“தீண்டாமை ஒரு பாவச்செயல்; பெருங்குற்றம்; மனிதத் தன்மையற்ற செயல்” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறது அரசு. ஆனால், சாதி ஆதிக்கம் தலைவிரித்தாடிவரும் சமூகத்தில், இச்சொற்களுக்கெல்லாம் நடைமுறையில் எந்த மதிப்பும் இல்லை என்பதை, மீண்டுமொரு முறை நமக்கு உணர்த்தி இருக்கிறது வேங்கைவயல் நிகழ்வு.
புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் – வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தேக்கத் தொட்டியில், ஆதிக்க சாதிவெறியர்கள் மனித மலத்தைக் கலந்த நிகழ்வானது, இதயமுள்ள ஒவ்வொரு மனிதரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதைவிட அதிர்ச்சிக்கு உரியது, இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்ட சாதிவெறி நாய்கள் இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதும், ஒட்டுமொத்த அரசமைப்பும் சேர்ந்து பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்க சதி செய்வதும்தான்.
அன்று திண்ணியம், இன்று வேங்கைவயல்!
இறையூர் கிராமத்தில், பட்டியலின மக்கள் (பறையர்), முத்தரையர், அகமுடையார், கள்ளர் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இக்கிராமத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் என்றழைக்கப்படும் பகுதியில், 32 குடும்பங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
கடந்த டிசம்பர் 24, 25-ஆம் தேதிகளில், வேங்கைவயலைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் அடுத்தடுத்து கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, ஒரே பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், ஒத்த தன்மை கொண்ட பாதிப்புகள் காரணமாக அனுமதிக்கப்படுவதால், குடிநீரில் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம்; பரிசோதித்துப் பாருங்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அதேநேரம் டிசம்பர் 26 அன்று குடிநீர் அதிக துர்நாற்றத்துடனும், கலங்கலாகவும் வருகிறது.
இதனால் சந்தேகமடைந்த மக்கள், காலை ஏழு மணிக்கு மூன்று இளைஞர்களை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அனுப்பிப் பரிசோதிக்கின்றனர். அப்போதுதான், தொட்டியில், திட்டு திட்டாகக் கரைந்தும், கரையாமலும் குவியலாக மலம் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியுறுகின்றனர். சில நிமிடங்களில் மக்கள் மத்தியில் குடிநீரில் மலம் கலந்த செய்தி தீயாகப் பரவுகிறது; இந்த தண்ணீரைத்தான் குடித்து வந்தோமா? சமையலுக்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தோமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் விவாதமாக மாறி, உளவியல் ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.
படிக்க: மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!
“சோத்துல கைய வச்சா பீ ஞாபகம்; தண்ணீ குடிச்சாலும் பீ ஞாபகம்; எங்க குடிநீர் தொட்டியில் பீயைக் கரைச்சு ஊத்துனதுக்கு பதிலா, பால்டாயில கரைச்சு ஊத்தியிருந்தால் கூட எல்லோரும் நிம்மதியாக போய் இருப்போம்”, “மலம் கலந்த தண்ணீய என் குழந்தைக்கு நானே கொடுத்திருக்கேன். என் கையால் நானே விஷம் கொடுத்தது போல கொடுத்திருக்கேன்” என்று வேங்கைவயல் மக்கள் கதருவதைப் பார்த்து, நம் ரத்தம் கொப்பளிக்கிறது.
2002-ஆம் ஆண்டு, திருச்சி மாவட்டம் திண்ணியம் கிராமத்தில், கருப்பையா என்ற தாழ்த்தப்பட்ட இளைஞரின் வாயில் மலத்தைத் திணித்தார்கள் கள்ளர் சாதிவெறியர்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது, குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்திருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள். சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் அடைந்திருக்கின்ற ‘முன்னேற்றம்’ இது.
சாதிவெறியன் முத்தையாவை குற்றஞ்சாட்டும் மக்கள்!
இறையூர் என்பது சிறிய கிராமம், குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தக் குற்றவாளி யார் என்று கண்டுபிடிப்பது ஒன்றும் குதிரைக் கொம்பு அல்ல. ஆனால், போலீசு இன்றுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை; மாறாக, குற்றவாளி யாரெனத் தெரிந்தே பாதுகாத்துவருகிறது.
போலீசு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், சமூக அக்கறைகொண்ட சுதந்திர பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் சிலர் தங்கள் கள ஆய்வுகள் மூலம், யார் இதைச் செய்திருக்கக் கூடும் என்பதை அடையாளப்படுத்தி உள்ளனர்; தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுள்ள சாதிய வன்மம் காரணமாக, முத்தரையர் சாதியைச் சேர்ந்த முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாதான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று கள ஆய்வில் வெளிக்கொண்டு வந்துள்ளார்கள்.
வேங்கைவயல் பகுதியில், தற்போது மலம் கலக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி என்பது காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காக, கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த தொட்டியாகும். இத்தொட்டியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, இறையூரில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்துதான் வேங்கைவயலுக்கு நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் வேங்கைவயல் பகுதி மேடான இடமாக இருப்பதாலும், இறையூரில் வசிக்கின்ற ஆதிக்கசாதியினர் மோட்டார் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாலும், தண்ணீர் சரிவர வராமல் இருந்துள்ளது.
இந்நிலையில், தங்களுக்கு முறையான தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அம்மக்கள் தொடர்ந்து ஊராட்சியிடம் முறையிட்டு வந்துள்ளனர். அதன்பிறகுதான், புதிதாக நிலத்தில் போர் போட்டு, தற்போதுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில், நீரேற்றம் செய்துள்ளனர். அந்த நீரும் உப்புத் தண்ணீராக இருப்பதால், தங்களுக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டுமென முத்தையாவிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஊராட்சி மன்றத் தேர்தலில் தன் மனைவியை தலைவர் பதவிக்கு (பெண்கள் ஒதுக்கீடு தொகுதி என்பதால்) நிறுத்திய முத்தையா, வேங்கைவயல் குடிநீர் பிரச்சினையை சரிசெய்துதருவதாக வாக்குறுதி கொடுத்தார்; ஆனால் பதவியேற்ற பிறகு, அம்மக்களது கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் சாதிய வன்மத்தோடு நடந்துவந்துள்ளார்.
படிக்க: குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – ஆதிக்கசாதி திமிர்! | மருது வீடியோ
ஆகஸ்டு 15, 2022 அன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் வசதி, சுடுகாட்டுக்குப் பாதை போன்ற பிரச்சினைகளை எழுப்பியபோது, முத்தையா (இவர்தான் நடைமுறைத் தலைவர்), “உங்களுக்கு எவ்வளவு செஞ்சாலும் ஆகாது டா, நீங்க எனக்கு ஓட்டு போடல, அதனால உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது” என்று சாதித்திமிரை வெளிப்படுத்தியோடு, சபையையும் கலைத்துவிட்டுள்ளார்.
இதற்கிடையில், நீர்தேக்கத் தொட்டிக்கு ஆப்பரேட்டராக இருந்த சண்முகம் என்பவர், முத்தரையர் சாதியாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, முத்தையாவிடம் பேசிவந்துள்ளார். எனவே, சண்முகத்தை ஆப்பரேட் வேலையைவிட்டு நீக்கிவிட்டு, காசி என்பவரை நியமித்துள்ளார் முத்தையா. சண்முகம் சி.ஐ.டி.யூ (CITU) அமைப்பில் இருந்ததால், தற்காலிகப் பணியாளராக இருந்த அவருக்கு ஆதரவாக, சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம் அறிவிக்கிறது. சண்முகத்தின் வேலையை மீட்டெடுப்பதற்கு வேங்கைவயல் மக்களும் ஆதரவாக நின்றுள்ளனர்.
ஆகவே, சண்முகத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒருசேர பழிவாங்குவதற்காக முத்தையாவே ஆட்களை வைத்து மலத்தைக் கலந்துவிட்டு, வேலை பறிபோனதால் சண்முகம்தான் செய்துள்ளார் என கதைகட்ட நினைத்திருக்கலாம் என்று வேங்கைவயல் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்; மேலும் முத்தையாவால் புதிதாக நியமிக்கப்பட்ட காசி என்பவருக்கும் சண்முகத்திற்கும் ஏற்கெனவே தனிப்பட்ட முரண்பாடு நிலவியதால், இதை எளிதாக நம்பவைத்துவிட முயன்றதாகவும் அம்மக்கள் கூறுகின்றனர்.
இரட்டை நீர்த்தேக்கத் தொட்டி: தீண்டாமையின் நவீன வடிவம்!
வேங்கைவயல் பிரச்சினை செய்தியான மறுநாள் (27-12-22), புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரான கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் கள ஆய்வுக்காகச் செல்கின்றனர். அப்போது பகுதி மக்களிடம் விசாரணை நடத்தும்போது, வெள்ளனூர் தேநீர் கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனிக்குவளை முறை கடைப்பிடிக்கப்படுதாகவும், அங்குள்ள அய்யனார் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரியவருகிறது. பின்னர், குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து மைய ஊடகங்கள் அனைத்திலும் பிரபலமாகப் பேசப்பட்டதால், அவை அனைவருக்கும் தெரியும்.
இரட்டைக் குவளை முறையைக் கடைப்பிடித்த தேநீர் கடை உரிமையாளர் மூக்கையா (57), தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, சாமி வந்தது போல் நடித்து, தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்கு விடக்கூடாது என்று ஆபாசமாக பேசிய பூசாரி மனைவி சிங்கம்மாள் (35) ஆகியோர் ஆட்சியர் கவிதா ராமுவால் கைது செய்யப்படுகின்றனர். “சாதித் தீண்டாமை கடைபிடித்தவர்கள் தண்டிக்கப் பட்டார்கள்”, “சமூகநீதி நிலைநாட்டப் பட்டது” என்று ஊடகச் செய்திகள் இந்நிகழ்வை ஊதிப் பெருக்கினாலும், 21-ஆம் நூற்றாண்டிலும் இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட சாதித் தீண்டாமை நிலவுகிறது என்ற உண்மை, நம்மை வெட்கித் தலைகுனியத்தான் வைக்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட எம்.எல்.ஏ.வாக உள்ள சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை அவர்கள், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அடுத்து, புதுக்கோட்டை பகுதியே தீண்டாமைக் கொடுமை தீவிரமாகத் தாண்டவமாடியப் பகுதி என்கிறார். நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த பிரச்சினையின் மூலம், இப்பகுதியின் இதர சாதியக் கொடூரங்களும் வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. மலம் கலந்த பிரச்சினையிலும் கூட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி நீர்த்தேக்கத் தொட்டி பராமரித்ததே நவீனத் தீண்டாமையின் வடிவம் என அம்பலமாகியுள்ளது.
படிக்க: சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!
ஏற்கெனவே உள்ள தொட்டியில் மலம் கலக்கப்பட்டதால், தற்காலிக ஏற்பாடாக வேங்கைவயலின் 32 குடும்பங்களுக்கும் இறையூர் நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்தே குடிநீர் இணைப்பு செய்துதரப்பட்டுள்ளது. ஆனால், இது தற்காலிகமாகத்தான். அம்மக்களுக்காக, ஏழு லட்ச ரூபாய் செலவில், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. பொதுத் தொட்டியிலிருந்தே நீரைப் பகிர்ந்துவிட வாய்ப்பிருந்தும், மீண்டும் தனித் தொட்டி கட்டுகிறது சமூகநீதி அரசு. “இரட்டைக் குவளை போல் இரட்டை தண்ணீர் தொட்டியும் தீண்டாமைதான்” என இம்முயற்சியை விமர்சித்துள்ளார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்.
தனித் தொட்டி இருந்ததால்தானே தலித் மக்களைப் பழிவாங்க சாதிவெறியர்கள், மலத்தைக் கொட்ட முடிந்தது, தற்போது மீண்டும் தனித்தொட்டி. வேங்கைவயல் மட்டுமன்றி, தமிழ்நாடு முழுவதும் இதுபோல, 4,200 தனித் தொட்டிகள் இருப்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. சமத்துவபுரங்களைத் தீண்டாமை ஒழிப்பின் பெருமுயற்சியாகப் பீற்றிக் கொள்ளும் தி.மு.க. அரசு, நவீன தீண்டாமையான தனித்தொட்டியை ஆதரிக்கிறது.
சாதி ஆதிக்கம்: ஆர்.எஸ்.எஸ்-உம் அரசு நிறுவனங்களும் ஒன்று!
வேங்கைவயல் பிரச்சினையை விசாரிப்பதற்காக, பா.ஜ.க. சார்பில் உண்மைக் கண்டறியும் குழு அமைத்ததாகச் சொல்லப்பட்டது. அக்குழுவில் அங்கம் வகித்த, பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், அக்கட்சியின் எஸ்.சி அணித் தலைவர் தடா பெரியசாமி ஆகியோர், “வேங்கைவயல் சம்பவம் பூதாகரமாவதற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்தான் காரணம்; அங்கு தீண்டாமைக் கொடுமை நிலவவே இல்லை; அப்பகுதி அய்யனார் கோயிலில் சென்று வழிபடுவதைக் காலப்போக்கில் தாழ்த்தப்பட்ட மக்களே நிறுத்திக் கொண்டார்கள்” என்று அருவருப்பூட்டும் வகையில் பேசினர்.
குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று தனிப்படை நாடகமாடிக் கொண்டிருக்கும்போதே, ஜனவரி 12 அன்று, பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான சி.டி.நிர்மல் குமார், “தவறு செய்தவர்களின் காணொளி” என்று ஒரு காணொளியை டிவிட்டரில் பதிவிடுகிறார்; அது சமூக வலைதளங்களிலும் பரவுகிறது. அக்காணொளி, டிசம்பர் 26-ஆம் தேதி, நீர்த்தேக்கத் தொட்டியைச் சோதனையிடுவதற்காகச் சென்ற தலித் இளைஞர்கள் பதிவுசெய்த காணொளியாகும். தங்களுக்கு இடையிலான வாட்சப் குழுவில் அதைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். தொட்டியில் இறங்கி கொட்டிக் கிடந்த மலத்தைப் பையில் அள்ளி வைத்திருக்கும் காட்சியோடு, அந்த காணொளியைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.
தனது சங்கப்பரிவார வலைப்பின்னல் மூலம் இக்காணொளியை எப்படியோ கிடைக்கப் பெற்ற நிர்மல்குமார், தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கி, ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்காக அதைப் பயன்படுத்தியுள்ளார். முத்தரையர் சாதிச் சங்கமானது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நெருக்கமானதாகும். ஆகவே, முத்தரையர் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. இருக்கிறது என்று சமிக்ஞை (Signal) செய்யவே அந்தக் காணொளி. லாவண்யா தற்கொலை, ஸ்ரீமதி மர்ம மரணம் ஆகிய விவகாரங்களில் ஒட்டி வெட்டப்பட்ட காணொளியைப் பரப்பியதும் இதே நிர்மல் குமார்தான்.
000
போலிச் செய்தியைப் பரப்பி, விசாரணையைச் சீர்குலைக்கும்விதமாக நடந்துகொண்ட நிர்மல் குமாரின் மீது, ‘திராவிட மாடல்’ அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தி.மு.க. அரசைப் பற்றி போலிச் செய்தியைப் பரப்பினார் என்று இதே நிர்மல் குமார் மீது பலமுறை வழக்கு போட்டுள்ளது.
சமூகநீதிதான் தங்கள் உயிர்மூச்சு என்று சித்தரிக்கும் தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டு முதல்வருமான மு.க.ஸ்டாலின், வேங்கைவயல் பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கே தயங்கினார். குற்றவாளிகளைத் தண்டிக்க வலியுறுத்தி பல்வேறு புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களும் பல போராட்டங்களை நடத்திய பிறகே, சட்டமன்றத்தில் ஒப்புக்கென்று பேசினார். 32 குடும்பங்களே உள்ள வேங்கைவயலுக்காகப் பேசினால், புதுக்கோட்டையில் பெருவாரியான ஓட்டுவங்கிகளை உடைய ஆதிக்க சாதிகளின் மனம் ‘புண்பட்டுவிடும்’ என்பதே, மு.க.ஸ்டாலினின் பாராமுகத்துக்கு காரணம்.
000
குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை, அப்பட்டமான சாதிவெறியோடு, தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லி பல்வேறு வடிவங்களில் மிரட்டியுள்ளது.
இவ்வழக்கில், பெயரளவிற்கு ஆதிக்க சாதி தரப்பிலிருந்து ஒன்றிரண்டு பேரை விசாரித்துவிட்டு, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் எட்டுபேரை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியுள்ளது போலீசு; காலையில் 9 மணிக்கு வரச்சொல்லிவிட்டு, இரவு ஒன்பது மணிக்கு விசாரணையைத் தொடங்குவது; நள்ளிரவு 12 மணி வரை, சிலநேரங்களில் 3 மணி வரை கூட விசாரணை நடத்திவிட்டு அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
“அரசு வேலை வாங்கித் தருகிறோம், வீடு வாங்கித் தருகிறோம், குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள்” என்று தலித் இளைஞர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நைச்சியமாக பேரம்பேசிய போலீசு, “இல்லையென்றால், மனநலம் பாதிக்கப்பட்ட யாரையாவது வைத்துதான் வழக்கை முடிப்போம்” என்று கூறியுள்ளனர்.
விசாரணையில், மலம் எப்படியிருந்தது என்று வரைந்துகாட்டச் சொல்லி சித்திரவதை செய்துள்ளனர். “நீங்களே மலத்தைக் கொட்டிவிட்டு, அடுத்தவர்கள் மீது பழிபோடுகிறீர்களா” என்று கேட்டு, ஆபாசமாகப் பேசியுள்ளனர்.
விசாரணைக்கு வந்த முத்துகிருஷ்ணன் என்ற தலித் இளைஞரது, வங்கி வரவு செலவை எடுத்துவைத்துக் கொண்டு, “ஏன் உனக்கு இவ்வளவு பணம் வந்துள்ளது; மலம் கலக்கத் தூண்டியவர்கள்தான் உனக்கு பணம் அனுப்பியுள்ளார்களா” என போலீசார் கேட்டுள்ளனர். ஆனால், அவர் தனியார் கடன் வசூலிக்கும் நிறுவனத்தில் வேலைசெய்வதால், அவரது வங்கிக் கணக்கிற்கு கடன் வாங்கிய பலர் பணம் செலுத்தியுள்ளனர்; அதன் ஒட்டுமொத்த விவரங்களையும் காட்டிய பிறகே, அந்தக் கோணத்தில் விசாரிப்பதை நிறுத்தியது போலீசு. ஒருவேளை சரிவர ஆவணத்தைப் பராமரிக்காமல் வைத்திருந்தால், அதை வைத்தே அவரை குற்றஞ்சாட்டலாம் என்பதுதான் போலீசின் சதித்திட்டம்.
பெண் போலீசார்களிடம் திருநீறு கொடுத்து அனுப்பி, “உங்கள் குலசாமி கொடுத்தது, உங்கள் தெருவில்தான் குற்றவாளிகள் இருப்பதாக சாமி சொல்கிறது; திருநீறை எடுத்துக் கொண்டு உண்மையைச் சொல்லிவிடுங்கள்” என தலித் பெண்களை மிரட்டியுள்ளார்கள்.
மலம் கலந்த நீரையும் குடித்துவிட்டு, அதையும் தாங்களே கரைத்துக் கொண்டோம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென மிரட்டப்படுவது, சொற்களால் வருணிக்க முடியாத சித்திரவதையாகும்.
000
இரட்டைக் குவளை, தாழ்த்தப்பட்ட மக்களை ஆபாசமாகப் பேசியது ஆகிய வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளான மூக்கையா, சிங்கம்மாள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டதை மாபெரும் சமூகநீதிப் புரட்சியாகவும், ஆட்சியர் கவிதா ராமுவை நாயகியாகவும் தண்டோரா போட்ட மைய ஊடகங்கள் அனைத்தும், இந்த ஜாமீன் குறித்து நவ துவாரங்களிலும் அமைதி காக்கின்றனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதைப் பற்றி முடிவுசெய்வதற்காக, இரண்டு வழக்கறிஞர்களைக் கொண்ட குழு அமைத்து, அக்குழு சம்மந்தப்பட்ட பகுதியை ஆய்வுசெய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என்று முடிவெடுக்கிறார் சிறப்பு நீதிபதி; வன்கொடுமைச் சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு எந்த நீதிமன்றமும், இதுபோன்ற கேலிக்கூத்தான முறைகளைக் கையாண்டதில்லை.
எதற்கு இந்த ஆய்வு? அப்பகுதியில் தீண்டாமைக் கொடுமை இருக்கிறதா, இல்லையா என்று கண்டுபிடிக்கவாம். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரே களத்தில் நேரடியாக விசாரணை செய்து, அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு மீது, “உண்மை கண்டறிய ஆய்வு” என்பது எத்தகைய அயோக்கியத்தனம்.
படிக்க: கோவை: அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதிகார வெறியும் சாதிய வன்மமும்!
நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில், மேற்கண்ட குற்றவாளிகள் மீது, தீண்டாமையைக் கடைப்பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த வட்டாட்சியரே, அப்பகுதியில் தீண்டாமைக் கொடுமை நிலவவில்லை என்று சாட்சியளிக்கிறார்; இதையே அக்குழுவின் முடிவும் தெரிவிக்கிறது. அதனடிப்படையில், 15 நாட்களில் குற்றவாளிகளுக்கு ஜாமீன். சாதிவெறியர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்காகவே, நீதிமன்றமும் அதிகார வர்க்கமும் சேர்ந்து நிகழ்த்திய சதி இது.
பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கி, ஆதிக்க சாதிவெறியர்களைப் பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வும், போலீசு – அதிகார வர்க்கம் – நீதிமன்றம் என அரசின் அனைத்து நிறுவனங்களும் ஒரே புள்ளியில் இணைகின்றன என்பதைத்தான் மேற்சொன்ன சம்பவங்கள் தெளிவாக விளக்குகிறது!
சாதி-தீண்டாமை ஒழிப்பை சமூக இயக்கமாக்குவோம்!
சட்டப்படி தீண்டாமை என்பது குற்றம், சாதிவெறி தண்டனைக்கு உரியது – ஆனால், திண்ணியம் முதல் வேங்கைவயல் வரை சாதி-தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது; என்ன காரணம்? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்கள் நடத்தும் சாதிவெறியாட்டங்களை இந்த அரசமைப்பே பாதுகாப்பதுதான். அவ்வளவு சுலபமாக எந்த வழக்கிலும் சாதிவெறியர்கள் தண்டிக்கப்பட்டதில்லை. அரிதாக கைதுசெய்யப்பட்டாலும், வெகுசீக்கிரத்தில் ஜாமீனில் வெளியே வந்துவிடலாம். போலீசு, அதிகார வர்க்கம், நீதிமன்றம் என அனைத்துமே பார்ப்பனிய-சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும், பாதுகாக்கும் கருவிகளாக இருக்கின்றன.
எனினும், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் அரசியல் சக்திகளும் செயல்பாட்டாளர்களும், இந்த அரசமைப்பின் சட்டங்களில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரணாக புதுப்புது சட்டங்களை இயற்றவும், சாதிவெறியர்களைக் கடுமையாக தண்டிக்கும் பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்கள்.
வேங்கைவயல் கொடூரத்தைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், “சாதி மற்றும் மதத்தின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளை முன்னெச்சரிக்கையாக தடுப்பதற்கு ஏதுவாக தனி உளவுப்பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார். ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களும் அமைப்புகளுமே சாதிவெறியர்களைத் தண்டிக்காதபோது, புதியவைகள் மட்டும் விதிவிலக்கா என்ன?
களத்திற்குச் சென்று வேங்கைவயல் கொடூரங்களை அம்பலப்படுத்திய, அம்மக்களுக்கு பல்வேறு சட்ட உதவிகளைச் செய்துவரும் எவிடன்ஸ் அமைப்பின் வின்சென்ட் ராஜ் (எவிடன்ஸ் கதிர்), “வேங்கைவயல் கிராமம் இருக்கும் முட்டுக்காடு பஞ்சாயத்தினை பட்டியல் சாதி பெண்கள் மட்டுமே போட்டியிட கூடிய ரிசர்வ் பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும்” என்கிறார். பஞ்சாயத்து தலைவராகியும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாமல், சாதிவெறியர்களால் முடக்கிவைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வழக்குகளை நாம் எத்தனை முறை சந்தித்திருக்கிறோம்!
வேங்கைவயல் பிரச்சினையில்கூட, தாழ்த்தப்பட்ட மக்களைக் குற்றவாளிகளாக்கும் தனிப்படை போலீசார்களின் அக்கிரமங்கள் அம்பலமாகி, அதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற பிறகுதான், வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி இருக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டி ஆவது குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடுமா என்றால், இதுவரை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குச் சென்ற வழக்குகள் எல்லாம் காணாமல் ஆக்கப்பட்டதுதான் நடைமுறை உண்மை.
மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தையும், தொடர்ச்சியான களப் போராட்டங்களையும் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே சாதிவெறியர்களைத் தண்டிக்கவும், சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டவும் முடியும்!
இரட்டைக் குவளைக் கடைப்பிடிக்கப்படும் இடங்களில், அவைகளை அடித்துநொறுக்கி களத்திலேயே அதற்கு முடிவுகட்ட வேண்டும்; வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டால், தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி, கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்த வேண்டும்; சாதி மறுப்பு திருமணங்களைப் புரட்சிகர-ஜனநாயக இயக்கங்கள் ஊர்தோறும் அரசியல் விழாவாக நடத்த வேண்டும். ஆக, சாதி-தீண்டாமை ஒழிப்பை நாம் ஒரு சமூக இயக்கமாக மாற்ற வேண்டும்!
இதுதான் சாதி ஒழிப்பை நோக்கிய முதல் அடியாகவும் இருக்கும். இத்தகைய நமது போராட்டங்களின் மூலமே நிலவுகின்ற சட்டங்களைக்கூட நம்மால் நடைமுறையில் செயல்படுத்த முடியும்!
அமீர்
(பிப்ரவரி 2023 இதழ்)