கடந்த 12-04-2023 ஆம் தேதி பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள லூப் சாலையை மறித்து நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்ற உத்தரவிட்டதே அதற்கு காரணம். லூப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு தீர்ப்பும் வழங்கியது.
லூப் சாலையில் மீனவர்களின் கடைகள் இருப்பது குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, “இந்த மீனவர்களை பொதுச் சாலையில் குத்த வைத்து உட்கார ஏன் அனுமதிக்கிறீர்கள்? அவர்கள் அழகான இடத்தைக் கெடுக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு என்ன வேலை? அவர்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு அனுப்புங்கள்” என்று ஆண்டை மனப்பான்மையுடன் கட்டளையிட்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலாஜி மற்றும் சுந்தர் தலைமையிலான அமர்வு, “பொதுச் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை இலக்கை மாநகராட்சி எப்படி அடைய முடியும்?” “சிங்கார சென்னை என்று பேசுகிறீர்கள். ஆனால் கடற்கரை அருகே உள்ள சென்னையின் மிக அழகிய சாலை வேறு விதமாக இருக்கிறது” என்று கூறினர்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீர்ப்பு வந்த அடுத்த நாளே துரிதமாக செயல்பட ஆரம்பித்துவிட்டனர். லூப் சாலையோரத்தில் உள்ள மீன் கடைகள், ஐஸ் பெட்டிகள், வலைகள் மற்றும் மேசைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
படிக்க: 1985 சென்னை துப்பாக்கிச்சூடு | வழக்குரைஞர் லிங்கன் நேர்காணல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விற்பனைக்காக வைத்திருந்த மீன்கள், நண்டுகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுநாள் மக்களின் போராட்டம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்தது. படகுகளை வைத்து சாலைகளை மறித்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையின் நடுவே கூடாரம் அமைத்து முழக்கமிட்டு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி ஒருவர் “மெரினாவை அழகுபடுத்துறோம்னு கட்டுமரங்களை அங்கே நிறுத்தக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. இப்போ நொச்சிக்குப்பம் பகுதியை ஆக்கிரமிக்கிறோம்ன்னு எங்க பொழப்புல மண்ணள்ளிப் போடுறாங்க. இன்னையோட அஞ்சு நாள் ஆச்சு. கடை போடவிடலை. தினக்கூலி நாங்க. இப்படியே போச்சுன்னா பட்டினியாகத்தான் கிடக்கனும்” என வருந்தினார்.
மக்களின் போராட்டங்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் போலீஸ் உதவியுடன் கடைகளை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். “தனியாரின் பெரிய பெரிய ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இதே வேகத்தில் இடிக்குமா அரசு?” என மிக எளிதான கேள்விகளால் மக்கள் அதிகாரவர்க்கத்தை எதிர்கொண்டனர். மேலும், லூப் சாலைதான் மீனவர்களின் பாரம்பரிய இடத்தை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தினர். சாலையை விரிவாக்கம் செய்யக்கூடாது, நடைபாதைகள் அமைக்கக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை மீறி போக்குவரத்து வசதிக்காக என்ற பெயரில் மாநகராட்சி சாலையை விரிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தனர்.
லூப் சாலை போடப்பட்டுள்ள இடம் மீனவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த இடமாகும். சாலை அமைக்கும்போதே மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆனால் நீங்கள் நடைபாதைகளில் கடைகளை அமைத்துக்கொள்ளலாம் என நயவஞ்சமாக மீனவ மக்களை ஏமாற்றி இடங்களை பறித்துதான் அரசு அப்போது சாலை அமைத்தது. மேலும் லூப் சாலை என்பது பொதுப் போக்குவரத்திற்கான சாலை அல்ல. மீனவர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சாலைதான். சாந்தோம் சாலையில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக லூப் சாலையில் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அம்மக்களின் வாழ்வாதாரத்திற்கான கடைகளை ‘ஆக்கிரமிப்பு’ என்று கூறி அப்புறப்படுத்துகின்றனர்.
மீனவ மக்களின் தொடர் போராட்டங்களாலும், ஜனநாயக சக்திகளின் ஆதரவாலும் மீன் சந்தை கட்டப்படும் வரை, லூப் சாலையின் மேற்கு பக்கத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகளை அமைத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்குப் பிறகு மீனவ மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டமும் பின்வாங்கப்பட்டுள்ளது.
படிக்க: மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !
“சிங்காரச் சென்னை” என்ற பெயரில் உழைக்கும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, வாழ்வாதாரங்கள் அழிக்கப்படும்போது, இதுபோன்ற மக்கள் போராட்டங்கள் வெடித்துக்கொண்டுதான் இருக்கும்.
நீதிபதிகள், அதிகாரிகள் போன்ற மேட்டுக்குடி வர்க்கத்தின் பார்வையில் உழைக்கும் மீனவ மக்கள் சென்னையை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்களாகத் தெரிகிறார்கள். அம்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சாலையோரத்தில் வைத்திருக்கும் கடைகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சலானவையாகத் தெரிகிறது. மீன் மற்றும் கருவாடுகளின் வாசனை கூட அவர்களுக்கு அறுவருக்கத்தக்கதாகத் தெரிகிறது.
இது தீண்டாமையின் நவீன வடிவமாகும். அதிகார வர்க்கத்திற்கே உள்ள வர்க்கத் திமிராகும். “சிங்காரச் சென்னை” என்ற அரசின் திட்டமும் சரி, அதிகாரவர்க்கம் மற்றும் நீதிபதிகளின் பார்வையும் சரி, இந்நகரம் உழைக்கும் மக்களுக்கானதல்ல, மேட்டுக்குடிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குமானது என்பதில் ஒன்றாக உள்ளது.
இவர்கள் கூறும் சிங்காரச் சென்னையில், நகரத்தை அழகுப்படுத்துவது என்ற பெயரில் பூங்காக்கள், நீரூற்றுகள், அருங்காட்சியங்களுக்கு இடம் உண்டு. உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்ற பெயரில் பாலங்கள், சுரங்கப் பாதைகள், மெட்ரோ ரயில்களுக்கு இடம் உண்டு. ஆனால், இக்கட்டுமானங்களை எல்லாம் இரத்தத்தை வியர்வையாக சிந்தி கட்டியெழுப்பும் உழைக்கும் மக்களுக்கு இடமில்லை.
கூவம், அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் உழைக்கும் மக்கள் ‘ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் அகற்றப்பட்டு, கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற புறநகர் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்படுவதும் இதன் காரணமாகத்தான்.
ஆற்றின் பாதைகள், கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிற்கும் கட்டிடங்கள் இவர்களின் கண்களுக்கு ஆக்கிரமிப்பாக தெரிவதில்லை. மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் முதல் ராமாபுரம் மியாட் மருத்துவமனை வரை பல தனியார் கல்லூரிகளும், மருத்துவமனைகளும், ஷாப்பிங் மால்களும் ஆற்றின் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டவைதான். ஆனால் இவைகளை அகற்றக்கோரி நீதிபதிகள் யாரும் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடுப்பதில்லை. இதுதான் அவர்களுடைய வர்க்கப் பாசத்தின் வெளிப்பாடு!
குப்பு