மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை ஒடுக்கும் மோடி அரசு!

ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்ட இடத்தில் உள்ள கூடாரங்கள் பாய்கள் போன்ற அனைத்தையும் போலீசு அகற்றியுள்ளது.

0

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் துன்புறுத்தல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவரும், பாஜகவின் கைசர்கஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிப் போராடி வருகின்றனர். பூஷன் சரண் கைது செய்யப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் சார்பில் ஆதரவு பெருகிவருகிறது. விவசாயிகள், பெண்கள், ஜனநாயக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மே 28 அன்று புதிய பாராளுமன்றத்திற்கு வெளியே “மகிளா சம்மன் மகாபஞ்சாயத்து” என்ற போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களை டெல்லி ஜந்தர் மந்தர் வீதியில் வைத்தே போலீசு வலுக்கட்டாயமாகக் கைது செய்து அடைத்துவைத்துள்ளது.

மல்யுத்த வீரர் போகாட், “மல்யுத்த வீரர்களும் பெண்கள் உரிமை ஆர்வலர்களும் பல்வேறு ஜனநாயக சக்திகளும் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், எங்களைப் போலீசு முன்கூட்டியே வலுக்கட்டாயமாகக் கைது செய்துவிட்டது” என்றார்.

படிக்க : மல்யுத்த வீரர்களுக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை! || தோழர் மருது

ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்ட இடத்தில் உள்ள கூடாரங்கள், பாய்கள் போன்ற அனைத்தையும் போலீசு அகற்றியுள்ளது.

அண்டை மாநிலமான ஹரியானாவில் பல பெண் ஆதரவாளர்கள் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில் அவர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பாரதிய கிசான் யூனியன் (BKU)-ன் தலைவரான குர்னாம் சிங் சதுனி உட்பட பல விவசாயி சங்கத் தலைவர்கள் ஹரியானாவில் அவர்களது வீடுகளுக்குள்ளேயே போலீசு தடுத்துவைத்துள்ளது.

விவசாயிகளின் தலைவரான சவுத்ரி, “போலீசு எங்களைப் பேருந்தில் எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இப்போது, நாங்கள் குரு கிராம் நோக்கிச் செல்லும் சாலையில் இருக்கிறோம். நாங்கள் அமைதியாகப் போராட்டத்தில் பங்கேற்க விரும்பினோம்” என்று கூறினார்.

பாலம் காப் தலைவர் சுரேந்திர சோலங்கி கைது செய்யப்பட்டு வசந்த விஹார் போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். “பாலம் காப் தலைவர்களும் எல்லையிலிருந்து போலீசு துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு போலீசு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

மே 28 காலை போகாட் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட காணொளியில், “ஜனநாயகம் வெளிப்படையாகப் படுகொலை செய்யப்படுகிறது” என்றார். இந்தியில் பேசிய 28 வயதான மல்யுத்த வீரர் ஒருவர், “புதிய பாராளுமன்றம் தொடங்கும்போது தங்கள் உரிமைகளைக் கோரும் பெண்கள் எவ்வாறு அடக்கப்பட்டனர் என்பதைத் தேசம் நினைவில் வைத்திருக்கும்” என்று கூறினார்.

மாலிக் தனது ட்விட்டில், “எனது அனைத்து சர்வதேச சகோதரத்துவத்திற்கும் நமது பிரதமர் நமது புதிய பாராளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார். ஆனால் மறுபுறம், எங்களுக்கு ஆதரவளித்ததற்காக எங்கள் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.” என்றார். பின்னர் மாலிக்கும் கைதுசெய்யப்பட்டார்.

புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழா காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசு குவிக்கப்பட்டுள்ளது. டெல்லி பெருநகரின் மத்திய செயலகம் மற்றும் உத்யோக் பவன் நிலையங்களில் உள்ள அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் மூடப்பட்டன.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஐஷே கோஷ், பல்கலைக்கழகத்தின் வெளியேறும் வாயில்களுக்கு வெளியே எந்த மாணவர்களையும் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். “வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் பல மாணவர்களும் ஆசிரியர்களும் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா ஜனநாயகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது மிகவும் வேடிக்கையானது; அதேசமயம், குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் இதன் பார்வையில் ஒரு பொருட்டல்ல. அரசாங்கம்!”

பல்கலைக்கழகத்தின் வெளியே செல்ல மாணவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது போலீசு. வசந்த் குஞ்ச் போலீசு நிலையத்தில் பல மாணவர்களும் ஆசிரியர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா ஜனநாயகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது மிகவும் வேடிக்கையானது. அதேசமயம் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் அரசின் பார்வையில் ஒரு பொருட்டல்ல” என்று கூறினார்.

படிக்க : நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!

காஜிபூர், மற்றும் பதர்பூர் எல்லைகள் உட்பட எல்லையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசு நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

சிங்கு எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழைய முயன்ற 100 விவசாயிகளை ஹரியானா போலீசு கைது செய்துள்ளது.

மேற்கு டெல்லியில் அமைந்துள்ள திக்ரி எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கான வந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தின் போது இங்கே விவசாயிகள் தடுத்து வைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நாடாளுமன்றத்தின் திறப்பிற்காக டெல்லியின் போராடும் மல்யுத்த வீரர்கள் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்யப்பட்டது, டெல்லி எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டது, ஜே.என்.யூ மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டது ஆகியவை மோடி அரசின் ஜனநாயகம் எனும் கேலிக்கூத்தை (பாசிச அடக்குமுறையை) எடுத்துக்காட்டிவிட்டது.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க