24.03.2023
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிப்பு: விபத்து அல்ல, படுகொலை!
பத்திரிகை செய்தி
காஞ்சிபுரம் நகருக்கு அருகே வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 22.03.2023 அன்று காலை 11:30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலே 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
பலத்த தீக்காயத்துடன் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியை பொருத்தவரை விவசாயம், நெசவு ஆகிய தொழில்கள்தான் மக்களுடைய வாழ்வாதாரமாக இருந்து வந்தது.
நாட்டையே, சூறையாடும் உலகமயமாக்கல் மேற்படி கிராமங்களை விட்டுவைக்குமா..? விவசாயிகளுக்கு இடுபொருட்களின் விலையேற்றம் மற்றும் நெசவாளர்களுக்கு மூலப் பொருட்களின் விலையேற்றம் ஆகிய காரணங்களால், பாரம்பரிய தொழில்கள் பாதிப்படைந்து, அந்த பகுதி மக்கள் தொழிலை விட்டு இப்படி கூலி அடிமைகளாக மாற்றப்பட்டு, தன்னுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள தினம் தினம் கிடைத்த வேலைகளை செய்வது என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் அடிப்படையிலே, மேற்படி வேலைக்கு செல்ல வேண்டியதாயிற்று.
இது விபத்து அல்ல, உண்மையில் படுகொலை.
வெடி விபத்து நடந்த பகுதியை சுற்றி நான்கு கிராமங்களில் இருந்து சுமார், 40-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு செல்கின்றனர். முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் விபத்தாக சித்தரித்தது கருத்துருவாக்கமும் செய்து விடுகின்றனர். இதனை ஒரு சிறு நிகழ்வாக சுருக்கி பார்க்க முடியாது.
சிவகாசி பகுதியில் இதுபோன்ற பட்டாசு ஆலைகளில் விபத்து என்ற பெயரில் நடந்த வண்ணம் உள்ளது. அரசு மாவட்ட நிர்வாகத்தை முடக்கிவிடும் எதற்கு…? மக்களை ஒரு பொது கருத்துக்கு வரவழைத்து (விபத்து என்பதை வெவ்வேறு கோணங்களில் சொல்லி ஏற்க வைப்பது.) இறந்தவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் சில இலட்சங்கள் முதலமைச்சர் நேரில் சென்று கொடுக்கும் வகையில் இந்த பிரச்சினை முடித்து வைக்கப்படும்.
உண்மையில் இந்த படுகொலைக்கு காரணமான முதலாளிகளை துறைசார்ந்த அதிகாரிகளை, விசாரிப்பது, தண்டிப்பது என்பதே அரசமைப்பின் அகாரதியிலே கிடையாது. ஏனெனில் அதுதான் விபத்தாயிற்றே.
அரசின் மெத்தனம் குறிப்பாக அதிகார வர்க்கத்தின் அலட்சியம் முதலாளியின் இலாபவெறி ஆகியவைதான் அடிப்படை என்பதை, போபால் யூனியன் கார்பைடு துவங்கி அன்றாடம் ஆலைகளில் தொழிலாளர்களின் உடல் உறுப்புகள் பலியாவது மற்றும் உயிரிழிப்பு வரை நீடிக்கிறது..
300 ரூபாய் கூலிக்கு தங்களுடைய உயிரை பறிகொடுத்துள்ள அந்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பதற்கு கூட முடியவில்லை. காரணம் அந்த பகுதியை சுற்றி போலீசுத்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு குறைந்த பட்ச எதிர்ப்பு, மாற்றுக் கருத்து, போராட்டம் வந்து விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
குறைந்தது பத்து நிமிடங்களாக வெடி வெடித்தது, அந்த சத்தத்தின் ஊடாக அலறல் சத்தம் கேட்டு பார்க்கத்தான் முடிந்தது கண்முன் தீயில் கருகியும், உறுப்புகளை இழந்த நிலையில் பரிதவித்த, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்க்கும்போது மனம் பதறியது.
இதுபோன்ற விபத்து என்ற பெயரில் நடக்கும் படுகொலைகளுக்கு, முடிவுகட்ட வேண்டுமானால், ஆலையின் முதலாளி மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் கண்காணிக்க தவறிய துறைசார்ந்த அதிகாரிகள் ஆகிய இரு தரப்பையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட கிராமங்களை சுற்றி வளைந்திருக்கும் போலீசார் உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்புக் குழு