஒழுங்குமுறைகள் 2018-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டன.
படிக்க: இந்தோனேசியாவை உலுக்கிய பேரழிவு சுனாமியும், நிலநடுக்கமும் | படக்கட்டுரை
2001-ஆம் ஆண்டின் புதிய சட்டத்திற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் பாதுகாப்பானவையாக கருதப்பட்டன. ஏனென்றால், புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் நிபுணத்துவம் வாய்ந்த தணிக்கை நிறுவனங்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், கட்டுமான நிறுவனங்கள் தணிக்கை நிறுவனங்களை தாமே தேர்வு செய்து கொண்டன. தங்களின் இலாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக தணிக்கை நிறுவனங்களை தாமே தோற்றுவிக்கவும் செய்தன.

இது ஒரு புறமிருக்க, சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிடங்களை கட்டுவதும் அதிகரித்தது. இந்த சிக்கலை சரி செய்ய எர்துவான் அரசு, 2018-ஆம் ஆண்டில் “கட்டுமான பொது மன்னிப்பு” (construction amnesty) என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது. அதாவது, 2017, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் சட்ட உரிமம் பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்தினால் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது. இதன் மூலம் ஒரு கோடி மக்கள் பயனடைந்ததாகவும், அரசுக்கு 1600 கோடி துருக்கிய லிரா வருமானம் கிடைத்ததாகவும் எர்துவான் அரசு மார்தட்டிக் கொண்டது.
துருக்கி புள்ளியல் நிறுவனத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களைச் சேர்ந்த குடிமக்களில் 51 சதவிகிதத்தினர் 2001-ஆம் ஆண்டு புதிய சட்டத்திற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்களில் தான் வசித்து வந்தனர். இப்பகுதிகளில் மொத்தம் 2,94,165 கட்டிடங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றவை தான். தற்போது தரைமட்டமாகி இருக்கும் கட்டிடங்கள் சட்ட உரிமம் கொடுத்த அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
இடிந்து விழுந்த கட்டங்களுக்குப் பொறுப்பானவா்கள் என சந்தேகிக்கப்படும் 131 பேரை கைதுசெய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் துணை அதிபா் ஃபுவாட் ஓக்டே (Fuat Okta) கூறியுள்ளார். இதில் 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாகும்.
1999-ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட போது, சில ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அவர்களும் கூட தண்டனை காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டனர். தற்போது எர்துவான் அரசு மேற்கொண்டிருக்கும் கைதுகளையும் இவ்வாறே நாம் காண வேண்டியுள்ளது. துருக்கியில் நிகழ்ந்த இம்மரணங்கள் என்பன லாபவெறி பிடித்த ஒப்பந்ததாரர்களும் ஊழல் மயமான துருக்கி அரசும் இணைந்து நடத்திய சமூகப் படுகொலை ஆகும்.
பொம்மி