வறுமை, பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை நாடு முழுக்க தலைவிரித்தாடுகின்றன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் சிறுதொழில் நசிவைச் சந்தித்த வணிகர்களும் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. சாதிவெறியும் மதவெறியும் கோலோச்சுகின்றன. இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், தலித்துகள் மீதான பாசிசத் தாக்குதல்கள், அம்மக்களை நான்காந்தரக் குடிமக்களாக மாற்றிவருகின்றன. அம்பானி-அதானி-வேதாந்தா வகையறா கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிதான் பாசிஸ்டுகளால் தேசத்தின் வளர்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது. நாட்டு மக்களின் சொத்துக்கள் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகின்றன.
நாட்டைப் பீடித்துள்ள இந்த அரசியல் சூழல், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இன்ன பிற உழைக்கும் மக்களையும் எப்படி போராடத் தூண்டுகிறதோ, அதைப் போலவே, நாட்டுப்பற்றுள்ள கலை-இலக்கியவாதிகளையும், அறிவுத்துறையினரையும் நிலவும் பாசிசச் சூழலுக்கு எதிராக கலகக் குரலை எழுப்ப வைக்கிறது.
000
காவி பாசிஸ்டுகளின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தில் இருந்துகொண்டே, யோகியையும் மோடியையும் தனது பாடல்கள் மூலம் அம்பலப்படுத்திவருகிறார் 25 வயதே நிரம்பிய இளம் பெண் பாடகி நேஹா சிங் ரத்தோர். பல்வேறு தேசிய இனங்களின் மொழிகளை அழித்து, ஒற்றை ஆதிக்க மொழியாக இந்தியை நிலைநிறுத்த காவிக் கும்பல் வேலைசெய்துகொண்டிருக்கையில், இவர் தன் தாய்மொழியான போஜ்பூரியில் பாடுவது காவிகளுக்கு மேலும் ஒரு அடி.
கல்லூரி படிக்கும்போது நண்பர்களுடன் பாடல்களை எழுதி பாடிப் பழகியவர், கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பாட ஆரம்பிக்கிறார். அதன்பிறகு, யோகி அரசை விமர்சித்தும் மக்கள் படும் துன்பங்களைப் பற்றியும் தொடர்ந்து பாடிவருகிறார்.
நேஹாவின் யூடியூப் சேனலுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் சந்தாதாரர்களாக உள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் டிவிட்டரிலும், முகநூல் பக்கத்திலும் இவரை பின் தொடர்கிறார்கள். படித்தப் பெண்ணாக இருந்தாலும், கிராமத்துப் பெண் போல, சேலையை தலையில் முக்காடிட்டுக் கொண்டு, இயல்பாக நையாண்டி தொனியில் இவர் பாடல்களை பாடுகிறார். அவரது பாடல்கள் மக்களை வெகுவாக ஈர்க்கின்றது. அனைவராலும் எளிதில் பாடக்கூடியதாகும் உள்ளது.
படிக்க: மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ
பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி, “அவர்கள் நல்ல காலம் பிறக்கும் என சத்தியம் செய்தார்கள். ஆனால் நமக்கு கிடைத்ததோ தோளில் மாட்டுவதற்கு ஒரு பையும் பிச்சை எடுக்க ஒரு திருவோடும்தான்” என்று இவர் பாடிய வரிகள் மிகப் பிரபலமானவை. மேலும், லக்கிம்பூரில் பா.ஜ.க. அமைச்சரின் மகனால் விவசாயிகள் ஈவிரக்கமின்றி கார் ஏற்றிக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும் இவர் பாடிய பாடல்கள் மக்களால் வெகுவாக கேட்கப்பட்டதாகும்.
யோகி அரசுக்கு எதிராக மட்டும் இதுவரை கிட்டதட்ட 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருடைய பாடல்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் யோகி அரசு, இவர் மீது ஒடுக்குமுறை செலுத்த ஆரம்பித்துள்ளது.
2023 பிப்ரவரி 16 ஆம் தேதி “யுபி மெய்ன் கா பா – 2” என்ற பாடலை வெளியிட்டார். அப்பாடலுக்கு எதிராக அவருக்கு போலீசு அனுப்பிய நோட்டீஸில், நேஹா சிங் ரத்தோர் தமது பாடல்கள் மூலம் வெறுப்பைத் தூண்டியதாகவும், சமூகத்தில் பகைமையையும் பதற்றத்தையும் உருவாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர் அப்படியென்ன சமூகத்தில் ‘வெறுப்பையும்’ ‘பதற்றத்தையும்’ தூண்டினார் என்பதை அப்பாடலின் சில வரிகளே உணர்த்தும். “ராமராஜ்ஜியம் என்ற பெயரில் வன்முறை அரங்கேறிவிட்டது. அடுத்து காசி, மதுராவில் இரத்தக்கறை படியப் போகிறது. சாமியார் முதலமைச்சரின் தொகுதியான கோரக்பூரில் இரத்தக்கறை படிந்துள்ளது. எதிர்த்துக் கேட்டால் காக்கிச் சட்டை போலீசு வந்து கஞ்சா கேசு போடுகிறது” என்று பாடியிருந்தார். தமது நிகழ்ச்சிரலை மக்கள் மத்தியில் துல்லியாக அம்பலப்படுத்திப் பாடியதுதான் காவிக் கும்பலுக்கு எரிச்சலைத் தந்திருக்கிறது.
நேஹா சிங் ரத்தோர் மீதான யோகி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டத்தைத் தெரிவித்துவருகின்றன. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா “உத்தரப்பிரதேச காவல்துறையின் நடவடிக்கை வெட்கக்கேடானது” என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், “ஒரு நாட்டுப்புற பாடகரின் குரலுக்கு பா.ஜ.க இவ்வளவு பயப்படுகிறதா?” எனக் கூறியுள்ளார்.
படிக்க: பாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்
மக்களிடத்தில் நேஹா சிங் ரத்தோருக்கு உள்ள ஆதரவாலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களாலும் நோட்டீஸ் அனுப்புவதைத் தவிர இதுவரை வேறெந்த தீவிர ஒடுக்குமுறைகளிலும் யோகி அரசு ஈடுபடவில்லை. அப்படியொரு நிலைக்குச் சென்றால், அவரது பாடல்கள் மேலும் மக்கள் ஆதரவைப் பெறும் என்று யோகி அரசு அஞ்சுகிறது.
சட்டப்படியான ஒடுக்குமுறை மட்டுமின்றி, இவருக்கு சமூகரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கும் காவிக் கும்பல் முயன்றது. வாரணாசி விஸ்வநாதர் கோயிலில் சில காவி வானரங்கள் இவரை கல்வீசி தாக்க முற்பட்டுள்ளனர்.
நண்பர்கள் எச்சரித்தபோதும், தாய், தந்தை அச்சப்படும்போதும், இவர் யோகி அரசை விமர்சிப்பதில் அச்சங்கொள்ளவில்லை. யோகி அரசு எத்தகைய ஒடுக்குமுறை செலுத்தினாலும், மக்கள்படும் துன்பங்களைப் பற்றியும் யோகி அரசின் அயோக்கியத்தனங்களை விமர்சித்தும் தொடர்ந்து பாடுவதில் உறுதியாக உள்ளார்.
அண்மையில், 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மோடி அரசை விமர்சித்து ஒரு பாடல் பாடியுள்ளார். அதில் அதானி, நீரவ் மோடி, லலித் மோடி ஆகிய கொள்ளையர்களை அம்பலப்படுத்தியுள்ளார். அதுவும் மக்கள் மத்தியில் வரவேற்புக்குள்ளாகி உள்ளது.
000
மகாராஷ்டிராவிலும் இரு ராப் பாடகர்கள் காவிக் கும்பலை விமர்சித்து பாடல்களை பாடி வருகின்றனர். வெளிப்படையாக பா.ஜ.க. தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், சூசகமாக புரிந்துகொள்ளும்படி பாடிவருகின்றனர். இவர்களையும் யூடியூப் சேனலில் லட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்கிறார்கள். மகாராஷ்டிரா போலீசும் இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து ஒடுக்க முயற்சிக்கிறது.
ராஜ் முங்காசே என்பவர், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது அணியினரை விமர்சித்து பாடுகிறார். “50 கோடியுடன் திருடர்கள் வந்திருக்கிறார்கள் பாருங்கள்… பாருங்கள், திருடர்கள் நன்றாக இருக்கிறார்கள்!” என்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
உமேஷ் காடே, அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட இலாபத்திற்காக வறுமையில் வாடும் மக்களை புறக்கணிப்பதாக விமர்சித்துப் பாடியுள்ளார். “பொதுமக்களை நிர்வாணமாக்கி விட்டீர்கள்” என்ற வரிகள் மூலம் அரசியல்வாதிகள் தனது குடிமக்களைப் பற்றி கவலைப்படாததை தாக்குகிறார்.
இவர்கள் மட்டுமல்ல, இவர்களைப் போன்ற இன்னும் எண்ணற்ற நபர்கள் அரசை விமர்சித்து தங்களுக்கு தெரிந்த வடிவங்களில் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கலை இலக்கியவாதிகளும், அறிவுத்துறையினரும் அரசை விமர்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துள்ளது. மக்களின் அவலநிலையும் பாசிஸ்டுகளின் நடவடிக்கையும்தான், இவர்களின் செயல்பாடுகளுக்கு அடிப்படை.
படிக்க: யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் பேயாட்சியில் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பல்களுக்கான புரோக்கர் வேலையையே அரசாட்சியாக செய்துவருகிறார்கள். இதைக் கண்டு சமூக அக்கறையுள்ள அறிவித்துறையினர் கொதித்தெழுகின்றனர். தங்களுக்கு தெரிந்த வடிவங்களில் அரசை விமர்சித்தும், மக்களின் அவலநிலையைப் பற்றியும் தங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர்.
உதாரணத்திற்கு, பத்திரிகையாளரான முகமது ஜூபைர் தனது ஆல்ட் நீயூஸ் இணையதளத்தின் மூலம் சங்கப் பரிவாரக் கும்பல்களின் போலிச் செய்திகளை அம்பலப்படுத்தி வருகிறார். “ஹிந்துத்துவா வாட்ச்” (Hindutva Watch) என்ற இணையதளம், காவி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அம்பலப்படுத்தி வருகிறது. தி வயர், ஸ்காரல் போன்ற இணையதளங்களும் மோடி அரசையும் காவிக் கும்பலின் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்திவருகின்றன. சமூக அக்கறை கொண்ட பல பத்திரிகையாளர்கள் கார்ப்பரேட் ஊடகங்களைவிட்டு வெளியேறி சுதந்திர ஊடகங்களை தொடங்கி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வினரை விமர்சித்துவருகின்றனர்.
இவர்களைப் போன்றோரின் வரிசையில்தான் நேஹா சிங் ரத்தோர் இந்துமதவெறியர்களின் கோட்டையான உத்தரப்பிரதேசத்தில் பயப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை மக்களும் ஆதரிக்கிறார்கள். இது, நாம் மக்கள் படும் துன்பங்களை பற்றி பேசும்போது, அவர்களுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தும்போது, மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆனால், உத்தரப்பிரதேசம் போன்ற காவிகள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசதான் ஆள் இல்லை.
காவி பாசிஸ்டுகள் தங்கள் கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவதை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் தீவிரமாகிவருகிறது. பாசிஸ்டுகள் ஏறித்தாக்கி வரும் இச்சூழலில் நாம் அவர்களைக் கண்டு அஞ்சக்கூடாது. பாசிசக் கொடுமைகளை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கக்கூடாது. பாசிசத்திற்கு எதிராக நாம் ஏதாவது ஒரு வடிவங்களில் வினையாற்ற வேண்டும். அது கடுகளவு சிறிதாயினும் சிறந்ததுதான். இதுதான் நேஹா சிங் ரத்தோர் போன்ற கலைஞர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.
சிவராமன்